அரசாங்கத்திற்கு பேரதிர்ச்சி - எதிர்க்கட்சி விலகியது - மஹிந்த அவசர கூட்டத்திற்கு அழைப்பு
(tm) பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வர் வாபஸ் பெற்றுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் விஜித்த ஹேரத் ஆகியோரே நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து வாபஸ் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.
ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடியது.
இதில் பிரதம நீதியரசர் சமூகமளிக்கவில்லை. இன்றைய தினம் தான் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் தோன்றப் போவதில்லை என அவர் நேற்றைய தினமே அறிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் இணை கட்சிகளின் தலைவர்களுடனான அவசர கூட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் மேற்கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக இந்த அவசர கூட்டம் நடத்தப்படவுள்ளது.
Post a Comment