முஸ்லிம் எதிர்ப்பு அரசியலும், எதிர்க்க முடியாத தலைமைகளும்!
(தம்பி)
கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள், 'வானம் ஏறி வைகுண்டம் போவேன்' என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், இதை நம்பித் தொலைப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. அதனால்தான், 'கோழி' பிடிக்க முடியாதவர்களெல்லாம் நமது அரசியல் அரங்கில் தலைவர்களாக இருக்கின்றார்கள்!
இது எதற்கு இப்போது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். ஆறுதலாகப் படியுங்கள்!
இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களை – மத ரீதியாக நோவினை செய்யும் பேரினவாதப் போக்கு தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, பௌத்தத்தின் பெயரால் முஸ்லிம்களும், அவர்களின் மத உணர்வுகளும் நோகடிக்கப்பட்டு, கொச்சைப்படுத்தப்படும் செய்திகள் நாளாந்தம் நமது காதுகளில் வந்து - விழுந்து கொண்டேயிருக்கின்றன.
'இத்தனைக்கும் முஸ்லிம் சமூகத்தின் பெரிய்ய்ய்ய அரசியல் தலைகளாகச் சொல்லப்படுகின்றவர்கள் அத்தனைபேரும் ஆளுந்தரப்பில் அமைச்சர்களாக இருக்கும் நிலையில்தான் முஸ்லிம் சமூகத்துக்கு இத்தனை நெருக்கடிகள் என்பதை நினைக்கையில் கவலையும், ஆத்திரமும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை' என்று கூறும் நண்பரொருவரின் உணர்வுகளில் நியாயம் இல்லாமலில்லை!
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களாக உருவெடுத்த இந்தப் போக்கானது தற்போது, நாடாளுமன்ற உணவுச்சாலையில் பன்றி இறைச்சிக்கறி சமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வரை - வந்து நிற்கிறது.
இவைதவிர, முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் திட்டமிட்டு இடம்பெற்று வருகின்றன. ஒருபுறம் முஸ்லிம் நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு 'அந் நிறுவனங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம்' என்று சிங்கள மக்களிடம் கோரிக்கை விடும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்னொரு புறம், முஸ்லிம் வர்த்தகர்களை அவர்களின் தொழில் முயற்சிகளின் போது பிரச்சினைகளில் சிக்க வைப்பதற்கான சதிகளும் நடைபெறுகின்றன. அண்மையில் பதுளை நகர்ப் பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தனது கடையில் புத்தரின் உருவம் கொண்ட கையுறைகளை விற்பனை செய்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டமையானது – மேலே சொன்ன சதித் திட்டங்களில் ஒன்றாகும்.
'டீன் ஃபென்ஸி ஷொப்' என்பது அந்தக் கடையின் பெயர். பதுளை நகரில் - ஹம்தூன் என்பவர் கடையினை நடத்தி வருகின்றார். கடந்த வியாழக்கிழமை (22ஆம் திகதி) அன்று இளைஞர் ஒருவர் குறித்த கடைக்கு கையுறை ஒரு சோடி வாங்குவதற்கு வந்திருக்கின்றார். 160 ரூபாவினைப் பெற்றக் கொண்டு கையுறையினை விற்பனை செய்தார் கடைக்காரர். வந்த இளைஞர் கையுறைக்கான பற்றுச் சீட்டு ஒன்றைக் கேட்க - கடைக்காரரும் கொடுத்திருக்கின்றார்.
இது நடந்து அரைமணி நேரம் கடந்திருக்கும். பதுளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ்காரர்கள் 'டீன் ஃபென்ஸி ஷொப்' என்கிற அந்தக் கடைக்கு வந்தார்கள். குறித்த கடையில், புத்தரின் உருவம் பதித்த கையுறைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், கடையினை சோதனை செய்ய வேண்டும் என்றும் பொலிஸ்காரர்கள் கூறினர். கையுறை வாங்கிச் சென்ற இளைஞரும் பொலிஸ்காரர்களுடன் வந்திருந்தார். அவரிடம் புத்தரின் படம் பதிக்கப்பட்ட கையுறைகள் இருந்தன.
கடைக்காரருக்கு அதிர்ச்சி! தான் இவ்வாறான கையுறைகள் எதையும் விற்கவில்லை என்றும், தன்னிடம் புத்தர் உருவம் பதிக்கப்பட்ட எந்தவிதமான கையுறைகளும் இல்லை என்றும் கடைக்காரர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
ஆனால், பொலிஸ்காரர்கள் இதற்குக் காது கொடுப்பதாக இல்லை. பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கடைக்காரரரை அழைத்தனர். இதேவேளை, கடைக்கு வெளியே ஏராளமான ஊடகவியலாளர்கள் நின்று கொண்டு கடையையும், உரிமையாளரையும் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இதில் உச்சகட்டம் என்னவென்றால், கடைக்காரர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருக்கு எதிராக முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்காக அங்கு பௌத்த மதகுரு ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். இவருக்கும் இந்தக் கையுறைச் சமாச்சாரத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது.
