மௌலவி சுபியானுடன் விந்தன் வாக்குவாதம் - யாழ் மாநகர சபை கூட்டத்தில் சம்பவம்
தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும். அதற்காக ஏன் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்கிறார் யாழ். மாநகர சபை ஆளும்கட்சி உறுப்பினர் சுபியான்.
யாழ். மாநகரசபையின் 2012 ஆம் ஆண்டுக்காக மாதாந்த இறுதிக் கூட்டம் 24-12-2012 காலை 10.30 மணிக்கு யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டநிறைவில் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தனது கருத்தினை முன்வைக்கும் போதே பதிலுக்கு விவாதித்த சுபியான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த வாரம் யாழ். மாநகர சபையினால் ஒளிவிழா கொண்டாடப்பட்டிருந்ததை தாம் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தோம். எமக்கு அறிவித்தல் எதுவும் விடப்படவில்லை என்றும் எதிர்கட்சி சார்பில் விந்தன் கனகரத்தினம் சபையில் தெரிவித்தார்
அத்துடன் நடைபெற்று முடிந்த ஒளிவிழாவின் போது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதனை ஒரு போதும் யாராலும் தடுக்க முடியாது. இறந்தவர்களை மக்கள் தமது வீடுகளில் நினைவு கூரலாம் என்றும் மாநகர சபை முதல்வர் கூறிய கருத்தையும் சபையில் கூறி அவருக்கு நன்றியும் தெரிவித்து தொடர்ந்தும் கருத்துரைத்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த 30 வருடங்களாக எமக்காக தமது உயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள், போரின் போது கொல்லப்பட்ட மக்கள் , அரசியல் தலைவர்கள் என இலட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இறந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செய்வதனை யாராலும் தடுக்க முடியாது. அது எமது உரிமை.
வடக்கு கிழக்கு மட்டுமன்றி தெற்கிலும் போரின் போது கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கும், கலவரங்களின் போது கொல்லப்பட்ட ஜே.வி.பியினருக்கும் நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டு வருடா வருடம் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை இதனை யாராலும் தடுக்க முடியாது.
ஆத்ம சாந்திக்காக அனுஷ்டிக்கப்படும் அஞ்சலிகள் வீடுகள் , பாடசாலைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என எங்கும் அனுஷ்டிக்க முடியும். அது எமது உறவகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக அமைகின்றது என தெரிவிக்கும் வேளையில் குறுக்கிட்டார் எதிர்கட்சி உறுப்பினர் சுபியான்.
நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் புலிகள். அவர்களுக்கு எவ்வாறு பகிரங்கமாக அஞ்சலி செலுத்த முடியும் அவ்வாறு செலுத்தினாலும் ஏன் கல்விக்கூடங்களைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் அரசியலுக்காக ஏன் பல்கலை மாணவர்களைத் தூண்டி விடுகின்றீர்கள். நீங்கள் அந்த தடை செய்யப்ட்ட இயக்கத்தை தான் ஆதரிக்கிறீர்கள் என்று தெரியும் என வந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
அவரின் கருத்தினை மறுதலித்த விந்தன் கனனரத்தினம் இவ்வாறு நீங்கள் கூறுவீர்கள் ஆனால் இந்த மண்ணிலேயே இருக்க தகுதி இல்லாதவர்கள். அவ்வாறு மிகவும் அமைதியான முறையில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்களது விடுதிக்குள்ளும் பல்கலைக்கழகத்திற்குள்ளும் நுழைந்து மாணவர்களைத் தாக்குவதற்கு என்ன உரிமை இராணுவத்திற்கு இருக்கிறது? பொலிஸார் ஏன் அங்கு செல்ல வேண்டும்? யார் அவர்களை அழைத்தது என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து பதிலளித்த மாநகர சபை முதல்வர் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது ஒவ்வொருவரது கடமை. ஆனாலும் அஞ்சலி செலுத்துவதற்கான இடத்தினை தெரிவு செய்து செலுத்த வேண்டும் என்றார்.
எனினும் கடந்த மாதாந்தக் கூட்டத்தில் இது குறித்த பிரேரணை ஒன்று கொண்டுவர எதிர்கட்சி முடிவெடுத்தாலும் வாய்த்தர்க்கங்களினால் கூட்டம் முடிவுறாது கலைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment