Header Ads



அமைச்சர் றிசாத்தும், அவரை பழிவாங்கத்துடிக்கும் நபர்களும்..!


(நல்லதம்பி)

அன்மைக்காலமாக மன்னார் மாவட்ட ஆயருக்கும், அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டமை யாவரும் அறிந்ததே. இதனை முன்னிலைப்படுத்திய கூட்டணியினர்  மன்னிப்புக்கோரவேண்டுமென பாராளுமன்றிலும், வெளியிலும் கூறினர். இவ்விடயத்தை பெரிதுபடுத்திய சில ஊடகங்களும், சில தனிப்பட்ட அரசியல் இலாபத்தை அடைந்து கொள்ள முயலும் நபர்களும் கடுமையான விமர்சனங்களை அள்ளிவீசினர். கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில், புலிகள் இயக்கம் முஸ்லீம்களை வடபுலத்திலிருந்து வெளியேற்றியபோது அவர்களின் உரிமைக்குரலாக அக்காலப்பகுதியிலிருந்து இன்றுவரையிலும் அமைச்சர் றிசாத் இருந்துவருகின்றார். 

அன்று முஸ்லீம்களை விரட்டும்போது மௌனியாக இருந்தவர்கள் இன்று மன்னார் ஆயர் அவர்களுக்கு கூறியது எந்தவகையில் நியாயம் என்பது தெரிந்து கொள்ளாது உளறுவதுதான் நமக்கு புரியாத புதிராக உள்ளது. உண்மையில் ஒரு இனத்தின் அழிவுக்கு அக்கால நேரத்தில் பாராளுமன்றிலும், வெளியுலகிலும் வாய்மூடியவர்கள் இன்று துள்ளிக் குதிக்கின்றபோது அமைச்சர் றிசாத் கூறிய விடயங்கள் பெரியவிடயமாகத் தெரியவில்லை. 

இவ்வாறான நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் ஏக குரலாக வெளிப்பட்டு தன்னால் முடியுமானளவு சிலவேலைகளை செய்து வருகின்றார். இன்றுகூட நாட்டின் பல பிரதேசங்களில் வந்தேறு குடிகளாக அல்லப்படுகின்ற ஒரு சமூகமாக வடபுலத்து முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை இந்த மதிப்புக்குரியவர்களும், தமிழ் தலைமைகளும் தெரிந்திருந்தும் அபிவிருத்திகளையும், ஏனைய தொழில் துறைகளையும் அமைச்சர் அவர்கள் செய்ய முற்படுகின்றபோது தடையாகவும், இனரீதியான கண்ணோட்டத்திலும் பார்ப்பதுதான் ஆச்சரியமாகவுள்ளது. உண்மையில் சமயரீதியான குரவர்கள் அவர்கள் சார்ந்த மக்களுக்கு மாத்திரமன்றி மனிதத்துவ அடிப்படையில் அனைவரையும் சரியான முறையில் பார்க்கின்றபோதுதான் மக்களும் அவர்களது பக்கம் பார்ப்பதற்குக்கூட முயற்சிப்பார்கள். எவ்வேளைகளிலும் இனக்குரோத கருத்துக்களையும், ஒரு இனத்திற்குரிய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பதும் உண்மையான தார்மீகவாதிகளின் கடமையாகக் கொள்ளலாமா? 

அதேவேளை இன்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்த பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்நிற்பதை அமைச்சருக்கு எதிராக வாதம் புரிபவர்கள் உணர்ந்துள்ளனர். மீள்குடியேற்றங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சர் அவர்கள் உறுதியாக இருப்பது இனவாதமாக அமையுமா? தனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக எவ்வித பாகுபாடுகளுமின்றி அப்பிராந்தியம் முழுவதும் அபிவிருத்திகளை செய்கின்ற அமைச்சருக்கு எதிராக செயற்படுவது மனிதாபிமான செயலாக அமையாது. ஆயர் அவர்கள் அண்மையில் ஜெனீவா மாநாடு நடைபெற்ற போது கொல்லப்பட்ட தமிழ்மக்கள் சார்பாக கொடுத்திருந்த ஒரு விடயத்திற்கு பொலிசாரின் விசாரணை நடைபெற்றமை என்பது வேறுவிடயம்.

