வீட்டிற்குள் புகுந்து 5 பேரை சுட்டுக்கொன்ற 15 வயது சிறுவன் - அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. சமீபத்தில் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூடவுனில் தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அது அமெரிக்காவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதை அதிபர் ஒபாமாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் பரபரப்பு அடங்குவதற்குள் அமெரிக்காவில் மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. நியூமெக்சிகோ மாகாணத்தில் பெர்னால்லியோ பகுதியில் உள்ள அல்புகுயர்கு என்ற இடத்தில் ஒரு வீட்டிற்குள் 15 வயது சிறுவன் புகுந்தான்.
திடீரென அவன் தான் வைத்திருந்த செமி தானியங்கி ராணுவ துப்பாக்கியால் வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டான். அதில் 5 பேர் அதே இடத்தில் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். பலியானவர்களில் 3 பேர் குழந்தைகள்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர். ஆனால், அவனது பெயர் விவரம் எதுவும் வெளியிடவில்லை. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
எதற்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருவதாக பெர்னால்லியோ நகர ஷெரீப் ஆரோன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
Post a Comment