முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் (விபரம் இணைப்பு)
ஸ்ரீலங்கா பல்லின, பலமத, பலமொழி கொண்ட பன்முகமானதென்றும் பிளவுபடாது ஐக்கியப்பட்டு எல்லா சமூகங்களும் தீர்மானம் எடுப்பதில் முறையான பங்கேற்பின் மூலம் சமமாக வாழமுடியுமென்றும், அரச அதிகாரத்தை திருப்தியான அதிகாரப்பகிர்வின் மூலம் பரவலாக்கி எல்லாருக்கும் வாய்ப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தல் வேண்டும் என்பவற்றையும் உள்ளடக்கியதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்திற்கான நோக்கங்கள் இருப்பதாலும,;
அதிகாரத்தைப் பரவலாக்கி ஒப்படைப்பதன் மூலம் எல்லாக்குடிமக்களுக்கும் தன்னாட்சி செய்யும் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒரு ஆக்க பூர்வமான படிமுறையாக மாகாண சபைகள் முறை அமையும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதனால் மாகாணசபைத்தேர்தல்களில் பங்குகொண்டும் இனங்களுக்கிடையேயான பிரச்சினைக்கு இசைவிணக்க முறையில் கலந்துரையாடித் தீர்வினை எட்டுவதற்கான ஸ்ரீலங்கா அரசின் எல்லா முன்னெடுப்புகளிலும் பங்கேற்று வந்திருப்பதனாலும்,
கட்டுக்கடங்காது பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சமயங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மையற்ற அடர்த்தியானதுவும் மிகப்பரந்தளவிலானதுமான செயற்பாடுகள் குறித்து மிக ஆழ்ந்த கவலையோடும் கரிசனையோடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோக்குவதோடு அதிகாரம் பகிர்ந்து பரவலாக்கும் முயற்சியின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிட எடுக்கப்படும் முயற்சிகளையும் நடைமுறையில் இருக்கும் மாகாணசபை முறைமையை நீர்க்கச் செய்வதன் மூலம் செயற்பாட்டிலுள்ள அதிகாரப்பரவலாக்கலை முற்றாக மூடி விட, இல்லாதொழிக்கவும் மாகாண சபை முறைமையை முற்றாக நீக்கி விடவும் எடுக்கப்படும் முயற்சிகளையும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள் குடியமர்த்துவதில் காட்டப்படும் அசிரத்தையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆழ்ந்த கரிசனையுடனும் சிரத்தையுடனும் நோக்;குகிறது.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களாகிய நாம் பின்வரும் விடயங்களைக் குவியப்படுத்தி முன்னுரிமை தருவதற்காக தீர்மானம் எடுப்பதாவது:-
1. சமய வெறுப்புணர்வூட்டும் உரைகளைப் பரப்புரை செய்வது பற்றியும் சமயங்களுக்கிடையேயான சகிப்புத்தன்மையற்ற பிரச்சினைகள் குறித்தும் எல்லா சமயங்களும் சமயவழிபாட்டிடங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் எல்லா சமயச்செயற்பாடுகளும் வழிபடுமுறைகளும் மரபுகளும் பேணிப்பாதுகாக்கப்படவும் அவ்வச்சமயங்களைப் பின்பற்றுவோரின் திருப்திக்கமைய செயற்பட அனுமதிக்கப்படுவது பற்றியும் அரசு உடனடியாகக் கவனம் செலுத்துவதற்கு அரசின் மீது இயன்றவரை செல்வாக்கைப் பிரயோகித்து செயற்படுத்த அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுத்தல்
2. ஆட்சிப்பகிர்வை அடைவதற்கும் எல்லாக்குடிமக்களதும,; எண்ணிக்கையில் சிறியதான சமூகங்கள் உள்ளடங்கலாக எல்லாச்சமூகங்களதும் மதிப்புள்ள கூட்டு வாழ்வுக்கும் அதிகாரப்பகிர்வு உறுதி செய்யப்படுதல் வேண்டுமென்ற எமது பற்றுறுதியை 24ஆம் பேராளர் மாநாட்டில் வலியுறுத்துவது சாலப்பொருத்தமானதாகும்.
