Header Ads



இஸ்லாஹிய்யா கல்லூரியின் 25 வருட நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்



(தகவல் : M.L.M. அஸ்ஹர் (இஸ்லாஹி))

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி, தனது 25 வருட நிறைவையொட்டி 'தேசத்தை கட்டியெழுப்புதல்' எனும் மகுடத்தில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

மனிதனும் ஏனைய படைப்புக்களும் மகிழ்வுடன், அமைதியாக வாழும் சுபீட்சமான நாடாக இலங்கை அமைவதற்கு இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தனது அறிவு, ஆற்றல், திறன்கள் யாவற்றையும் தனி மனிதனாகவும் கூட்டாகவும் நாட்டின் உற்பத்தியிலும் அமைதியிலும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேசத்தைக் கட்டியெழுப்புதல் எனும் கருப்பொருளில் இஸ்லாஹிய்யா தனது பட்டமளிப்பு விழா, வெள்ளி விழா, சர்வதேச ஆய்வு மாநாடு உட்பட நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

முஸ்லிம்கள் இந்நாட்டுக்குச் செய்த காத்திரமான பங்களிப்புகளை கோடிட்டுக்காட்டுவதும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தொடர்ந்தும் தமது முழு முயற்சியையும் வழங்குவதற்கான சிந்தனையை ஏற்படுத்துவதும் இந்நிகழ்வுகளின்  முக்கிய குறிக்கோளாகும்.

அந்த வகையில், எதிர்வரும் 2013.01.14ஆம் திகதி இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் காலை 10.00 மணி முதல் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளும் 2013.01.15ஆம் திகதி கொழும்பு-03இல் அமைந்துள்ள மேமன் மண்டபத்தில் மாலை 6.45 முதல் வெள்ளி விழா நிகழ்வுகளும் பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத்துறையுடன் இஸ்லாஹிய்யா  இணைந்து நடத்தும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு கடந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்கள்|| எனும் தலைப்பிலான சர்வதேச ஆய்வு மாநாடு 2013.03.02ஆம் திகதி பேராதனை வளாகத்திலும் நடைபெறவுள்ளன.

வெள்ளி விழா நிகழ்வின்போது பெறுமதிக்க பல நூற்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


No comments

Powered by Blogger.