அன்று வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இன்று வரையிலும் நாட்டின் நாலாபக்களிலும் துன்பப்படுகின்றனர். இருக்க இடமின்றியும், அரசின் உணவுக்காக கையேந்திய நிலையில் அந்த மக்கள் சார்பாக அமைச்சரை மன்னிப்புக் கோரியவர்கள் எதுவுமே பேசாமல் இருந்ததன் மர்மம் என்ன? இன்றுவரையிலும் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தியில் முஸ்லீம்களுக்கும் பாரியளவு பங்குதரவேண்டும் என்று கோரவில்லை. இங்கு பூர்வீகமாக வாழ்ந்த உங்களில் ஒருவனாக இருந்துவருகின்ற முஸ்லீம்களை மீண்டும் குடியேற இதயபூர்வமாக அழைக்கவில்லை என்பதும் வேறுவிடயம். இன்று வடபுலத்தில் முஸ்லீம்களின் நிலங்களை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முயற்சிப்பதானது முற்று முழுதாக வடபுலத்திலிருந்து விடுதலை அளிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டுள்ள சமூகத்தின் மத்தியில் இந்த அமைச்சரைப்போன்றவர்கள் செய்கின்ற, செய்ய முயற்சிக்கின்ற விடயங்களுக்கு களங்கம் கற்பிக்கப்படுகின்றமை எந்தவகையில் நியாயம். இன்று இந்தியாவின் உதவியுடன் வன்னியில் கட்டப்படுகின்ற ஆயிரக்கணக்கான வீடுகள், அரசின் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லையே. அப்படியானால் அமைச்சராக இருந்துகொண்டு அதனையும் செய்ய முடியாதபோது அந்த மக்களின் பிரதேசத்திலாவது சிலவற்றை செய்;யத் துணிகின்றபோது ஏன் ஐயா குழிபறிக்கிறீர்கள்.

நாட்டின் அரசியலில் பங்கு கேட்கவில்லை, நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. ஆனால் நிம்மதியாக வாழ்வதற்குரிய உரிமையைத்தான் கேட்கிறார்கள் இந்த முஸ்லீம்கள். அப்படியிருந்தும் இன உறவுக்கான பாலமாக முஸ்லிம்கள் என்றுமே இருந்ததினால்தான் அன்று  இலங்கை வந்த இந்திய எதிர்கட்சித் தலைவி சுஷமா அவர்களும் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களை அரசுடன் கூட்டணியினரை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் ஒருவராக செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். 

அரசியல் ரீதியான பிளவுகள் காணப்பட்டாலும் சமயம் சார்ந்த கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்துப்பேசுபவர்கள் முஸ்லீம்கள். அண்மையில் தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினையில் முழு இலங்கை முஸ்லீம்களும் கட்சி பேதமற்ற முறையில் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தமை நினைவிருக்கலாம். என்றுமே எம்மால் மதிப்படுகின்ற மன்னார் ஆயர் விடயத்திலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறிய கருத்துக்கள் மன்னிப்பு கோருவதற்கான ஆழ்ந்தமான கருத்தாக தோன்றவில்லை என்பதுதான் அமைச்சரின் வாதமாக தோன்றினாலும், கூறப்பட்ட விடயம் பிழையான விடயமாக இருந்தால் அதற்கு முழுமையான மன்னிப்பை கோரவேண்டும். ஆனால் தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டு ஆயரை சம்பந்தப்படுத்தியமை மன்னார் பிரதேசங்களில் முட்டுகட்டையாக அல்லது தடையாக இருந்துவருகின்றமை போன்ற செயற்பாடுகள் அமைச்சரை அதிருப்தி அடையவைத்திருக்கலாம் என்பதற்காக அவ்வாறு பேசியிருக்கலாம். அதனை பெரிதுபடுத்தி கொச்சைப்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கைகள் சரியானதாக தெரியவில்லை. 

