மேர்வின் சில்வா அதிரடி - பன்றி பண்ணையை இழுத்து மூடினார்
(TM)
திவுலபிட்டிய, ரஞ்சாபொல, எத்திலியபொல பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த பன்றிப் பண்ணையொன்றை இழுத்து மூடியுள்ளார் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா. மேற்படி பன்றிப் பண்ணையால் பிரதேசவாசிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள் என்று தனக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த பண்ணையை தான் மூடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஒருவர் செய்யும் செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் பட்சத்தில் இன, மத, குலம் என்று பாராமல் அவ்விடத்தில் நான் நிற்பேன். அந்தவகையிலேயே இந்த பன்றிப் பண்ணை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக இங்கு வந்துள்ளேன்.
பன்றிப் பண்ணைகளை நடத்துவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. இந்த பன்றிப் பண்ணையை நடத்துபவர் இது தொடர்பில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமாயின் அதற்கான உதவிகளைச் செய்ய நான் தயாராக உள்ளேன். ஆனால், உரிய தரத்துடன் பன்றிப் பண்ணை நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது பொதுமக்களின் சுகாதாரத்துக்கு கேடாகும்.
மனிதர்கள் மிருகங்களை கொலை செய்கிறார்கள். மிருகங்களால் வாழ்கிறார்கள். அது சிற்சில மனிதர்களின் வாழ்வாதார முறைகள். சிங்கள பௌத்தன் என்ற முறையில் மிருகவதையை நான் எதிர்க்கிறேன். அதனாலேயே காளி கோயிலில் மிருகங்கள் பலி கொடுப்பதையும் எதிர்த்தேன். மிருகங்களை பலியிடுமாறு காளி ஒருபோதும் கூறவில்லை. சிலர் பணம் சம்பாதிப்பதற்கும் மாமிசம் உண்பதற்காகவும் கடவுளின் பெயரில் பலி பூஜைகளை நடத்துகின்றனர்.
அதேபோல, இந்த பன்றிப் பண்ணை தொடர்பிலும் எனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. பன்றிகளின் மலக்கழிவுகள், சிறுநீர், துர்நாற்றம் போன்றன பிரதேசவாசிகளின் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன. அதனால், இந்த பன்றிப் பண்ணையை மூடுமாறு பொதுமக்களில் 75 சதவீதமானோர் விரும்புகின்றனர். இந்த ஆதரவு பன்றிப் பண்ணையை நடத்துபவருக்கு கிடைத்திருந்தார் இதனை நான் மூட மாட்டேன்' என்று கூறியுள்ளார்.
Post a Comment