Header Ads



அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் எழுத்துமூல வாக்குறுதி நிறைவேறுமா..?



சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பொதுமக்கள், தமக்குரிய வீடுகளை உடன் வழங்குமாறு கோரி, 26-12-2012 இன்று காலை முதல் நண்பகல் வரை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்னாலுள்ள அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். 


சவூதி அரேபியாவின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு உடன் வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


அக்கரைப்பற்றில் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடகளை இழந்த தமக்கு இதுவரை அரசாங்கத்தினால் வீடுகள் வழங்கப்படவில்லை என்றும், தமக்கான வீடுகளை வழங்குவதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பல தடவை வாக்குறுதி வழங்கியிருந்த போதும், இதுவரை தமக்கான வீடுகள் கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 


இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.  இந்த நிலையில்  அக்கரைப்பப்று பிரதேச செயலாளர் எம்.வை. சலீம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி, இவ் விவகாரம் தொடர்பில் ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதற்காக தனக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு கோரினார். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அந்தக் கோரிக்கைக்கு இணங்கவில்லை. 


இதனையடுத்து, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியதோடு, இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளருடன் பேசி, எதிர்வரும் 03 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கிடைக்க தான் ஆவண செய்வதாக எழுத்து மூலம் உறுதியளித்தார். 


அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடமிருந்து எழுத்து மூலமான உறுதியினைப் பெற்றுக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நண்பகல் 1.00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 




1 comment:

  1. இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் எங்கே ?

    இப்போது அவர்கள் அவர்களது அமைச்சுக்கள் மூலம் அனுபவிக்கக்கூடியவற்றை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் போலும்.

    தேர்தல்காலங்களில், அவர்களே இந்நாட்டின் முஸ்லிம்களின் தலைவர்கள் போன்றும், இந்நாட்டின் ஜனாதிபதி போன்றும் பேசுகின்றனர்.
    ஆனால் இப்போ, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண "எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வீடுகள் கிடைக்க 'தான் ' ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்."

    யார் முஸ்லிம்களின் தலைவர் ? பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவா ?

    ReplyDelete

Powered by Blogger.