இந்தியா தோல்வி - கேலரியில் இருந்து ஆட்டத்தைப் பார்த்த ரசிகர் மாரடைப்பால் மரணம்
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 25-12-2012 முதல் முறையாக இந்தியாவில் 20 ஓவர் போட்டியில் மோதின. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு போட்டி நடந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் போட்டி என்பதால் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்தனர். போட்டியின் இறுதியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவும் நிலையில் இருந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் சென்றது. அப்போது கேலரியில் இருந்து ஆட்டத்தைப் பார்த்த ரசிகர் ஒருவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். உடனே ஸ்டேடியத்தில் இருந்த ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி மல்லையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் பெயர் கமல் ஜெயின் (வயது 47), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் பெங்களூரில் தங்கி தொழில் செய்து வந்தவர் என்று தெரியவந்தது. அவருடன் மேலும் சிலர் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்திருந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று கமல் ஜெயினை பார்த்தனர்.
அவர்கள் கூறும்போது, போட்டியை கமல் ஜெயின் ரசித்து பார்த்தார். பாகிஸ்தான் விளையாடியபோது அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். தோல்வியின் விளிம்பில் இந்தியா சென்று கொண்டு இருப்பதை காண சகிக்காத அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று பெங்களூர் துணை கமிஷனர் ரவிகந்தே கவுடா தெரிவித்தார்.
Post a Comment