சவூதி அரேபியாவில் மேலும் 4 இலங்கையர்களுக்கு மரண தண்டனை அபாயம்..!
சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ரஞ்சன் நாமநாயக்க பிபிசி யிடம் தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள் பெற்றோர்கள் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார்.
புத்தர் சிலையை வைத்து தொழுதார் என்று ஒருவரும், பைபிளை வைத்திருந்தாக மற்றொருவரும் சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ் புக்கில் பெற்றதான குற்றச்சாட்டில் மற்றொருவரும், மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறை வாங்கியதாக ஒரு பெண்மணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து 18 லட்சம் பேர் வெளிநாட்டில், அதிலும் குறிப்பாக மத்தியகிழக்கு நாடுகளில் பணிப் பெண்களாக வேலை பார்த்து அனுப்பும் பணமே இப்போது நாட்டுக்கு பெரும் வருவாயாக உள்ளது என்றும், அதன் காரணமாகவே அரசு இந்த விஷயத்தில் கவலை கொள்வதில்லை எனவும் அவர் கூறுகிறார்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மூலம் இலங்கைக்கு ஆண்டொன்றுக்கு கிடைக்கும் ஆறு பில்லியன் டாலர்களை, பத்து பில்லியன் டாலர்களாக உயர்த்த ஜனாதிபதி பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை ஒரு ஏழை நாடு என்பதாலும் பலர் வறுமை காரணமாக வெளிநாட்டு பணிப் பெண்கள் வேலையை எதிர்பார்ப்பதாலும், சவுதி அரேபியா இலங்கையை மதிப்பதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார்.
சவுதியில் வீட்டு வேலைக்கு பெண்களை அனுப்புவதில்லை என்று முடிவெடுத்த இந்தோனீஷிய அதிபர் போன்று முடிவெடுக்க இலங்கை ஜனாதிபதி முதுகெலும்பற்றவர் எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
Post a Comment