பின்னர் நடந்தவற்றினைத்தான் நீங்கள் ஊடகங்களில் படித்திருப்பீர்களே! கடைக்காரரும், கடையின் ஊழியரும் பொலிஸாரால் கைது செய்ய்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். ஆயினும், வெள்ளிக்கிழமையன்று மேற்படி இருவரும் ஆளுக்கு 05 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இங்கு - கடைக்காரரை விசாரிப்பதற்காக பொலிஸார் வந்தபோது, கூடவே ஊடகவிலயலாளர்கள் அழைத்து வரப்பட்டமை, கடைக்காரர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த விடயத்தில் சம்பந்தமேயில்லாத பௌத்த பிக்கு முறைப்பாடு செய்வதற்காக வருகை தந்திருந்தமை ஆகிய இரண்டு விடயங்களே இந்தச் சதித் திட்டத்தின் போலித்தன்மையினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்குப் போதுமானதாகும்!
இதற்குப் பின்னரும் பேரினவாதிகள் விட்டபாடில்லை. பௌத்த மதத்துக்கு எதிராக முஸ்லிம்கள் செயற்படுகிறார்கள் என்றும், கைது செய்யப்பட்ட கடைக்காரருக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டமொன்ற நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தினை பொது பலசேனா என்கிற பௌத்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காவியுடை தரித்த பௌத்த மதகுருமார் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இத்தனை பெரிய விவகாரமொன்று நடந்திருந்தும் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ இது விடயத்தில் கொட்டாவி கூட விடவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விடயமாகும். பக்கத்து வீட்டு பூனைக்குட்டி செத்தால் கூட பக்கம் பக்கமாக ஊடக அறிக்கை விடும் நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கண்களில் பதுளை விவகாரம் கடைசிவரை படவேயில்லை!
இன்னொரு புறம் பலஸ்தீனம் - காஸா பிரதேசத்தில் கடந்த வாரங்களில் இஸ்ரேலிய ராணுவம் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த வேளையிலும், அரச தரப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூக்கத்தில்தான் இருந்தனர்.
காஸா மீது தாக்குதல் நடந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதுகுறித்து எதுவிதமான கண்டனங்களையும் வெளியிட்டிருக்கவில்லை. இத்தனைக்கும் பலஸ்தீன - இலங்கை நட்புறவு பேரவையின் தலைவராக இருப்பவர் ஜனாதிபதி ராஜபக்ஷ. பலஸ்தீன் விடயத்தில் ஜனாதிபதி வாய் திறக்காததால் – நமது ஆளுந்தரப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தமது வாய் உள்ளிட்ட அத்தனை அங்கங்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டனர்.
இதில் பரிதாபத்துக்குரிய நகைச்சுவை என்வென்றால்ளூ பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டன அறிக்கையொன்றினை வெளியிட வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையானது கெஞ்சிக் கூத்தாடி அறிக்கையினையும் வெளியிட்டது. ஆனால், ஜனாதிபதி இது விடயத்தில் மௌனியாகவே இருந்தார்!
சில காலங்களுக்கு முன்னர் ஜெனீவா விவகாரத்திலிருந்து ஜனாதிபதியை காப்பாற்றுவதற்காக இதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர்தான் மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருந்தனர் என்பது இங்கு நினைவுபடுத்த வேண்டிய உபரித் தகவலாகும்.
நமது முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால், புத்திஜீவிகள் என்கிற அடையாளங்களுடன் உலவித் திரிகின்ற சிலர் - இதை விடவும் மோசமானவர்களாக இருக்கின்றனர்.
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டிருந்த வேளையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அந்தத் தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக முன்றலில் அமைதியான முறையில் கண்டணப் பேரணியொன்றினை நடத்தினார்கள். முஸ்லிம் மாணவர்கள் மட்டுமன்றி, தமிழ், சிங்கள மாணவர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். 500 க்கும் அதிகமான மாணவர்கள் இதில் பங்கெடுத்திருந்தனர். இந்தப் பேரணியினை அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.ஏ. சத்தார் வந்தார். அவர் - அங்கிருந்த ஊடகவியலாளர்களை அழைத்து ஓர் உதவி செய்ய முடியுமா?' என்று கேட்டார். ஊடகவியலாளர்கள் என்ன என்று விசாரித்தனர். 'இந்தக் கண்டனப் பேரணி குறித்த செய்தியினை ஊடகங்களில் நீங்கள் வெளியிடக் கூடாது' என்றார் பதிவாளர் சத்தார்! ஏன் வெளியிடக் கூடாது என்பதற்கு அவர் கூறிய காரணம் சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தது. தனது சமூகம், இனம், சகோதரர்கள் இவற்றுக்கப்பால் சக மனிதர்கள் மிருகத்தனமான முறையில் கொல்லப்படும் போது, உணர்ச்சிவசப்படுவதற்கும், கோபம் கொள்வதற்கும், எதிர்ப்பினைக் காட்டுவதற்கும் வக்கற்றவர்களாக இந்தப் புத்திஜீவிகள் இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானதொரு விடயமாகும். இன்னொருபுறம் அநீதிக்கெதிரான தமது எதிர்ப்பினை வெளிக்காட்டுகின்றவர்களின் உணர்வுகளை இருட்டடிப்புச் செய்ய நினைக்கும் இவர்களின் குணம் குரூரமானதாகும்!!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்திடமிருந்து விளம்பரங்களைப் பெற்று அதில் 'கொமிசன்' உழைத்துக் கொள்ளும் நிருபர்கள் தவிர்ந்த ஏனைய ஊடகவியலாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலுக்கெதிரான தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் கண்டனப் பேரணியினை ஊடகங்களில் செய்தியாக்கியிருந்தனர் என்பது இங்கு ஆறுதலான விடயமாகும்!
