Header Ads



ராஜபக்ஸ கம்பனிக்கான ஒரு எச்சரிக்கை..!



(TM) பிரதம நீதியரசர் விடயத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழு எடுத்த தீர்மானத்தை நாடாளுமன்றம் அங்கீகரிக்குமாயின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனது பதவியை இழப்பார் என ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கமும் சட்டத்தரணிகள் சங்கமும் கூறியுள்ளன. 

உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்குமிடத்து அதை புறக்கணித்து நாடாளுமன்றம் மேற்கொண்டு நடவடிக்கையெடுத்து பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

 இந்நிலையில், பிரதம நீதியரசரை பதவி நீக்கும் செயன்முறையை நாடாளுமன்றம் தொடருமாயின் நீதித்துறை ஸ்தம்பிதம் அடையுமென ஒரே மேடையில் தோன்றிய மேற்படி இரண்டு அமைப்புக்களும் எச்சரிக்கை விடுத்தன. 

பிரதம நீதியரசரை பதவி நீக்கும் முயற்சியை நாடாளுமன்றம் தொடருமாயின் சபாநாயகர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை இழைத்தவராக பதவியழப்பார் என ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளரான சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தெரிவித்தார். 

மேலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றம் உதாசீனம் செய்யுமாயின் நாளடைவில் நீதித்துறை செயலிழந்துவிடும். நீதித்துறை இல்லாதபோது குற்றமிழைத்தவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். இதனால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார். 

நீதித்துறையினால் விடுக்கப்பட்ட தடையுத்தரவை அரசாங்கம் உதாசீனம் செய்யுமாயின் இந்த நிலை உருவாகும் என்று கூறிய சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்தவர் கே.எஸ்.ரத்னவேல், இவை கிளர்ச்சியில் தான் முடியும் எனவும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.