நாட்டின் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லீம்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள். இனப்பிரச்சினை தீர்வில் சரியான, திட்டமிடப்பட்ட ரீதியில், மீண்டும் ஒரு தடவை யுத்தமோ, பிரச்சினையோ ஏற்பக்கூடாது என்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். கிடைக்பெறுகின்ற தீர்வில் முஸ்லீம்களுக்கும் சரியானதும், நியாயமானதும் பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் முஸ்லீம்கள் கவனமாக இருக்கின்றனர். ஏனெனில் கடந்தகால கசப்பான நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை முட்டி மோதாதவாறு தீர்வு கிட்ட வேண்டும் என்பதில் தலைவர்களும் சரி, முஸ்லீம் மக்களும்சரி உறுதியாக இருக்கின்றார். ஆனால் தம்புள்ள போன்ற பிரச்சினைகள் பேரினவாதிகளால் முன்னெடுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் போன்றவர்கள் தமது அமைச்சுப் பதவியை துச்சமென மதித்து அள்ளிவீசிடவும் தான் சார்ந்த சமய, சமூகப்பற்றுடன் காணப்படுகின்றார்கள். அதேபோன்றொரு விடயத்திற்காக மன்னாரில் பல இடங்களில் முஸ்லீம்களுக்கான மீளக்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது தனிப்பட்ட ரீதியில் பிரச்சினைகளை தூண்டிவிடும் சிலர் மேற்கொள்கின்ற எதிர்வாதங்களுக்கு துணையாக பின்னணியில் நிற்கும் உண்மையை அங்குள்ள மக்கள்தான் அறிவார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகள்பற்றி பிரஸ்தாபிக்கின்றபோது தம்புள்ள பிக்கு எப்படி முஸ்லீம்களையும், அவர்களது வணக்க வழிபாட்டுக்குத் தடையாக அமைந்திருந்தாரோ அதுபோன்றொரு நிலையில் மன்னாரிலும் சுட்டிக் காட்டப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை என்பதை உணர்ந்துகொண்டால் சரி. அந்நிய மதங்களை மதிக்கும் முஸ்லீம்களின் ஒருகுரலாகவும், வாழ்விழந்து தவிக்கும் மக்களின் ஏக குரலாகவும் பேசுவது, குரல் எழுப்புவதும் தேவையற்ற ஒன்றா? என்கிற சந்தேகமும் எழாமலில்லை. மேலும், மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் முஸ்லீம்கள் வாழ்;ந்திருந்தாலும் அம்மாவட்டம் முழுவதையும் முஸ்லீம்களுக்கான நிலமாக கோருவதற்கோ, நிலத்தைப் பிடிப்பதற்கோ அமைச்சரோ அல்லது அவரது சகாக்களோக முற்படவில்லை. அபிவிருத்தி என்கிற பேரில் முஸ்லீகளின் காணிகள் கோரப்பட்டிருக்கலாம். எல்லோருக்கும் நன்மை பயக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்வதற்கு முற்பட்டிருக்கலாம். ஆனால் மற்றொரு இனத்தை தோற்கடிக்கும் நிலைக்கு வரக்கூடாது அல்லவா.

