Header Ads



1990 முதல் யாழ் முஸ்லிம் அணி..!

1990 ஜுன் மாதம் 10ஆம் திகதி தூய ஒளி கிண்ணத்தை யாழ் முஸ்லிம் அணி சுவீகரித்தது. முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெற்றி கொண்டாடப்பட்டது. ஆயிரம் சைக்கிள்கள்  வேன்கள் கார்கள் மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட வரலாறு காணாத வெற்றிப் பேரணி அது. மறைமுகமாக அந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் சொன்ன விடயங்களை யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை. அடுத்த 19 வருடங்களுக்கு யாழ் மண்ணில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் உதைப்பந்தாட்டம் விளையாடவதற்கு அங்கு அவர்கள் வாழப் போவதில்லை என்ற உண்மையை ஒக்ரோபர் 30ஆம் திகதி தான் யாழ் முஸ்லிம் அணி மாத்திரமன்றி ஒட்டுமொத்த யாழ்ப்பாண முஸ்லிம்களும் அறிந்து கொண்டனர். 1990 ஆம் ஆண்டு முதல் ஆநு மாதங்களில் இடம்பெற்ற அத்தனை போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை பெற்ற திருப்தி ஒன்று தான் ஜீரணிக்கக் கூடியதாக இருந்தது. 

1990 ஜுன் 11ஆம் நாள் யாழ்தேவி இரயிலில் யாழ் முஸ்லிம் அணி யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாக  புறப்பட்டது. அந்த அணியை மனதார நேசித்த ரசிகர்கள் நூறு பேரும் அந்த இரயிலில் வந்தனர். சரியாக ரயில் மாங்குளத்தில் நின்ற போது அதனை புலிகள் மேற்கொண்டு செல்லவிடாமல் தாமதப் படுத்தினர். விசாரித்த போது மட்டக்களப்பில் இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையிலான சண்டை தொடங்கிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ரயிலினுள் அவசரமாக கூடிய கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் கொழும்பு சென்று போட்டிகளில் கலந்து கொள்வது என்ற முடிவெடுத்தனர். வரலாற்றில் முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடாது என்பதும் இச்சண்டை மிகவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்தும் வீரர்களை உடன்பட வைத்தது. 

கொழும்பு வந்திறங்கிய அணி  ரொரிங்டன் மைதான ஓய்வரைகளில் தங்கியது. யாழ் முஸ்லிம் அணியை மிகவும் நேசித்த ஆனந்த ராஜா என்ற மாவட்ட விளையாட்டு அதிகாரியே கொழும்புக்கு அணியை அழைத்து வந்திருந்தார். முதல் நாள் யாழ் அணியும் களுத்துறை அணிகளும் மோதின. யாழ் அணியில் சலீம், முனாஸ், ஜான்ஸின், யகீன், காரிஸ், ஜமால்தீன் சம்சீர், ஜாபிர், ஜுனைஸ், நசூர், சித்தீக், நஸார், ஆஸாத், அஸ்கர், சம்சீர், குவைஸ் ஆகியோருடன் மர்ஹும்களான  மன்சூர், ஜலீஸ், நகீப் ஆகியோரும் களமிறங்கினர். களுத்துறை அணி ஒரு கோலை போட்ட நிலையில் கீப்பர் முனாஸின் தோள் மூட்டு கழன்றதினால் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து காரிஸ் கீப்பராக களமிறக்கப்பட்டார். வழமை போன்ற இரண்டாவது அரை நேரத்தில் சிறப்பாக விளையாடும் தந்திரத்தையும் மனோவலிமையையும் இறைவன் உதவியால் கொண்டிருந்த யாழ் அணி இரண்டு கோல்களை அடித்து வெற்றியீட்டியது. 

