சவூதி அரேபியாவில் மதுபானம் தயாரித்த இந்தியர்கள் கைது - 50 சவுக்கடி
இஸ்லாமிய சட்டங்களின்படி ஆட்சி நடத்தப்படும் சவுதி அரேபியாவில் மது, சூது, விபச்சாரம் போன்ற செயல்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட குற்றச் செயல்களாக கருதப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் ஜெட்டா பகுதியில் கள்ளத்தனமாக மது தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வாடிக்கையாளர் போல் மது கிடைப்பதாக கூறப்படும் இடத்திற்கு ரகசிய போலீசார் சென்றனர். அங்கிருந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்டு மது பாட்டிலை வழங்கிய போது, மறைந்திருந்த போலீசார், பாய்ந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளத்தனமாக மது தயாரிக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரு பெண்ணின் துணையுடன் இந்தியர் ஒருவர் மது தயாரித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 4 பீப்பாய் மதுவை கைப்பற்றிய போலீசார், கள்ள மது தயாரித்து விற்றதாக 2 இந்தியர்கள் மீதும் குற்றம்சாட்டி ஜெட்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்ட 2 இந்தியர்களுக்கும் தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், ஒரு வார கால இடைவெளியில் இருவருக்கும் தலா 50 சவுக்கடி வழங்கவும், சிறை தண்டனை காலம் முடிந்ததும் உடனடியாக சவுதி அரேபியாவை விட்டு இருவரையும் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment