Header Ads



தென்கிழக்கின் முதல் விஞ்ஞானப் பட்டதாரி எம்.ஏ.எம்.சம்சுதீனின் 40வது நினைவுநாள்


தகவல் : எஸ்.நியாஸ் (மகன்)
தொகுப்பு :எஸ்.எல். மன்சூர்; 

(தென்கிழக்கின் பிரபல கல்விமான் அட்டாளைச்சேனை மர்ஹூம் எம்.ஏ.எம். சம்சுதீன் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த  40ஆவது நினைவுதினம் 03.01.2013 அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு எழுதப்பட்ட நினைவுக்கட்டுரை)

பிரபல கல்விமானும், தென் கிழக்கிலங்கையின் முதல் விஞ்ஞானப் பட்டதாரியுமான அல்ஹாஜ் எம்.ஏ. சம்சுதீன் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் நாற்பது நாட்கள் பூர்த்தியாகின்றன.

இலங்கையின் முஸ்லிம் கல்விமான்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடம்பிடித்த அல்ஹாஜ் எம். ஏ. சம்சுதீன் அவர்கள் 25.11.2012 கொழும்பில் காலமாகி அன்னாரின் ஜனாஸா அவரின் பிறப்பிடமான அட்டாளைச்சேனையில் மறுதினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. கல்வித்துறைச் சேவையில் நாற்பது வருடங்கள் தன்னை அர்ப்பணித்து கல்விப்பணிப்பாளராக ஓய்வு பெற்ற இவர் தனது 82ஆவது வயதில் இறையடி எய்தினார்.

இவர், அட்டாளைச்சேனையில் ”அக்கிராசனார்” என்று புகழ் பூத்து விளங்கிய முகமது அலியாரின் சிரேஷ்ட புதல்வராக 1931இல் இவ்வவனியில் பிறந்தார். ஆரம்பக்கல்வியைத் தனது சொந்த ஊரில் உள்ள அல்முனீரா வித்தியாலயத்திலும் அதன் பின்பு தனது ஊரில் இருந்து மிகத்தொலைவில் உள்ள மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும்,பின்னர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் இவர் ஆங்கில மொழிமூலம் மேற்கொண்டார். அதன் பின்னர் தனது உயர் கல்வியை கொழும்பில் இருந்த அலெக்ஸாண்ட்ரா கல்லூரியிலும் பயின்றார்.

மர்ஹூம் சம்சுதீன் அவர்கள் முதன் முதலாக தனது சேவையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு அறிவிப்பாளராகவே ஆரம்பித்தார். ஆனால் பின்பு கல்விச்சேவையில் கொண்ட நாட்டத்தினாலும் அக்காலத்தில் ஆங்கில மொழி கற்பிக்க ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்பட்டதனாலும் தன் பிறந்த ஊரில் உள்ள சாதனா பாடசாலையில் (இன்றைய மத்திய கல்லூரி) ஆங்கில ஆசிரியராக சிறிது காலம் (1953-1955) சேவை புரிந்தார். அன்று, எஸ்.எஸ்.சி சாதரணதரம் சித்தியடைந்திருந்தாலே அது ஒரு பெரிய தகைமையாகப் போற்றப்பட்ட காலமாக இருந்தது. இருப்பினும் எதிர்காலத்தின் கல்வியின் அவசியத்தை நன்கு புரிந்து கொண்ட இவரின் தந்தை அக்கிராசனார், தனது மகனின் பட்டப்படிப்பிற்காக இவரை கடல் கடந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அத்துடன் நின்றுவிடாமல் இவரைத் தொடர்ந்து தனது மற்றய இரு பிள்ளைகளான ஜலால்டீன் (முன்னாள் பொத்துவில் முதல்வர்) சாபிடீன் (ஒய்வுபெற்ற மாகாண கல்விப் பணிப்பாளர்) ஆகியோரையும் உயர் கல்வி கற்பதற்காக இந்தியாவிற்கு அனுப்பிவைத்தார் இவரின் தந்தையான அக்கிராசனார் எனும்  படிக்காத மேதை. 

