எல்லைமீறும் ஊடகங்கள்
ஜசிந்தா சல்தானா |
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்மின் மனைவி கேத்தரின் தங்கியிருந்த மருத்துவமனைக்கு மஹாராணியும் இளவரசர் சார்ல்ஸும் பேசுவதுபோல நடித்து செய்யப்பட்டிருந்த தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவை ஒலிபரப்பிய வானொலி நிலையம், இந்த அழைப்புக்கு பதிலளித்த நர்ஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்வார் என்பது யாருமே எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்வு என்று கூறியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த செவிலியான ஜசிந்தா சல்தானாவின் மறைவு ஒரு துயர சம்பவம் என சிட்னியில் இருந்து இயங்கும் இந்த டுடே எஃப் எம் வானொலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிட்னி வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான மெல் க்ரெய்க் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோரால் தொலைபேசியில் ஏமாற்றப்பட்ட செவிலி உயிரிழந்ததுதான் ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய செய்தியாக இருக்கிறது.
செவிலி ஜசிந்தா சல்தானா தற்கொலை செய்துகொண்டிருப்பதாத் தெரிவதை அடுத்து டுடே எஃப் எம் வானொலிக்கு எதிராக உணர்வலைகள் எழுந்துள்ளன.
ஏமாற்றும் தொலைபேசி அழைப்புகள் என்ற ஒரு விஷயத்தை வானொலி நிகழ்ச்சிகள் பல காலமாகவே ஒரு உத்தியாகப் பயன்படுத்தி வருகின்றன என்று இந்த வானொலியை நடத்தும் ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இந்த வானொலி நிலையம் எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான உணர்வலைகள் எழுந்துள்ள நிலையில், இந்த நிலையத்துக்கான விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தொலைபேசி அழைப்பு குறித்து ஆஸ்திரேலிய ஊடக கண்காணிப்பு அதிகாரியிடம் புகார்கள் வந்து குவிந்துள்ளன.
ராணியாகவும் இளவரசராகவும் நடித்துப் பேசிய வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்
மஹாராணி எலிசபெத் போலவும் இளவரசர் சார்ல்ஸ் போலவும் நடித்திருந்த வானொலி அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
நடந்திருக்கும் துயர சம்பவத்தால் அவர்கள் மொத்தமாக மனமுடைந்து போயுள்ளனர் என்றூ கூறப்படுகிறது.
இதனிடையே இறந்த ஜசிந்தா இந்தியாவின் மங்களூருவைச் சேர்ந்தவர் என்றும் அவரது கணவரும் இந்தியர்தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜசிந்தாவின் மறைவை அறிந்து இந்தியாவில் உள்ள குடும்பத்தார் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் எந்தப் புகாரும் கொடுத்திருக்கவில்லை பிரிட்டிஷ் அரண்மனை தெளிவுபடுத்தியுள்ளது.
ஜசிந்தாவை எந்த வகையிலும் கண்டித்திருக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகமும் கூறியிருக்கிறது. bbc
ராணியாகவும் இளவரசராகவும் நடித்துப் பேசிய வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் |
Post a Comment