இறுதிநேரத்தில் பல்டியடித்த அமைச்சர் றிசாத்தும், அதாவுல்லாவும்..!
(Un) 13 ஆவது திருத்தத்தை நீக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தி அரச கூட்டணியிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த மனுவில் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை.
ஆட்சிப்பீடத்தின் முக்கிய பல தரப்புகளிலிருந்து பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களையடுத்தே இவ்விரு கட்சிகளும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன என்று தெரியவருகின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய அரசின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியிருந்தது. அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோரும் பேரினவாத சிங்கள அமைப்புகளும் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் இந்த விவகாரம் தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும் பேசப்படும் முக்கிய விடயமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்களும், ஆளுந்தரப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தினர்.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., அ.இ.ம.கா., தே.கா. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட மேலும் சிலர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் 13 ஆவது திருத்தம் நீக்கப்படக்கூடாது என்றும், மாகாணசபைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் எனவும் கோரி ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்பிவைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
ஆயினும் ஆரம்பத்தில் இந்த மனுவில் கையொப்பமிட்டிருந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இறுதி நொடியில் தமது பெயர்களை நீக்குமாறு இவ்விரு கட்சிகளும் கோரியிருந்தன. இதனால் மேற்படி இரு கட்சிகளின் ஆதரவின்றியே அந்த மனு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment