சிரிக்கும் வலிப்பு நோய்
இந்தியா - புதுச்சேரி ஜிப்மரில், சிரிக்கும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் ஒரு வயது பச்சிளம் பெண் குழந்தை அடிக்கடி தேவையில்லாமல் அனைவரையும் பார்த்து சிரித்தது. குழந்தை சிரிக்கும் நேரத்தில், அது தன் நிதானத்தை இழப்பது கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.அக்குழந்தையை, ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்ததில், குழந்தைக்கு "ஹைபோதலாமிக் ஹமார்டோமா' எனும் சிரிக்கும் வலிப்பு நோயை ஏற்படுத்தும் அரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
பெற்றோரின் ஒப்புதலின்பேரில், உயிருக்கு ஆபத்தான இந்த கடின அறுவை சிகிச்சை ஜிப்மரில் மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ரூபேஷ்குமார் தலைமையில் நரம்பியல் துறை மருத்துவ குழுவினர் மைக்ராஸ்கோப் மூலம் 4 மணி நேரங்கள் போராடி அந்த சிறிய கட்டியை முற்றிலும் அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு சிரிக்கும் வலிப்பு நோய் நின்று ஆரோக்கியமாக இருக்கிறது. இனி அக்குழந்தைக்கு மூளை வளர்ச்சியிலும் எந்த பாதிப்பும் இருக்காது.
நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ரூபேஷ்குமார் கூறுகையில் ""ஹைபோதலாமிக் ஹமார்டோமா' எனும் சிரிக்கும் வலிப்பு நோய் கட்டு அபூர்வமாக ஒருவருக்கு ஏற்படும். இந்த அரிய வகை கட்டியைக் கண்டுபிடித்து சிறுவயதிலேயே உரிய சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
இல்லையெனில் இந்தக் கட்டி கட்டுக்கடங்காத வலிப்பு நோயை ஏற்படுத்தும். வயது ஆக, ஆக மூளை வளர்ச்சியை குன்றிப் போகும். இந்த நோயை மருந்து வகைகளால் சரி செய்ய முடியாது. அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றினால் மட்டுமே குணமடைய செய்யமுடியும். ஹைபோதலாமஸ் என்பது மூளையின் கட்டுப்பாட்டையும், நரம்பு இதயம், ஹார்மோன்கள், உப்பு சத்து போன்றவற்றை கட்டுப்படுத்தும் நரம்பு ஆகும். இந்த நரம்பு மூளைக்கு மிகவும் அடியில் மிக முக்கிய இடத்தில் இருந்து தன் வேலையைச் செய்கிறது. மேலும் நரம்பைச் சுற்றி முக்கிய நரம்புகளும், ரத்த குழாய்களும் செல்கிறது. இந்த இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது மட்டுமல்லாமல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடியதாகும்.இந்தச் சவால்களைக் கடந்து வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து குழந்தையை குணப்படுத்தியுள்ளோம்' என்றார்.
Post a Comment