மறுநாள் போட்டி யாழ் அணிக்கும் கொழும்பு அணிக்குமிடையில் இடம்பெற்றது. யாழ் அணியை வெல்ல முடியாது என்பதை  உணர்ந்த கொழும்பு அணி போட்டி ஆரம்பம் முதல் கடுமையான பவுல்களை விளையாடினர். கீழே விழுந்த வீரர் சம்சீரின் கைகளை வேண்டுமென்றே ஏறி மிதித்து உடைத்தனர். அதையடுத்த ஆஸாத்தின் முழங்கால் பிரளுமாறு உதைத்தனர். கொழும்பு அணி இரண்டு கோல்களை போட்ட நிலையில் யாழ் முஸ்லிம் அணியின் இரண்டாவது அரை நேர ஆட்டம் சூடுபிடித்தது. இந்நிலையில் கொழும்பு அணி கடுமையான பவுல்களை விளையாடியதுடன் மத்தியஸ்தரையும் மிரட்டி தமக்கெதிரான பனால்டியை கூட வழங்கவிடாது தடுத்தனர். ஜான்ஸின், சித்தீக் மற்றும் ஜுனைஸ் போன்ற வீரர்களை பந்து கொண்டு செல்லவிடாமல் இழுத்து பிடித்து வைத்திருந்தனர். இவ்வாறான போட்டியை இதற்கு முன்னர் யாழ் முஸ்லிம் அணி சந்தித்ததில்லை. இவ்வாறான முறைகேடான விளையாட்டுகளை கொழும்பு அணி விளையாடிய போதும் யாழ் அணி ஒரு கோலைப் போட்டது. இறுதியில் அணி ஒன்றுக்கு இரண்டு கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

வடக்கு கிழக்கில் மோதல்கள் தொடர்ந்த நிலையில் யாழ் அணி ரொரிங்டன் வளாகத்திலேயே எட்டு நாட்கள் தங்கியது.  இந்நிலையில் திருமணம் முடித்த உறுப்பினர்கள் தமது குடும்பத்தின் நிலையை அறியவேண்டும் என்று கூற அணி அங்கிருந்து வெளியேறி யாழ் செல்ல தயாரானது. ஒரு லொறி மூலமாக வவுனியா வரை சென்ற அணிக்கு மோதல் நிலமை காரணமாக வவுனியாவிலிந்து கால்நடையாகவே யாழ் செல்ல வேண்டி ஏற்பட்டது. 

இந்நிலையில் புத்தளத்தில் இடம்பெயர்ந்த பல முஸ்லிம் குடும்பங்கள் வந்து குடியேறிக் கொண்டிருந்தன. இதனால் சில வீரர்கள் புத்தளத்தில் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் புத்தளம் போல்டன் கழகம் யாழ் முஸ்லிம் அணி வீரர்களை தமது கழகத்தில் சேர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்தது. ஏற்கனவே புத்தளம் போல்டன் கழக வீரர்களான காமிம், காமில் மற்றும் நஜீப் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்ற காலத்தில் யாழ் முஸ்லிம் அணிக்காக விளையாடியுள்ளனர். அந்த நட்பின் மூலமாக வந்த அழைப்பாகையால் முஹிதீன் தம்பி நஸாரின் பரிந்துரைப்பின் பிரகாரம் முதன் முதல் ஜான்ஸின் புத்தளம் போல்டனுக்காக விளையாடினார். போல்டன் அணியின் வீரர்கள் உட்பட அதன் முகாமையாளர்களும் இன்முகத்துடன் யாழ் முஸ்லிம் அணியின் வீரர்களை தமது அணியில் சேர்த்துக் கொண்டனர். இன்றும் கூட யாழ் முஸ்லிம் அணி வீரர்களுக்கும் போல்டன் அணியினருக்குமிடையில் இனைபிரியா நட்பும் பரஸ்பரம் பாசமும் காணப்படுகின்றது. மாஸாஅல்லாஹ். 

