தலிபான்களின் தாக்குதல் - ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தலைவர் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தான் உளவு துறை தலைவரை குறிவைத்து தலிபான்கள் 07-12-2012 திடீர் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் உளவுதுறை தலைவர் அசத்துல்லா காலித். அமைச்சராகவும் இருந்துள்ளார். தலிபான்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தைரியமாக எடுத்துள்ளார். அதிபர் ஹமித் கர்சாய் குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அசத்துல்லாவை உளவு துறை தலைவராக கர்சாய் நியமித்தார். இதற்கு மேற்கத்திய மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆப்கனில் உள்ள காஸ்னி மற்றும் காந்தகார் கவர்னராக இவர் பணியாற்றிய போது, சிறை கைதிகளை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார். மனித உரிமைகளை மீறியுள்ளார் என்று குற்றம் சாட்டின. இதனால் சர்ச்சை நிலவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் காபூலில் அசத்துல்லா நேற்று விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது சிலர் திடீரென விருந்தினர் மாளிகை மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாக்குதலில் அசத்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். ஆனால், அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகஅவரது பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment