Header Ads



அல்ஜீரியாவில் முஸ்லிம் போராளிகளின் 4 நாள் முற்றுகை முடிவுக்கு வந்தது (வீடியோ)




(TN) அல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளால் வெளிநாட்டு பிணைக் கைதிகளுடன் முற்றுகையிடப்பட்ட எரிவாயு ஆலை நான்கு தின போராட்டத்தின் பின் மீட்கப்பட்டது. எனினும் அல்ஜீரிய இராணுவத்தின் மீட்பு நடவடிக்கையின் போது ஆயுததாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளும் கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு எதிரான கடைசி கட்ட இராணுவ நடவடிக்கையின் போது 7 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி முற்றுகை நடவடிக்கையால் குறைந்தது 23 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதோடு 32 ஆயுததாரிகள் பலியாயினர். இதில் 5 பிரிட்டன் நாட்டவர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுவதோடு மேலும் 5 நோர்வே நாட்டவர்களை காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வன்முறையை தீவிரவாத செயல் என விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீவிரவாதத்தை ஒடுக்க பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எதிரான அல்ஜீரிய இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே இது தேவையான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறியுள்ளார். அத்துடன் இந்த வன்முறைகளால் மேலும் பிரிட்டன் பிரஜைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார்.

தென் கிழக்கு அல்ஜீரியாவில் 1,300 கிலோ மீற்றருக்கு அப்பாலிருக்கும் அமனாஸ் நகரில் உள்ள எரிவாயு ஆலையை ஆயுததாரிகள் கடந்த நான்கு தினங்களாக முற்றுகை இட்டிருந்தனர். இந்த ஆலை நோர்வே, பிரிட்டன் எண்ணெய் நிறுவனங்களுடன் அல்ஜீரிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. இந்த எரிவாயு ஆலையை ஆயுத தாரிகள் கடந்த புதன்கிழமை முற்றுகையிட்டனர். இதன் போது பல வெளிநாட்டு தொழிலாளர்களும் ஆயுததாரிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதனையடுத்து அல்ஜீரிய இராணுவம் இந்த ஆலையை சுற்றிவளைத்தது.

இதில் கடந்த சனிக்கிழமை அல்ஜீரிய இராணுவம் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர எரிவாயு ஆலைக்குள் ஊடுருவினர். இதன் போது அங்கிருந்த ஆயுததாரிகள் தம்மிடம் இறுதியாக பிணைக்கதிகளாக இருந்த 7 பேரையும் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக எரிவாயு ஆலையில் பணிபுரிந்த 685 அல்ஜீரிய தொழிலாளர் களும் 132 வெளிநாட்டு பணியாளர்களில் 107 பேரும் விடுவிக்கப்பட்டதாக அல்ஜீரிய உள்துறை அமைச்சு கூறியதாக அந்நாட்டு செய்திச் சேவையான ஏ. பி. எஸ். கூறியுள்ளது.

இதில் பிணைக்கைதிகளாக பிடிபட்டோருள் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு கொல்லப்பட்டோர் எந்தெந்த நாட்டவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் 17 ஜப்பான் நாட்டவர்களை காணவில்லை என அந்நாட்டு பிரதமர் ஷின்கோ அபெ கூறியுள்ளார். பிரிட்டன் எண்ணெய் நிறுவனம் தமது 18 பணியாளர்களில் 14 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் எஞ்சிய நான்கு பேர் தொடர்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நோர்வே எண்ணெய் நிறுவனம் தமது 5 பணியாளர்களைத் தொடர்ந்தும் காணவில்லை என அறிவித்துள்ளது. 

இந்நிலையில் எரிவாயு ஆலைக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டு மற்றும் நிலக்கண்ணிகளை அகற்றும் பணியில் இராணுவம் ஈடுபட்டிருப்பதாக அல்ஜீரிய தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஆயுததாரிகளிடம் இருந்து இரு இயந்திர துப்பாக்கிகள், 21 ரைபிள்கள், கைக் கண்டுகள், எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த சில வெளிநாட்டு பிணைக் கைதிகள் கூறுகையில், தங்கள் கழுத்துக்களில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டதாகத் தெரிவித்தனர். தப்பி வந்த அல்ஜீரியர் ஒருவர் கூறுகையில் கடத்தல்காரர்கள் அனைத்துப் பிணைக்கைதிகளையும் எரிவாயு நிறுவனத்தின் உணவகப் பகுதியில் வைத்ததாகவும் அங்கிருந்து யாரும் தப்ப முடியாதபடி வெடி குண்டுகளை அப்பகுதியைச் சுற்றிலும் கட்டிவிட்டதாகவும் தெரிவித்தார். 

இராணுவத்தின் மீட்பு முயற்சியில் 34 பிணைக்கைதிகள் இறந்ததாக கடத்தல்காரர்கள் குற்றம் சாட்டினர். எனினும் இந்த எண்ணிக்கை கற்பனையானது என்று தெரிவித்த இராணுவம் 30க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களில் 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. கடந்த புதன்கிழமை வெளிநாட்டு தொழிலா ளர்களை ஏற்றிச்சென்ற இரு பஸ்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னரே ஆயுததாரிகள் எரிவாயு ஆலையை முற்றுகையிட்டனர். இந்த தாக்குதலின் போது பிரிட்டன், அல்ஜீரிய நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த முற்றுகையில் ஈடுபட்ட ஆயுதக் குழுவின் தலைவராக நைகர் நாட்டின் முன்னாள் போராளி அப்துல் ரஹ்மான் அல் நிகாரி செயற்படுவதாக மொரித்தானிய செய்திச் சேவையான ஏ. என். ஐ. தெரிவித்துள்ளது.

மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர் களுக்கு எதிரான பிரான்ஸின் இராணுவ தலையீட்டை நிறுத்த வேண்டும் என்பதே ஆயுததாரிகளின் பிரதான நிபந்தனையாகும்.



No comments

Powered by Blogger.