 ஜான்ஸினின் பறிந்துரைப்பின் பிரகாரம் சித்தீக், ஜுனைஸ், முனாஸ், முஸாதீக், சம்சீர், யகீன், காரிஸ், மர்ஹும் மன்சூர் மற்றும் குவைஸ் ஆகியோரும் போல்டனுடன் சேர்ந்து விளையாடினர். ஒரு கட்டத்தில் யாழ் முஸ்லிம் அணியினர் போல்டனை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் லீக் தெரிவுக்குழுவுடன் மோதியது. யாழ் அணி மூன்றுக்கு ஒன்று கோல் கணக்கில் புத்தளம் லீக்கை வெற்றிகொண்டது.  யாழ்ப்பாணத்தவர்களின் பிரசன்னம் போல்டன் அணிக்குள் உள்வீட்டு முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது. நிர்ப்பந்தமான நிலையில் யாழ் முஸ்லிம் அணி புத்தளத்தில் வேறாக பதிவு செய்தது. இடம்பெயர்ந்து வந்து தொழில் இன்றி மக்கள் வாழ்ந்த காலம் அது. அதனால் யாழ் முஸ்லிம் அணியின் விளையாட்டுகளை ரசிப்பதற்கு வவுனியா, இக்கிரிகொல்லாவ, அனுராதபுரம், நொச்சியாகம, நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புத்தளத்தில் ஒன்று கூடி விளையாட்டுக்களை ரசிப்பர்.

இதன் பிறகு யாழ் முஸ்லிம் அணி பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை அள்ளகுவித்தது. இதனால் புத்தளத்தில் வெல்லப்பட முடியாத அணியாக யாழ் முஸ்லிம் அணி தலைப்பெடுத்தது. 1991ஆம் ஆண்டு வட்டார உதைப்பந்தாட்டப் போட்டியின்  ஒரு போட்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்து அந்த போட்டிகளில் இருந்து யாழ் முஸ்லிம் அணி வெளிநடப்புச் செய்தது. இதையடுத்து மூன்று மாதங்கள் யாழ் அணி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. புத்தளம் கழகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து யாழ் அணிக்கு பாதுகாப்பு அளிப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து மீண்டும் போட்டிகளில் யாழ் அணி கழந்து கொண்டு பல சம்பியன் பட்டங்களை வென்றது. 1991 முதல் 1994 ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாத அணியாக யாழ் அணி திகழ்ந்தது. இந்நிலையில் 1994ஆம் ஆண்டு ஒரு போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பால் அணியின் வீரர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து புத்தளத்தில் இனிமேல் விளையாடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்து அணியும் கலைக்கப்பட்டது. இதனால் 1995 முதல் 1998ஆம் ஆண்டுவரை கழகம் எந்த போட்டிகளிலும் பங்குபற்றவில்லை. சமூகத்தின் நன்மைக்காக தமது விளையாட்டுக்களையும் வீரதீரங்களையும் தூக்கியெறிந்திருந்தனர் யாழ் முஸ்லிம் வீரர்கள். 

1991ஆம் ஆண்டு முதல் கழகம் பல்வேறு நிதிநெருக்கடிகளைச் சந்தித்தது. இந்நிலையின் ஜமால்தீன் சம்சீர் என்பவர் சுவிஸில் சேகரித்து 17000 ரூபாய்களை அனுப்பினார். அத்துடன் பிரான்ஸ் சவுதி போன்ற நாடுகளில் இருந்து வந்து சென்ற யாழ் சகோதரர்களும் அள்ளி வழங்கினர். இந்த நிதியை வைத்தே 1992 முதல் 1994 ஆண்டு வரை கழகம் இயங்கியது. தமது நிலமையை பொருட்படுத்தாது கழகத்துக்கு நிதி வழங்கிய முனீப் மற்றும் இம்தாத் ஆகியோரும் இங்கு நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.  யாழ் முஸ்லிம் கழகத்தை தொடர்ந்து செயற்பட உதவிய சகோதரர்களுக்கு அல்லாஹ்தஆலா இவ்வுலகத்தில்  ஆரோக்கியமான வாழ்க்கையையும் நாளை மறுமையில் ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்ற சொர்க்கத்தையும் கொடுப்பானாக!.  ஏனெனில் விளையாட்டுத்துறையில் இளைஞர்களின் கவனம் செல்லும் போது பாவச்செயல்கள் குறைகின்றன. அதேவேளை விளையாட்டு வீரர்களே சமூக சேவைகளிலும் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய நிலமைகள் தோன்றுகின்ற போதும் முன்னிற்பர். அந்த வகையில் விளையாட்டுக்கு உதவி செய்வதும் முஸ்லிம்களை பாதுகாக்க செலவிடப்படுவது  செய்வது போலத்தான் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். 

