Header Ads



வெட்கப்படத் தெரியாதவர்களின் அரசியல்...!



(தம்பி)

வெட்கத்துக்கும் இஸ்லாத்துக்கும் நிறையவே தொடர்புகள் உள்ளன. வெட்கமும், ஈமானும் (இறை விசுவாசம்) ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றும், உனக்கு வெட்கம் இல்லை என்றால் நீ விரும்பியவாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். வெட்கம் என்பது ஈமானின் (இறை விசுவாசம்) ஒரு பகுதி என்று நபியவர்கள் கூறியுள்ளதாகவும் ஒரு ஹதீஸ் உள்ளது. இப்படி, வெட்கத்துக்கும் இஸ்லாத்துக்கும் பரந்த - ஆழமான தொடர்புகள் நிறையவே இருக்கின்றன.

மானம் உள்ளவர்கள்தான் வெட்கப்படுவார்கள். மானத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவர்களுக்கு வெட்கப்படத் தெரியாது. உண்மையில், மானம் என்பது கௌரவத்திலிருந்து பிறக்கிறது. தனதும், தன்னைச் சார்ந்தவர்களினதும் கௌரவம் பற்றிய சுரணையற்றவர்கள் - மானம் குறித்து யோசிக்க மாட்டார்கள். மானமற்றவன் வெட்கப்பட மாட்டான். வெட்கப்படாதவன் எதையும் பேசுவான், செய்வான். அதனால்தான் 'ரோசங் கெட்டவன் ராசாவினும் பெரியவன்' என்று கிராமத்தில் கூறுவார்கள். வெட்கமற்றவனுக்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்!

இந்த ஆலாபனையெல்லாம் எதற்கு என்று கூறுவதற்கு முன்னர், கடந்த வாரத்துக்கு முதல் வாரம் (டிசம்பர் - 02) நாம் எழுதியிருந்த கட்டுரையை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. 'முஸ்லிம் எதிர்ப்பு அரசியலும், எதிர்க்க முடியாத தலைமைகளும்' என்கிற தலைப்பில் அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.  

நாடாளுமன்ற உணவுச்சாலையில் பன்றி இறைச்சிக்கறி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை பற்றியும், பதுளை நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கடையில் புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட கையுறை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும், அந்தக் கட்டுரையில் சில முக்கிய விடயங்களை நாம் பதிவு செய்திருந்தோம். 

அதன் தொடர்சியாக இடம்பெற்ற சில விடயங்களை இந்தக் கட்டுரையில் நாம் பதிவு செய்கின்றோம்.

பதுளை விவகாரமும், குழலூதும் ஹக்கீமும்!
-------------------------------------------------------------------
பதுளை நகரத்தில் புத்தரின் படங்கள் பதிக்கப்பட்ட கையுறைகளை விற்பனை செய்தார் என்கிற குற்றச்சாட்டில் கடை உரிமையாளரும் ஊரியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். பிறகு, முஸ்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா என்கிற பௌத்த அமைப்பு பதுளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், அதன்போது, முஸ்லிம்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் நீங்கள் ஊடகங்களில் அறிந்த செய்தியாகும். 

இந்த விவகாரம் இடம்பெற்றதன் பின்னர், கடந்த 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் பதுளைப் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, பதுளை ஜும்ஆ பள்ளிவாசலில் மேற்படி விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பதுளை பிரதேச முஸ்லிம் முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதிலெல்லாம் பிரச்சினையொன்றுமில்லை. ஆனால், இதன்போது, மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆற்றிய உரைதான் விமர்சனங்களுக்குரியது!

