எகிப்தின் தற்போதைய நெருக்கடி குறித்து இஹ்வானுல் முஸ்லிமின் விளக்கம்
(tn) அண்மைய வன்முறைகளுக்கு ஜனாதிபதி மொஹமட் முர்சி எதிர்ப்பாளர்களே காரணம் என்றும் அவர்கள் நாட்டுக்கு ஒரு நோயாக உருவெடுத்து வருவதாகவும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் பாத்தி விமர்சித்துள்ளார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினருக்கும் முர்சி எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். “இந்த மோதலில் எமது 6 பேர் தியாகிகளாயினர். 1439 பேர் காயமடைந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள். எமது தலைமையகம் உட்பட 28 அலுவலகங்கள் தீமூட்டப்பட்டன. இதில் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் பத்திரிகை தலைமையகமும் பற்றவைக்கப்பட்டது” என்று பாத்தி விளக்கினார்.
“எமது சகோதர உறுப்பினர் ஒருவர் கூட ஆயுதத்துடன் கைது செய்யப்படவில்லை. நாம் இரத்தம் சிந்த தாக்கியதாக எவராவது கூறினால் அவரை காட்டுங்கள் பார்க்கலாம்” என்றும் பாத்தி சவால் விடுத்தார். இதில் எகிப்து அரசை தாம் பின்னணியில் நின்று நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் பாத்தி மறுத்தார்.
“உண்மையில் நான் ஆட்சியில் இருந்தால் எனது அலுவலகத்தை சுற்றி வளைப்பதற்கும் எனது ஆவணங்களை அழிப்பதற்கும் சாத்தியம் இருக்கிறதா? எனது சொந்த தலைமையகத்தையே பாதுகாக்க முடியாமல் நான் எப்படி ஆட்சி செய்பவனாக இருக்க முடியும்? தற்போது நடைபெறுவதற்கு அரசியல் பின்னணியில் இல்லை. குறிப்பிட்ட ஒரு சில நோக்கங்கள் மற்றும் பணமுமே காரணமாக இருக்கிறது. அது நாட்டுக்கு நல்லதை ஏற்படுத்தாது” என்றார்.
Post a Comment