Header Ads



அசாதாரன நிகழ்வுகள் - மக்களின் அச்சம் போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா..?


இலங்கையில்  அசாதாரண நிகழ்வுகள் சிலவற்றால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு வருகிறது. மாயன் நாட்காட்டி குறித்த வதந்தி இலங்கையில்  அதிக பீதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், விண்கற்கள் சில விழுந்த சம்பவங்களும் கடந்த வாரம் இடம்பெற்றன. 

இதனால் பீதியுற்றிருந்த மக்களுக்கு நேற்று, காலி, மாத்தறை பகுதிகளில் பெய்த சிவப்பு மழை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.  ஏற்கனவே இலங்கையில் பல இடங்களில் சிவப்பு மழை பெய்திருந்தது. 

பொலநறுவையில் அசாதாரணமாக நாய்கள் இறந்து கிடந்ததற்கும் சிவப்பு மழையின் தாக்கமே காரணம் என்றும் கூறப்பட்டது. 

இந்தநிலையில், நேற்று மாத்தறை, கிரிந்த, புஹுல்வெல்ல பிரதேசத்திலும் சிவப்பு மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் வரை இந்த மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, காலியில் மத்தேகம, வந்துரம்பையிலும் நேற்று சுமார் 15 நிமிடங்கள் சிகப்பு மழை பெய்துள்ளது. 

மேலும் கம்புறுப்பிட்டியவில் நேற்று மழையுடன் மீன்களும் வானத்தில் இருந்து வீழ்ந்துள்ளன. 

இதனால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருந்தொகைப் பாம்புகள் நேற்று மாலை படையெடுத்துள்ளன.  இரண்டு தொடக்கம் நான்கு அடி நீளம் வரையான இந்தப் பாம்புகளை காண பொதுமக்கள் கூடி வருகின்றனர். 

கடந்த 2004ம் டிசம்பர் 26ம் நாள் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரும், இதுபோன்று கல்லடிப் பாலத்தில் பெருந்தொகைப் பாம்புகள் படையெடுத்திருந்தன. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட முன்னரும் இதுபோன்று கல்லடிப் பாலத்துக்குக் கீழ் பெருந்தொகைப் பாம்புகள் படையெடுத்து வந்தன. 

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட நினைவு நாள் நெருங்கி வரும் நிலையிலும், மாயன் நாட்காட்டி பற்றிய வதந்தி பரவியுள்ள நிலையிலும், நிகழ்ந்து வரும் இத்தகைய அசாதாரண சம்பவங்கள் இலங்கை மக்களிடையே பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

எனினும், சிவப்பு மழை, மீன் மழை, பாம்புகளின் படையெடுப்பு, நாய்களின் அசாதாரண மரணங்கள், விண்கற்கள் பற்றிய அச்சம் போன்ற சந்தேகங்களைத் தீர்க்க, தகுந்த விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அளிக்க இலங்கை அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.