இந்தியாவில் பிரபல கல்லூரியான கிரிஸ்டியன் கல்லூரியில் சம்சுதீன் அவர்கள் தனது விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்து, விலங்கியலில் சிறப்புச் சித்தியைப் பெற்று ஒரு விஞ்ஞானப் பட்டத்தாரியாகத் தனது நாடு திரும்பினார். அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலே முதல் பட்டதாரி என்ற காரணத்தினால் அவரின் வருகையை அவ்வூர் மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினர். அன்றிலிருந்து இன்றுவரை இப்பிரதேச மக்களால் பி.எஸ்.ஸி. என்றே மரியாதையாக அழைக்கப்பட்டார்.

விஞ்ஞானப் பட்டதாரிகள் அரிதாகக் காணப்பட்ட அக்காலகட்டத்தில், நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களை செல்வாக்குள்ள பாடசாலைகள் உள்வாங்கிக் கொண்டன. விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றுக்கொண்ட சம்சுதீன் அவர்கள் மீண்டும் தனது கற்பித்தற் பணியைத் தொடரலானார். தன்னுடன் கூடப்படித்த தனது நண்பர் மூதூர் மஜீட் அவர்கள் ( கிழக்கு மாகாண முதலமைச்சரின் தந்தை) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  காரணத்தினால் அவரின் அழைப்பை ஏற்று மூதூர் மகாவித்தியாலயத்தில் 1959, 1960 ஆண்டுகளில் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக்க் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து அவரின் சிறந்த கற்பித்தல், நிர்வாகத்திறன் காரணமாக அதிபராக நியமனம் பெற்று ஏறாவூர் அல் அலிகார் மகாவித்தியாலயத்தில் 1961- 1963 வரையான காலப்பகுதிகளில் கடமையாற்றினார். சிறந்த நிர்வாகத்திறனால் முத்திரை பதித்த சம்சுதீன் அவர்கள் மூதூர், ஏறாவூர் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டார். இன்றும் இவரது நினைவுகள் இப்பாடசாலைகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதனைத் தொடர்ந்து 1964இல் இருந்து 1968ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் அக்கரைப்பற்று மகாவித்தியாலயம் ( இன்றைய மத்திய கல்லூரி), கல்முனை சாஹிறாக் கல்லூரி, மாத்தளை பி. எம். எஸ் கல்லூரி, வந்தாறுமூலை மகாவித்தியாலயம், அட்டாளைச்சேனை மகாவித்தியாலயம் (இன்றைய மத்திய கல்லூரி) ஆகிய பாடசாலைகளில் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார். அட்டாளைச்சேனை மகாவித்தியாலயம் அன்று ”சாதனா பாடசாலை” என்ற பெயர் கொண்ட ஒரு சாதாரண பாடசாலையாகவே விளங்கியது. இவரின் முயற்சியினாலே அப்பாடசாலை மகாவித்தியாலயம் ஆக தரம் உயர்த்தப்பட்டதுடன் அதன் முதல் அதிபராக பதவி வகித்த பெருமையும் மர்ஹூம் சம்சுடீன் அவர்களையே சாரும். 

இதனைத்தொடர்ந்து சிலோன் யூனிவர்சிட்டியில் கல்வியியல் டிப்ளோமா பட்டம் பெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உதவி அதிபராக  1972இல் பதவி வகித்தபின்னர் வசாவிளான் (பலாலி) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்தர விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் விஞ்ஞானப் பாடம் தவிர்ந்த ஏனைய பாடங்களான கல்வி, உளவியல் பாடங்களையும் திறம்படக் கற்பித்த காரணத்தினால் இவரின் ஆசிரிய மாணாக்கர்கள் இவரது சிறப்பான கற்பித்தற் திறனை இன்றும் நினைவு கூர்வர். யாழ் மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்தமையால் தனது பிள்ளைகளின் கல்வித்தேவையை உணர்ந்த இவர் யாழில் சிறந்து விளங்கிய தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் தனது பிள்ளைகளைக் கற்பிக்க வைத்ததன் மூலம் பிற்காலத்தில் டாக்டராகவும், சட்டமுதுமானியாகவும், பொறியியலாளராகவும் அவர்கள் வருவதற்க்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

