143 வருடங்களாக விசாரிக்கப்படும் வழக்கு
ஒரு வழக்கை சுமார் 143 வருடங்களாக சுப்ரீம் கோர்ட் மிக நிதானமாகவும், அமைதியாகவும் விசாரித்து வருகிறது. இதுவே உலகின் மிக நீண்ட வழக்காக கருதப்படுகிறது. 1878ம் ஆண்டு கல்லறையில் வழிபாடு நடத்தும் உரிமை தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கு நீதிக்காக சுப்ரீம் கோர்ட்டை அனுகி உள்ளது. இவ்வழக்கில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை.
வழக்கு விபரம் :
1878ம் ஆண்டு வாரணாசியில் 8 மனைகள் மற்றும் 2 கல்லறைகளைக் கொண்ட இடத்தில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் வழக்கும் தொடர்ந்தனர். தொடர்ந்து 1981ம் ஆண்டு வரை வழக்கு விசாரணையும், மோதல்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் 1981ம் ஆண்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் வழிபாட்டு உரிமை இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்க மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இறுதி வாய்ப்பு அளித்தது.
நீதிபதிகள் கேள்வி:
நேற்று 30-01-2013 நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதிகள் ஏ.ஆர்.தவி,விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் முன் நடைபெற்றது. அப்போது இந்த தகராறு எதற்கு, 1981ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்காதது ஏன், சுப்ரீம் கோர்ட்டின் கட்டளைகளை நிராகரித்தது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் இர்ஷத் அகமதிடம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த உத்திர பிரதேச அரசை அறிவுறுத்தாமல் 35 ஆண்டுகளாக இவ்வழக்கு மீதான மேல்முறையீடு மனுவை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் நழுவல் :
இது மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்பதால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்ட நடைமுறை சிக்கல்களை நீதிபதிகள் பெஞ்ச் ஏற்றுக் கொண்டது. பின்னர் தெரிவித்த நீதிபதிகள், பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் எனவும், அதற்கு மேலும் சில காலம் எடுத்தாலும், பிரச்னை முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரச்னைக்குரிய நிலத்தை இரு தரப்பினருக்கும் சமமாக பிரித்தளித்து, அது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லறைக்காக சண்டையிட்டு கொள்ளாமல் அமைதி காக்கவும், சுமூகமாக செல்லவும் இருதரப்பினரையும் சுப்ரீம் கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment