Header Ads



யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் இடைக்கால நிர்வாகக் குழு தெரிவு


(யாழ் முஸ்லிம் இணைய சிறப்பு நிருபர்)

16 டிசம்பர் 2012 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வளாகத்தில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. புத்தளம் பெரிய பள்ளிவாயலின் பிரதம நிர்வாகி அல்-ஹாஜ் முஸ்ஸம்மில், மற்றும் சமூக சேவைகளுக்கான செரந்திப் நிறுவனத்தின் பணிப்பாளர் எச்.அஜ்மல் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் போதியளவு சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் வருகை தந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து முக்கிய தீர்மானங்களும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள இக்கால கட்டத்தில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஒரு பலமான கட்டமைப்பாக இருக்கவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசப்பட்டது. அதன்போது சம்மேளனத்தின் ஒழுக்கக்கோவை ஒரு சீரான யாப்பாக வடிவமைக்கப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. எனவே முதன்மையாக சம்மேளனத்திற்கான யாப்பு தயாரிக்கப்படவேண்டும் எனத்தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஒரு யாப்பு நிர்ணயக்குழு சகோதரர்.நாஸர் அவர்களின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2013 ஜனவரி 20ம் திகதி பிரதிநிதிகளுக்கான பொதுக்கூட்டம் நட்டாத்தப்படும் என்றும் அதில் யாப்பு சபையோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. யாப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர் சம்மேளனத்திற்கான 2013ம் ஆண்டிற்கான நிர்வாக்குழு தெரிவு இடம்பெறும். அதுவரை இடைக்கால நிர்வாகக்குழு செயற்பாட்டில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இடைக்கால நிர்வாகக்குழுவில், தலைவராக சகோ.நிலாம், உப தலைவராக சகோ. எம்.எல்.லாபிர், செயலாளராக. சகோ.நாஸர், உப செயலாளராக சகோ.அஸ்மின் அய்யூப், பொருளாளராக சகோ.சுபுஹான் ஆகியோர் கடமையாற்றுவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.