மக்களின் பிரதிநிதியான அமைச்சர் அம்மக்களின் துயருக்காக தெரிவிக்கின்ற கருத்துக்களை நியாயம் அற்றது என்கிற கோதாவில் எள்ளிநகைப்பதும், முஸ்லீம்கள் வாழ்ந்த பிரதேசங்களை விட்டுக் கொடுப்பதற்கு தடையாக இருக்கின்றவர்களையும் பற்றி கூறுவதும் பிழையான செயற்பாடாக அமையுமா? காணிக்கச்சேரி மூலமாக காணிகள் பெற்றுக் கொடுக்க முற்பட்போதும், சில பிரதேசத்துக் காணிகளுக்கான உரிமைச்சான்றுகள் இருந்தும் அதனை உரிமை கொண்டாட முற்பட்டபோதும் இன்னும் இன்னும் எத்தனையோ விடயங்களில் மதிப்புக்குரியவர்கள் தடைபோட எத்தனிக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது எதிரான வாதங்களைப் புரிபவர்கள் உடந்தையாக இருக்கின்றார்கள். என்றே நாமும் கருதுகின்றோம். எனவே. நமக்கு முன்னே கிடக்கின்ற சமூதாயப்பணிகளில் ஆட்சியாளர்களிடம் தமக்குரிய பங்கைக் கேட்டுப் பெறுகின்ற அரசியல்வாதிகளாகவும், மக்களின் துயர்துடைக்கின்றவர்களாகவும் மாற்றம் பெறவேண்டும்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரையும், அவரது சேவைகளையும் கொச்சைப்படுத்தி அனைத்தும் முஸ்லீம்களுக்குத்தான் செய்கின்றார் என்கிற வாதங்களை முன்வைத்து அறிக்கைவிடும் மன்னர்களாக இருக்கின்றார்கள். செய்வதை விடுவதுமில்லை. செய்வதை அங்கீகரிப்பதுமில்லை. தான் செய்வதுமில்லை. கண்டபலன்தான் என்ன. கடந்த 30ஆண்டுகளாக நீங்கள் போராடிப் பெற்றதுதான் என்ன? உங்கள் மண்;;;;, எங்கள் மண், நமது மண் என்று மண்ணை கூறுபோட்டுப் பார்த்தவர்கள் எல்லாம் எங்கே? அற்பசொற்ப வாழ்வுக்காக நம்மையும், நமது வாழ்வையும், நமது எதிர்கால சிற்பிகளையும், சமுதாயத்தையும் காலம்முழுவதும் கண்ணீரில் கரையவைப்பதில்தான் என்ன இலாபம். நமக்குள் இருக்கின்ற பகைமைகள்தான் என்ன? அன்று வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த எம்மூதாதையர்கள் தமிழர்கள்தான். நாங்கள் மதிக்கின்றோம். அதற்காக இஸ்லாமிய அடிப்படையில் வாழுகின்ற அமைச்சர் றிசாத் போன்றவர்கள் செய்கின்ற அனைத்தையுமே மாற்றுக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கின்ற ஒரு சமூக எதிராளிகளாக வாழ்ந்து என்னதான் பயன் கிடைக்கப்போகிறது. ஐயா.பெரியவர்களே! ஆட்சியில் எதிர்க்கட்சியில் அமர்ந்து சதா சண்டைபிடித்துக் கொண்டு உண்ணவும்விடாது, பண்ணவும்விடாது எதனையுமே எதிராகப் பார்க்கப்பழக்கப்பட்டுப்போனவர்களே நாம் நன்றாக வாழ்வது பிடிக்கவில்லை என்றால் எம்மை முற்றாக அழித்துவிட்டு நீங்கள் மட்டும் நிம்மதியாக எத்தனைகாலம்தான் வாழப்போகின்றீர்கள். இன்று எத்தனையோ வருடங்களாக பலஸ்தீனத்தை உண்மையான ராஜ்ஜியத்தை ஆண்டவர்களை கிண்டிஎழுப்பிவிட்டு எங்கிருந்தோ வந்தவர்கள் இஸ்ரேல் என்றொரு நாட்டையே உருவாக்கவில்லையா?

இன்று இந்த சின்னஞ்சிறு நாட்டுக்குள் அரசியல் பிரச்சினை, ஆட்சியில் நீதிப்பிரச்சினை, இனப்பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினைகள் எரிந்து கொண்டிருக்கின்றன. தேசிய பிரச்சினைகளுக்கு ஓரளவாவது தீர்வை காண்கின்ற போராட்டத்தில் உங்களுடன் எமது முஸ்லீம் தலைவர்களும், அதன் மக்களும் ஒத்துழைப்பு நல்கிட ஓடோடி வருவதற்காகவே காத்துக்கிடக்கின்றார்கள். ஆனால் நீங்கள் குறிப்பாக எப்போதுமே பிழை பிடிக்கின்ற ஒரு கூட்டம் பாராளுமன்றிலும், வெளியிலும் சதா அதே எண்ணத்துடன் வாழ்ந்து கண்ணை மூடிக் கொண்டு பூனை பால் குடிப்பதுபோல அலையாது உண்மையான மனிதாபிமான, நாம் மொழியால், பழக்கவழங்கங்களால் ஒன்றாகிப்போன தமிழ் முஸ்லீம் உறவுகளை அரசியல்வாதிகளைக் கடந்து ஏன் நம் இருசமுகமும் ஒற்றுமையாக நமக்குள் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாது. சிந்தனை செய்து பாருங்கள். யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பதையெல்லாம் விட்டுவிட்டு நீங்களும், நாங்களும் ஒன்றாக இருந்து பேசி இனிமேலாவது ஒற்றுமையாக வாழ்வதற்கான பொறாமைத்தனத்தை இல்லாமல் செய்திட இன்றைய இளைஞர்களே நீங்கள் முதலில் முன்வாருங்கள். நாளை நல்லதே நடக்கும் என்பதை என்றும் நினைவில்கொள்வோம்.

                 (உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்)


No comments

Powered by Blogger.