முர்ஸியின் வரம்பற்ற அதிகாரங்கள் ரத்தானது - திட்மிட்டபடி சர்வஜன வாக்கெடுப்பு
தமக்கு வரம்பற்ற அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் சர்ச்சைக்குரிய அரசியல் சாசன அறிவிப்பை ரத்துச் செய்வதாக எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி அறிவித்துள்ளார். எனினும் புதிய அரசியல் அமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டவாறு எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சர்வாதிகாரி போல் செயற்படுவதாக எதிர்ப்பாளர்கள் கூறிவரும் நிலை தாம் புரட்சியை பாதுகாக்கவே செயற்படுவதாக ஜனாதிபதி முர்சி வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் எதிர்ப்பாளர்களின் பிரதான கூட்டணியான தேசிய மீட்பு முன்னணியின் கட்சியான எகிப்து சுதந்திர கட்சியின் அறிக்கையில், “ஜனாதிபதியின் புதிய அறிவிப்பில் சர்வஜன வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி முர்சி அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களை கடந்த சனிக்கிழமை சந்தித்து தற்போதை அரசியல் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து “ஜனாதிபதியின் அரசியல் சாசன அறிவிப்பு இந்த நொடி முதல் ரத்தாகிறது” என அறிவிக்கப்பட்டது. எனினும் புதிய அரசியல் அமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டவாறு நடைபெறும். ஏனெனில் அதனை ரத்துச் செய்யும் அதிகாரம் தற்போது ஜனாதிபதிக்கு இல்லை என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இதில் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கும் புதிய அரசியல் அமைப்பு குறித்தும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த அரசியல் அமைப்பு இஸ்லாமிய வாதிகளை பெரும்பான்மையாக கொண்ட அரசியல் அமைப்பு குழுவாலேயே பூர்த்தி செய்யப்பட்டது.
எனவே மிதவாதிகள், மதச்சார்பற்றோர், முபாரக் ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை கொண்ட எதிர்ப்பாளர்கள், இந்த அரசியல் அமைப்பு முழு எகிப்து சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். tn
Post a Comment