புத்தளத்தை கழகத்தை வழிநடத்தியவர்களில் மன்சூருக்கு அடுத்த படியாக ஜான்ஸினும் குவைஸும் செயற்பட்டனர். இவர்களுக்கு உதவியாக நவ்பர் (தலைவர்), எம்.எஸ். அனீஸ் (தனாதிகாரி), மற்றும் பாரூக் ஆகியோர் செயற்பட்டனர். இதே நேரத்தில் யாழ்ப்பாணத்தைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். யாழ்ப்பாணத்தில் கழகத்தை நடத்துவதில் ஈரோ சாலி, எஸ்.ஏ.சி.எம். அமீன், ஐதுரூஸ் சாகுல் ஹமீட், சுகார்னோ, எம்.ரி. நஸார் ஆகியோர் தமது பணத்தை வாரியிரைத்து செயல்பட்டனர். கே.எம்.நகீப் அவர்களின் வாகனங்கள் எப்போதும் எங்கும் கழகத்தை இலவசமாக ஏற்றிச்செல்ல தயாராக இருக்கும்.கழகத்துக்கு தேவையான போதெல்லாம் பந்துகளை வாங்கிக் கொடுக்க மர்ஹும் முனாப் முபீன் (கேஎன்எம்) பின்நின்றதில்லை.  கழக நிர்வாகத்தின் தலைவராக எம்.எம்.முஸாதீக் இருந்த காலத்தில் தான் கழகம் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட சம்பியன் பட்டங்களைச் சுவீகரித்தது. இந்த வெற்றிகளின் போதெல்லாம் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாக விருந்துபசாரங்களை (ஐஸ்கிறீம், ரோல்ஸ் போன்றன) தனது நிதியிலிருந்து வழங்குவதில் அமீன் (ரோஸா டெக்ஸ்) சிறப்பாக செயற்பட்டார்.  அமீனும் அவருடைய நண்பர்களும்; அணிக்காக எல்லாவற்றையும் செய்யத் தயாரானவர்களாக  காணப்பட்டனர்.     

இந்த ஓய்வு வீரர்களின் திறமைகளை படிப்படியாக குறைந்து வந்தது. 1994ஆம் ஆண்டு யாழ் முஸ்லிம் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வந்தது. எல்லா அணிகளுக்கும் பல கோல்களை போட்டு வெற்றியீட்டிக் கொண்டிருந்தது. இது சிலருக்கு பொறாமையையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டியொன்றின் போது யாழ் முஸ்லிம் அணி இன்று தோற்றுவிடும் என்று கூறி ஒருவர் ஆயிரம் ரூபாவுக்கு இன்னொருவருடன் பந்தயம் கட்டியிருந்தார். (பந்தயம் இஸ்லாத்தில் ஹராமான செயல்) .ஆனால் யாழ் அணி மூன்று கோல்களை போட்டு வெற்றிபெற்றுவிட்டது. பந்தயம் கட்டியவர் மைதானத்தில் வைத்தே இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இதனால் யாழ் முஸ்லிம் அணியின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு முடிவை கட்டவேண்டுமென சிலர் எண்ணினர். அடுத்த போட்டியும் வந்தது. யாழ் முஸ்லிம் அணி மூன்று கோல்களை போட்ட நிலையில் மைதானத்தில் சலசலப்பு அதிகரித்தது. ஐந்தாவது கோலை அடித்ததும் பார்வையாளர் சிலர் மைதானத்தினுள் புகுந்து யாழ் வீரர்களை தாக்கத் தொடங்கினர். இதையடுத்து யாழ் ரசிகர்களும் மற்ற ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். நடுநிலைவாதிகள் உடனடியாக தலையிட்டு சமாதானத்தை ஏற்படுத்தினர். போல்டன் வீரர்களும் நிர்வாகிகளும் கடும் பிரயத்தளம் எடுத்து நிலமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை யாழ் அணியினர் இன்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

