'இறைவனின் சட்டத்திற்கு மக்கள் ஆதரவு' 'ஜனாதிபதியின் முடிவுக்கு மக்கள் ஆதரவு'
சர்ச்சையை கிளப்பியுள்ள எகிப்தின் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி மொஹமட் முர்சி அறிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஆவணம் குறித்து அனைத்து எகிப்தியரும் ஒன்றிணைந்து இதற்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். “எகிப்தியர் தமது நிறுவனங்களூடே எவ்வாறு ஜனநாயக முறையை அமைக்கப் போகிறார்கள் என்பதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது” என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எகிப்தில் ஜனாதிபதியின் ஆணையைத் தொடர்ந்து உள்நாட்டில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்தே புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நடவடிக்கை விரைவுபடுத்த ப்பட்டது. இதன்படி கடந்த வியாழக்கிழமை அரசியல் அமைப்புக் குழு அன்று நள்ளிரவு வரை தொடர்ச்சியாகக் கூடி மொத்த உறுப்புரைகளான 234 ஐயும் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியது. எனினும் 100 பேர் கொண்ட அரசியல் அமைப்புக் குழுவில் இருந்த மிதவாதிகள், மதச் சார்பற்றோர் மற்றும் கிறிஸ்தவர்கள், வலுக்கட்டாயமாக மாற்றம் கொண்டுவர முடியாது என குற்றம் சாட்டி மேற்படி குழுவில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
“உரிமைகளை துச்சமாக மதிக்கும் சர்வதேச சட்டங்களை மீறும் ஒரு அரசியல் அமைப்புக்கே முர்சி கருத்துக் கணிப்பை கோரியுள்ளார்” என முன்னணி எதிர்த் தரப்பினரும் நோபல் விருது வென்றவருமான மொஹமட் அல் பரதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவாக நேற்று முன்தினம் ஆயிரக்கணக் கானோர் செய்ரோ பல்கலைக்கழகத்திற்கு வெளியில் ஒன்றுகூடினர். இதன்போது, “ஜனாதிபதியின் முடிவுக்கு மக்கள் ஆதரவு” மற்றும் “இறைவனின் சட்டத்தை கொண்டுவர மக்கள் ஆதரவு” போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தி நின்றனர்.
இதில் முர்சி ஜனநாயக முறையிலான தேர்தல் மூலம் தேர்வானவர் என்றும் மிதவாதிகள் மற்றும் மதச் சார்பற்றோர் எகிப்தின் பெரும்பான்மை மக்களை பிரதிபலிக்கயில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷம் எழுப்பினர்.
எனினும் முர்சியின் புதிய ஆணை மூலம் புதிய சர்வாதிகாரி ஒருவர் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவரது எதிர்ப்பாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதியின் புதிய ஆணையின்படி நீதித்துறை உட்பட எவருக்கும் ஜனாதிபதியின் முடிவை ரத்துச் செய்யும் அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்த ஆணைக்கு எதிராக எகிப்தின் சிரேஷ்ட நீதிபதிகளும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு கடந்த ஒருவாரமாக எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதிக்கு எதிராக கெய்ரோவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் ஒரு சில எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் முகாமிட்டுள்ளனர். tn
Post a Comment