இவை அனைத்துக்கும் பிந்திய விடயமாக - நாடாளுமன்ற உணவுச்சாலையில் பன்றி இறைச்சி சமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையொன்று எழுந்துள்ளது. இஸ்லாத்தில் விலக்கப்பட்ட ஒன்றாக பன்றி உள்ளது. பன்றி என்று சொல்வதைக் கூட முஸ்லிம்கள் அருவருப்பாகவே பாரக்கின்றனர். இலங்கை நாடாளுமன்ற உணவுச்சாலையில் முஸ்லிம்களின் மத உணர்வினை மதிக்கும் வகையில் இன்றுவரை பன்றி இறைச்சி சமைக்கப்படுவதில்லை. ஆனால், தற்போது பன்றி இறைச்சியினை நாடாளுமன்ற உணவுச்சாலையில் சமைக்க வேண்டும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ரோஷி சேனநாயக்க ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையின் பின்னணியிலும் முஸ்லிம் விரோத அரசியல் உள்ளதை அவதானிக்க முடியும்! பன்றிக் கறி மீதான ஆசையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் மற்றும் ரோஷி ஆகியோர் இந்த கோரிக்கையை விடுக்கவில்லை. முஸ்லிம்களுக்கு விலக்கப்பட்ட பன்றி இறைச்சியுணவை நாடாளுமன்றம் வரை கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களின் தேவையாகும்!
ஆனால், இது விடயத்திலும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரியதாக வாய் திறக்கவில்லை! ஹரீஸ் மட்டும் 'பன்றி இறைச்சி சமைத்தால் நாடாளுமன்ற உணவுச்சாலையை பகிஷ்கரிப்போம்' என்று அறிக்கை விட்டிருக்கின்றார். பாராட்டுக்கள். ஏதோவொரு வகையில் நாம் சொரணை உள்ளவர்கள் என்பதை வெளிக்காட்டுவது நல்ல விடயம்தான். ஆனாலும், நாடாளுமன்ற உணவுச்சாலையைப் பகிஷ்கரிப்பதால் பன்றி இறைச்சி விவகாரத்துக்கான தீர்வுகள் எவையும் கிடைக்கப் போவதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
கடைசியாக, இஸ்லாமிய ஷரீஆ சட்டம் மிலேச்சத்தனமானது என்று ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் வைத்துக் கூறியிருக்கின்றார். இது குறித்தும் நமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது காத்திரமான கண்டனங்கள் எவற்றினையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.
ரஞ்சன் ராமநாயக்கவின் இந்தக் கருத்துக் குறித்து கொழும்பிலுள்ள நமது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து அவதானத்துக்குரியது. அதாவது, 'ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இஸ்லாமிய ஷரீஆ சட்டம் குறித்து விளக்கமளிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் என்கிற அடையாளத்தோடு உள்ள சில தனிப்பட்ட மனிதர்கள் மற்றும் நாடுகளின் நடவடிக்கைளுடன் ஷரீஆ சட்டத்தினை முடிச்சுப் போட்டுப் பார்க்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துதல் வேண்டும். உண்மையில் ஷரீஆ சட்டம் மிலேச்சத்தனமானது அல்ல! அந்தச் சட்டமானது சில நாடுகளில் மிலேச்சத்தனமானவர்களின் கைகளில் அகப்பட்டுள்ளது. அவ்வளவுதான். இதை ரஞ்சனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றார்!
எதுஎப்படியோ, முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிராக நாட்டில் இப்படி சங்கிலித் தொடரான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது, அவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாத முஸ்லிம் அரசியல் தலைவர்களா, முஸ்லிம் சமூகத்துக்கான உரிமைகளையும், விடுதலையினையும் நமக்குப் பெற்றுத்தரப் போகிறார்கள்? என்கிற கேள்வி இதைப் படிக்கும் போது உள்ளுக்குள் தோன்றுகிறதல்லவா?
nalla katturai
ReplyDelete