குழந்தைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டது - ஒபாமா
அமெரிக்கா கனெக்டி கட்டில் நியூடவுனில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 20 பேர் குழந்தைகள். இச்சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நியூ டவுனில் நடந்தது. அதில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.
அப்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குழந்தைகளின் பெயரையும், சாண்டி ஹூக் பள்ளியின் முதல்வர், ஆசிரியைகள் பெயரையும் வாசித்தார். அப்போது குழந்தைகளை காப்பாற்ற அன்பு கலந்த துணிச்சலுடன் போராடி உயிரை துறந்துள்ளனர் என பாராட்டினார்.
மேலும், அவர் கூறும் போது, இது போன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இது போன்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதில் அரசியல் உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் எனது அதிகாரத்தை பயன்படுத்தி இது போன்ற வன்முறை செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
இச்சம்பவம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைக்கான சட்டத்தின் மீது நாடு முழுவதும் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் மூலம் வன்முறை என்ற பிசாசை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டுவோம். பள்ளி குழந்தைகளை பாதுகாப்பதில் எங்களுக்கு மிகுந்த கடமை உள்ளது. அதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அஞ்சலி கூட்டத்துக்கு முன்னதாக துப்பாக்கி சூட்டில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினரை தனித் தனியாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Post a Comment