3. மாகாணசபைகளுக்கான பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கச்செய்யவும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மாகாணசபை முறைமையை வலுக்குறைக்கும் அல்லது சிதைக்கும் முயற்சிகளையும் அல்லது ஏதேனும் மாற்று ஏற்பாட்டுடன் இப்போது நடைமுறையில் இருக்கும் மாகாணசபையினால் செயற்படுத்தப்படும் அதிகாரங்களைப் பிரயோகிக்கக்கூடிய உடனியங்கு அமைப்பொன்றை உருவாக்கும் அல்லது எல்லாச்சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்;ளக்கூடிய வண்ணம் அரச அதிகாரம் பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கும் மாற்றுப் பொறிமுறையொன்று உருவாக்கப்படாது, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் எல்லா எத்தனங்களையும் ஏற்றுக்கொள்ளாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
4. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களாகிய நாம் அதிகாரப்பகிர்விற்கான படிமுறைகளைக் கீழறுப்புச் செய்யும் செயல்களுக்கான முயல்வுகளை எதிர்ப்போம் என்றும் ஸ்ரீலங்காவை வாழ்விடமாகக் கொண்ட அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமைகளைப் பாதுகாக்கும் உறுதிப்படுத்தும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்விற்காகப் பற்றுறுதியோடு செயற்படுவோம் என்றும் தீர்மானம் செய்கிறோம்.
5. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது இது முதற்கொண்டு நடைமுறையிலுள்ள மாகாணசபைகளின் அதிகாரத்தைப் படிப்படியாக அழிப்பதற்கான சட்டவாக்கங்களைக் கொண்டுவர எண்ணினாலோ அல்லது அதற்கு இலக்கு வைத்தாலோ அதனை எதிர்ப்பதோடு தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறையான அதிகாரப்பரவலாக்கத்தைக் கருத்துள்ளதாக்க அதனை மேலும் செம்மைப்படுத்திப் பலப்படுத்த கடும் முயற்சி செய்வோம் என்றும் உறுதி பூணுகிறோம்.
6. போர் முடிந்து 43 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் போரினால், அண்மையில் இடம் பெயர்ந்தவர்களும் நீண்டகாலமாக இடம் பெயர்ந்துள்ளவர்களும் திருப்தியளிக்கக்கூடிய இழப்பீடுகளுடன் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.இந்நிலை தெளிவாகவும் முக்கியமாகவும் 1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்புச்செய்யப்பட்ட முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களாகிய நாம, அரசாங்கம் உள்ளக இடப்பெயர்ந்தோரையும் அகதிகளையும் அத்தோடு வடமாகாணத்துக்குத் திரும்ப விரும்புகின்ற வடமாகாண முஸ்லிம்களுக்கு உதவும் வண்ணம் தகுந்த சூழலையும் ஏற்படுத்தி அவர்களது பொருளாதார சமூக கலாசார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அதற்கென மீளக்குடியமர்த்தலுக்கான தேசியக்கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த அரசு உடனடியானதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறது.
7. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசானது கற்றறிந்த பாடங்கள் மற்றம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வழிப்படுத்தியும் நெறிப்படுத்தியும் செல்லவேண்டுமென தீர்மானிக்கிறது.
8. இந்த மாநாடு, தாயகத்துக்காகவும் சுயநிர்ணயத்துக்காகவும் போராடும் பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்துக்கு தனது கூட்டொருமைப்பாட்டைத் தெரிவிப்பதோடு பலஸ்தீனத்துடனான தனது உறவுகளை ஸ்ரீலங்கா அரசு மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் காஸாவில் உள்ள இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கட்டுமானங்களைக் குலைப்பதற்கு பலஸ்தீனம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆக்க பூர்வமாக ஒத்துழைக்க வேண்டுமென்றும் பலஸ்தீனிய மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் நிலையான தீர்மானங்களை எய்துவதற்குத் துணை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றது.
Post a Comment