தூக்கு தண்டனையை ரத்து செய்யகூடாது - இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்து
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் அரசை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மரண தண்டனையை ரத்து செய்வது என்பது ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.
மரண தண்டனையைக் கைவிடுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு முன்பு இஸ்லாமிய அமைப்புகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று இஸ்லாமிய கொள்கை கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
கவுன்சிலின் தலைவர் மெüலானா முகமது கான் ஷெரானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த கவுன்சிலில் மூத்த இஸ்லாமிய மத குருமார்கள், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கூட்டத்தில் தூக்கு தண்டனை தொடர்பாக அரசு எடுக்கும் எந்த முடிவு குறித்தும் முன் கூட்டியே ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தக் கவுன்சிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும். அரசு எடுக்கும் எந்த முடிவும் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு முரணாக அமைந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது குறித்து அரசு பரிசீலிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள மரண தண்டனையைக் கைவிட்டாக வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் அரசு மரண தண்டனையைக் கைவிடுவது குறித்து பரிசீலித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இஸ்லாமிய கவுன்சில் இது குறித்து ஆலோசித்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டால் தூக்கு தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜீத் சிங் உள்ளிட்ட பலரும் பயனடைவர்.
சக வீரரை சுட்டுக் கொன்ற ராணுவத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த மாதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை இதுவாகும்.
Post a Comment