காலித் மிஷாலின் காஸா விஜயம் - 'ஹமாஸ் என்பது ஹமாஸ்தான்' என்கிறது இஸ்ரேல்
(tn) பலஸ்தீனின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் முதல் முறையாக நேற்று காசாவுக்கு விஜயம் மேற்கொண்டார். ஹமாஸ் அமைப்பின் 25 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டே அவர் காசாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவர் 08-12-2012 இன்று நடைபெறவுள்ள பாரிய ஊர்வலத்தில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
காசாவுக்கு இஸ்ரேல் தவிர்த்து உள்ள ஒரே எல்லையான எகிப்தின் ரபா வாயிலூடாக நேற்று மாலை காலித் மிஷால் ஹமாஸ் அமைப்பினரின் பெரு வரவேற்புடன் காசாவை அடைந்தார். எனினும் அவரது மனைவி நேற்றைய தினமே காசாவை வந்தடைந்தார். காலித் மிஷாலின் விஜயத்தின் போது அவர் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர் அஹ்மட் யாசின் மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் அண்மையில் கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி அஹமத் ஜபரியின் வீட்டுக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் 8 நாள் உக்கிர தாக்குதலுக்கு ஆரம்பமாக ஜபரி ரொக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த உக்கிர மோதலில் 170 பலஸ்தீனர் கொல்லப் பட்டதோடு பலஸ்தீன போராளிகளின் ரொக்கெட் தாக்குதலில் 6 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இதில் ஆக்கிரமிப்புக்கு எதிரான வெற்றியின் விளைவாகவே காலித் மிஷாலின் வருகை பதிவாவதாக ஹமாஸ் பேச்சாளர் சமி அபு சஹரி குறிப்பிட்டார்.
காலித் மிஷாலின் மூன்று நாள் விஜயத்தின்போது இன்றைய தினம் காசாவில் பாரிய ஊர்வலம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊர்வலத்தின் போது மிஷால் ஹமாஸ் அமைப்பின் எதிர்காலம் தொடர்பில் உரையாற்றுவார் என்றும் அதன் போது இஸ்ரேலுடனான ஹமாஸ் அமைப்பின் ராஜதந்திர உறவுகள் குறித்தும் அவர் விளக்குவார் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, பலஸ்தீன எதிர் அமைப்பான மேற்குக் கரையை ஆளும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பதா அமைப்புடனான உறவை மேம்படுத்துவது தொடர்பிலும் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஆலோசிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தனது காசா விஜயத்திற்கு முன்னர் ராய்ட்டருக்கு கருத்து தெரிவித்த காலித் மிஷால் பலஸ்தீன தேசிய அரசு ஒன்றுக்கான வாய்ப்பு தற்போது அதிகரித்திருப்பதாக கூறினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் யிகால் பல்மொர் கூறும்போது, எகிப்திலிருந்து யார் காசாவுக்கு செல்கிறார்கள் என்பது பற்றி இஸ்ரேலால் கருத்துக் கூற முடியாது என்றார். ‘ஹமாஸின் தனிப்பட்ட நபர்கள் குறித்து எமக்கு எந்த நிலைப்பாடும் இல்லை’ என கூறிய அவர் ‘ஹமாஸ் என்பது ஹமாஸ்தான்’ என்றார்.
காலித் மிஷாலின் வருகையை ஒட்டி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் பிரமாண்ட மேடை ஒன்று காசாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் இஸ்ரேலை தாக்கிய ரொக் வடிவிலான ரொக்கெட் பொம்மை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ரொக்கெட்டில் ‘காசா தயாரிப்பு’ என குறிப்பிடப் பட்டிருந்தது. இங்குதான் இன்றைய தினத்தில் ஹமாஸ் ஊர்வலம் நடைபெறவுள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான முதலாவது இன்திபாழா போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஹமாஸ் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. அந்த அமைப்பின் அடிப்படை கொள்கையில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை அங்கீகரிப்பதில்லை.
Post a Comment