வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின நிவாரணம் எங்கே..?
கிழக்கு மாகாணம் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாநாடு தேவைதானா? என்று முஸ்லிம் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் அஸாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார். அதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசார காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறியமை கிழக்கு மாகாண மக்களுக்கு இழைத்த துரோகமாகும். வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு தனது கோட்டையிலிருந்து வெளியேறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் வருடாந்த மாநாட்டை கொழும்பில் நடத்தியுள்ளமை கவலைக்குரியது.
கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. பல கிராமங்களுக்கு இதுவரை செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தநிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டை நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் சார்பாகவோ, தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சார்பாகவோ இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நடந்து கொள்ளும் விதம் கண்டு கிழக்கு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேவேளை மக்களுக்கான நிவாரணங்களை உரியமுறையில் வழங்க பாதிக்கப்பட்ட இடங்களில் அவசர கால நிலை பிரகடனம் செய்யப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் முஸ்லிம் காங்கரஸோ வெள்ளத்தில் நீந்தியாவது கொழும்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு வாருங்கள் என்று மக்களுக்கு கட்டளைப் பிறப்பித்துள்ளது. அது மக்களைப் பற்றிய அலட்சியப் போக்கையே சித்திரிக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனான தனது செல்வாக்கை முழுமையாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்ததாக எந்தவித தகவலும் இல்லை.என்றார்.
Post a Comment