Header Ads



எகிப்தில் 21 பேருக்கு மரண தண்டனை - மொஹமட் முர்ஸி அவசர ஆலோசனை (வீடியோ)



எகிப்தில் உள்ள போர்ட் செட் கால்பந்து மைதானத்தில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், முதற்கட்டமாக 21 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. 

தண்டனை பெற்றவர்களில் போர்ட் செட் நகரைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் தாக்கப்பட்டது. சிறை அருகில் நடந்த கலவரத்தை அடக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 

இந்த வன்முறையில் 2 போலீசார் உள்ளிட்ட 16 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

போர்ட் செட் நகரின் அனைத்து தெருக்களிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவ வாகனங்களும் ரோந்து சுற்றி வருகின்றன. மேலும் அரசு அலுவலகங்கள் தாக்கப்படலாம் என்பதால் அங்கும் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எகிப்தில் முபாரக் ஹோஸ்னியின் ஆட்சி அடக்கப்பட்டு, முகமது முர்சி தலைமையிலான ஆட்சி கடந்த ஆண்டு பொறுப்பேற்றது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள முர்சிக்கு இப்போது வன்முறை வடிவில் புதிய நெருக்கடி ஆரம்பித்துள்ளது. முர்சியின் சர்வாதிகார சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கெய்ரோ, அலெக்சாண்டிரியா உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. எனவே, அதிபரையும், அரசையும் மாற்ற விரும்புகிறோம் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த கலவரங்கள் தொடர்பாக மூத்த மந்திரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அதிபர் முர்சி ஆலோசனை நடத்தினார்.


No comments

Powered by Blogger.