Header Ads



எகிப்தில் இஸ்லாமிய சார்பு அரசியலமைப்புக்கு ஆதரவாக மக்கள் மீண்டும் வாக்களிப்பு


(TU)

எகிப்தில் அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் 2-வது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 17 மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பு அமைதியாகவே நடந்தது. எதிர்கட்சியினர் எதிர்ப்புகள் இருந்தாலும், இஃவானுல் முஸ்லிமீனுக்கு செல்வாக்குள்ள இப்பகுதிகளில் அதிபர் முர்ஸியின் முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் சாசனத்திற்கு ஆதரவாகவே வாக்குகள் பெரும்பாலானவை பதிவானதாக கருதப்படுகிறது.

மக்கள் கூட்டம் காரணமாக இரவு 11 மணிவரை வாக்குப்பதிவை நீட்டிக்க தேர்தல் கமிஷன் அனுமதித்தது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் அனைத்து  காரணிகளும் அரசியல் சாசனத்தில் இருப்பதாக இஃவான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதனை எதிர்கட்சியினர் எதிர்க்கின்றனர். இம்மாதம் 15-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 32 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் 56 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தொடர்பான மேல் முறையீடுகளை நீதிமன்றம் பரிசீலிப்பதால் நாளை கழிந்த பிறகே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரும். அரசியல் சாசனம் வெற்றிப் பெற்றால் மூன்று மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும். நேற்று நடைபெற்ற 2-வது கட்ட விருப்ப வாக்கெடுப்பில் பெரும்பாலோனோர் ஆதரவாகவே வாக்களித்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்களித்தவர்களிடம் நடைபெற்ற கருத்துக்கணிப்பும், அரசியல் சாசனத்திற்கு ஆதரவானதாகும். அதே வேளையில் அதிகாரப்பூர்வமான முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று எதிர்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.