அதனைத் தொடர்ந்து 1976இல் மட்டக்களப்புக் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், அதன் பின்னர் 1978இலிருந்து 1982 வரையான காலப்பகுதியில்  அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றினார். பொதுச்சேவையிலும் அதிக நாட்டம் கொண்ட காரணத்தினால் அக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தனது சகோதரரான டாக்டர் எம். ஏ. எம். ஜலால்டீன் ( முன்னாள் பொத்துவில் முதல்வர்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் விசேட ஆணையாளராகவும் கடமையாற்றினார். பல பொதுச் சேவைகளை மேற்கொண்டிருப்பினும் இவரின் சேவையின் மைல் கல்லாக அட்டாளைச்சேனையின் பொது மையவாடி  காணப்படுவது குறிப்பிடத்தக்க தொன்றாகும். 1982இல் மீண்டும் மட்டக்களப்புக் கல்விப் பிராந்தியத்திற்கு பிரதம கல்வியதிகாரியாக நியமனம் பெற்றுச்சென்ற இவர் ஓய்வுறும் நிலையில் கல்வி நிர்வாகச்சேவையின் தரம் 1 க்கு பதவி உயர்த்தப்பட்டு மேலதிகக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி இப்பிராந்தியத்தின் கல்வித் துறைக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

இவரிடம் கல்வி கற்ற பலர் இன்று இலங்கையில் பிரபல அரசியல் பிரமுகர்களாகவும், அதிபர்களாகவும், தொழில் வல்லுனர்களாகவும், உலகின் நாலாபாகங்களிலும் உயர் பதவிகள் வகிப்பவர்களாகவும் காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறையில் முத்திரை பதித்தது மட்டுமன்றி சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்கள் சதுரங்கம், மேசைப்பந்து, கரப்பந்து ஆகிய விளையாட்டுக்களில் தலைசிறந்த வீரராகவும் காணப்பட்டார்.  1960 காலகட்டத்தில் கிழக்குப்பிராந்தியத்திலே அனைத்து சிறந்த விளயாட்டு வீரர்களையும் உள்ளடக்கிய ஒரு ஊராக அட்டாளைச்சேனை காணப்பட்டது. அன்றிருந்த அட்டாளைச்சேனையின் கரப்பந்தாட்டக் குழுவிற்குத் தலைமை வகித்த மர்ஹூம் சம்சுதீன் அவர்கள் பல வெற்றிகளைக் குவித்ததன் மூலம் பிராந்தியத்தின் சம்பியன்களின் சம்பியனாக காணப்பட்டார். அதுபோன்றே யாழிலும், மட்டக்களப்பிலும் கடமையாற்றிய காலங்களில் சதுரங்கம், மேசைப்பந்து ஆகிய விளையாட்டுக்களில் யாழ், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ   க்களின் தொடர் சம்பியனாகவும் காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்க தொன்றாகும்.

சிறந்த பூந்தோட்டப் பிரியரான மர்ஹூம் சம்சுதீன் அவர்கள் தான் கற்ப்பித்த, அதிபராக இருந்த கல்விக்கூடங்களில் இத்துறையிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை என்பதை இன்றும் அக்கூடங்களின் பூங்காக்கள் பறைசாற்றுகின்றன. தனது ஆயுளின் அரைவாசிக் காலத்தை கல்விச்சேவைக்கு அர்ப்பணித்த இவர் எம்மை விட்டு மறைந்தமை நமது சமூகத்தின் பேரிழப்பாகும். இவர் டாக்டர் கியாசுடீன், சுங்க அத்தியட்சகர் நியாஸ், முனாஸ் (முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர்), நவாஸ் (பொறியியலாளர்), ஜெஸீமா, அனிதா ஆகியோரின் அருமைத் தந்தையும், சுபைர் அதிபரின் மாமனாரும், முன்னாள் பொத்துவில் முதல்வர் மர்ஹூம் டாக்டர் எம்.ஏ.எம்.ஜலால்டீன், முன்னாள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.சாபிடீன், சுபைடீன்(லங்கா மெடிகல்),  மர்ஹூம் லத்தீஃப், ஹாஜரா உம்மா, மர்ஹூமா சுபைதா உம்மா ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பாக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல நாயனிடம் நாமும் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!  

No comments

Powered by Blogger.