Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை அவர்களிடம் மீளஒப்படையுங்கள் - டக்ளஸ்

(ஈ.பி.டி.பி. ஊடக பிரிவு)

நிரந்தர வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதை வியாபாரம் முன்றாகத் தடைசெய்யப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 17-12-2012 யாழ்.வர்த்தக சமூகத்தினருடனான உரிமை மாற்றம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாநகர சபையின் சுற்றிக்கையின் பிரகாரம் வர்த்தக நிலையங்களின் உரிமை மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென்றும் அதனை எவ்வாறு சட்டமாக்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் நிரந்தர உரிமை தொடர்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவது முக்கியமென்றும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் 1990 ம் ஆண்டு முஸ்லிம் சகோதர மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் அவர்களது வர்த்தக நிலையங்களை தற்போது யாராவது நடத்தும் பட்சத்தில் அவற்றை மீளஒப்படைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள் உரியவர்களின் கடிதம் அல்லது ஆவணங்களின்றி நடாத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுமென்றும், குறப்பிட்ட விடயம் தொடர்பில் நேர்மையானதும் நியாயமானதுமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இதேவேளை, உறவினர்களைத் தவிர வேறுயாருக்காகவது வர்த்தக நிலையங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் அதற்கு வாடகை பெற்றுக் கொள்ளப்படுமென்றும் அதுவிடயம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் மாநகர சபை ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார். 

இதனிடையே நடைபாதை வியாபாரிகளின் அத்துமீறிய வியாபார நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தகர்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட போது வெளிமாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து அவ்வாறான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை, வியாபார ஸ்தாபனங்களுக்கு முன்பாக நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களினதும், அத்துமீறிய வியாபாரிகளினதும் வியாபார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் நடைமுறையில் உள்ளூர் வர்த்தகர்களின் நலன்களை பாதிக்காத வகையில் முடிவு எட்டப்படவேண்டுமென்பதுடன், வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை, மாநகர சபையினது வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஒத்துழைப்பும், ஒத்தாசையும் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது வர்த்தகர்களது கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டன.  இக்கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி  யோகேஸ்வரி பற்குணராசா, பிரதிமுதல்வர் ரமீஸ், மாநகர ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.