Header Ads



அரசாங்கத்திற்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்த்தின் மற்றுமொரு நெத்தியடி



(Tm) சபாநாயகரால் நாடாளுமன்றத்தின் நிலையியற்கட்டளை 78 (ஏ)க்கு அமைய அமைக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அறிக்கையை வலுவற்றதாக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (07-10-2013)  ரீட் ஆணையொன்றைப் பிறப்பித்தது. 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஸ்ரீஸ்கந்தராஜா, ஏ.டபிள்யூ.ஏ.சலாம் மற்றும் அனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே மேற்கண்டவாறு ஆணை பிறப்பித்தது. 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுத்தொடர்பில் நடைபெறவிருக்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்கு உதவிபுரிவதற்காக இன்று 7ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு வருமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  கடந்த மூன்றாம் திகதி அறிவித்தல் அனுப்பியிருந்தது. அதன்பிரகாரம், சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தார். 

ஒரு நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையின் செயன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்துள்ள வியாக்கியானத்தை தொடர்ந்து இந்த விடயத்தின் அவசர தன்மை பற்றி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட கருத்தினை தொடர்ந்தே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுமம் வாதப்பிரதிவாதஙகளை இன்றுவரை ஒத்திவைத்திருந்தது. 

நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்த எதிர்க்கட்சிகளின் அங்கத்தவர்கள் நான்கு பேரும் அந்த குழுவிலிருந்து வெளிநடப்பு செய்ததையடுத்து அந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அரசாங்க உறுப்பினர்கள் ஏழுபேர் மட்டுமே செயற்படுவது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் வலுவற்றதாகும் என மனுதாரரான பிரதம நீதியரசர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்றைய ரீட் ஆணையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பான விவகாரத்தை ஆராயும் நியாயாதிக்கம் தனக்கு இருக்கின்றது என்றும் இந்த நியாயாதிக்க அதிகாரத்தை அரசாங்கத்தின் ஏனைய அங்கங்களான சட்டத்துறையோ நிறைவேற்று அதிகாரத்துறையோ பறிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. சபாஷ் சரியான போட்டி....

    ReplyDelete

Powered by Blogger.