ஆனால் அகதி முகாம்களை பாதுகாக்கும் நோக்குடன் யாழ் அணி சகல போட்டிகளிலும் இருந்து விலகியதுடன் கழகத்தையும் கலைத்தது. சர்ச்சைக்குரிய போட்டியின் பின்னர் புத்தளம் ரசிகர்கள் கூட போட்டிகளை ரசிக்க மைதானத்துக்கு வருவதில்லை. 1999ஆம் ஆண்டு மீண்டும் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பழைய வீரர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்திருந்தனர். புதிய வீரர்கள் அவ்வளவாக சேரவில்லை. இந்நிலையில் கழகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் மர்ஹும் மன்சூர் அவர்களின் பங்களிப்பு மெச்சத்தக்கது. மன்சூருக்கு உதவியாக ஜனூஸன் மற்றும் ஜஸ்ரின் ஆகிய இளம் வீரர்கள் செயல்பட்டனர்.  அவருடன் சித்தீக், பாரூக், நியாஸ், நசூர், நஸார், ஜுனைஸ் போன்றவர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.  

புத்தளத்தில் உதைபந்தாட்ட அணியை நடத்துவதில் மன்சூர், குவைஸ் மற்றும் ஜான்ஸின் ஆகியோர் மிகுந்த சிறமங்களை எதிர்நோக்கினர். ஆரம்பத்தில் புத்தளத்தில் வாழ்ந்த வீரர்கள் தொழில் நிமித்தம் தமது குடும்பங்களுடன்  பல்வேறு பிரதேசங்களில் குடியேறினர். யகீன் பாணந்துறையிலும், ஜுனைஸ், ஜாபிர் ஆகியோர் நீர்கொழும்பிலும், ஜான்ஸின், சம்சீர், அஸ்கர் ஆகியோர் கொழும்பிலும் நஸார், முனாஸ் ஆகியோர் வவுனியாவிலும் முஸாதீக் அனுராதபுரத்திலும் வசித்தனர். கழகத்தின் முக்கியமான வீரர்கள் எல்லோரும் புத்தளத்துக்கு வெளியே வசித்தனர். பணவசதிகள் குறைவான அக்காலப்பகுதியில் அணியின் வீரர்களை போட்டிகளுக்கு வரவழைப்பதில் மிகப்பெரிய சிரமங்கள் எதிர் நோக்கப்பட்டன. நஸார் முனாஸ் முஸாதீக் ஆகிய மூன்று பேரும் விளையாடும் போது அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதனால் புத்தளத்து ரசிகர்கள் வவுனியா பக்கத்திலிருந்து வீரர்கள் வந்து விட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பர். நஸார், நசூர், யக்கீன், சம்சீர், முஸாதீக் மன்சூர் ஆகியோரைக் கொண்ட பின்னனி வீரர்களை புத்தளத்தில் தடுப்புச் சுவர் என ரசிகர்கள் அழைப்பர். இவர்களை தாண்டி பந்தை கொண்ட செல்வது கஷ்டமாகையால் அவ்வாறான கருத்து புத்தளத்தில் நிலவியது. 

படிப்படியாக அணியின் பழைய வீரர்கள் ஓய்வு பெற்றனர். புதிய இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டனர். புதிய அணியை ஜனூஸன், ஜஸ்ரின், நியாஸ் மற்றும் சித்தீக் ஆகியோர் நடத்துகின்றனர். தற்போதைய கழகத்தின் நிர்வாகிகளாக கே.எம்.நகீப், அஷ்செய்க் பர்வேஸ் மற்றும் பலர் உள்ளனர். கழகத்துக்கான நிதியுதவியினையும் ஆலோசனைகளையும் யாழ் முஸ்லிம் வர்த்தகர் சங்கம் வழங்குகின்றது. இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணியும் வெற்றிகள் பலவற்றை புத்தளத்தில் சுவீகரித்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றது.  





No comments

Powered by Blogger.