ஹக்கீம் அங்கு சொன்னதன் சாராம்சம் இதுதான். அதாவது, 'முஸ்லிம்களுக்கு எதிராக பதுளை உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெறும் நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்களின் சூழ்ச்சியாகும். சர்வதேச ரீதியில் நாட்டுக்கும், நாட்டுத் தலைவருக்கும் அபகீர்த்தியினை ஏற்படுத்துவதற்காகவே இவையெல்லாம் நடத்தப்படுகிறது. இலங்கையை சர்வதேசத்தில் சிக்க வைக்க வேண்டுமென்கிற விருப்பம் கொண்டவர்களே இவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். எனவே, இது தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும். இந்த விடயங்களை நான் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வருவேன். சர்வதேச அரங்கில் தரக்குறைவாகக் கருதும் ஒரு நிலைக்கு இலங்கையைக் கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது' என்றார் மு.கா. தலைவர் ஹக்கீம்.  

நம்மைப் பொறுத்தவரை ஹக்கீமின் இந்தக் கூற்று அதிர்ச்சிகரமானது. அவர் - பூசனிக்காயை தேநீர் கோப்பைக்குள் ஒளித்து வைக்கப் பார்க்கின்றார். தம்புள்ளை உள்ளிட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மேடைகளில் அரசு மீது குற்றம் சுமத்திய ஹக்கீம், இப்போது வேறு கதை கூறுகிறார். இது நயவஞ்சகங்களால் பின்னப்பட்ட கதையாகும்!

அப்படியென்றால், ஹக்கீமிடம் கேட்பதற்கு சில கேள்விகள் நம்மிடமுள்ளன. 

1. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்று முழுதாக அரசியல் சார்ந்தவை என்கிறீர்களா?

2. முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவோரின் இலக்கு ஆட்சியாளர்களே தவிர முஸ்லிம்கள் இல்லை என்கிறீர்களா?

3. விடுதலைப் புலிகளையே அழித்தொழித்த ஆட்சியாளர்கள், சர்வதேசத்தில் தம்மைச் சிக்க வைப்பதற்கான சதிகளை மேற்கொள்வோரை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கின்றார்கள்?

4. பதுளை விவகாரத்தினை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என்று கூறியுள்ளீர்களே, அப்படியென்றால் - ஜனாதிபதிக்கு பதுளை விவகாகரம் இதுவரை தெரியாது  என்கிறீர்களா?

5. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதலை மேற்கொண்டோரும், ஜனாதிபதியை சர்வதேசத்தில் சிக்க வைக்கும் எண்ணம் கொண்டவர்கள் போலவே படுகிறது. நாம் நினைப்பது சரிதானா?

ரஊப் ஹக்கீம் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஜனாதிபதிக்கு நம்பிக்கை வருவது போல் தலைவர் ஹக்கீம் நடந்து கொள்ள வேண்டுமென்றும் அவரின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூறக் கேட்டிருக்கின்றோம். ஆனால், ஹக்கீம் அதைப் பிழையாகப் புரிந்து விட்டார் போலிருக்கிறது. அல்லாது விட்டால், பதுளை ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து ஹக்கீம் இப்படியொரு கருத்தினை வெளிப்படுத்தியிருக்க மாட்டார் என்கிறார் மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரொருவர்!

சில விடயங்களில் மு.காங்கிரசின் தலைவராகவும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அமைச்சராகவும் இருப்பதென்பது, மலைக்கு மாடேற்றுவதை விடவும் கடினமானதொரு காரியமாகும். ஆனால், எல்லா விடயங்களிலும் ரஊப் ஹக்கீம் மு.கா. தலைவராக இருப்பதையே முதன்மைப்படுத்த வேண்டுமென்று அந்தக் கட்சியின் விசுவாசிகள் விரும்புகின்றார்கள்!

தொண்டர்களின் விருப்பம் எத்தனை நியாயமானவை என்றாலும், தலைவர்களிடம் அவை பெரிதாக எடுபடுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்! 

மாறு வேடத்தில் பன்றிக் கறி
-----------------------------------------
நாடாளுமன்ற உணவுச்சாலையில் பகல் சாப்பாட்டின் போது, பன்றி இறைச்சிக் கறி பரிமாறப்பட வேண்டும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ரோஸி சேனநாயக்க ஆகியோர் அடம்பிடித்த கதை குறித்து முன்பு நமது கட்டுரையில் பதிவு செய்திருந்தோம். ஆனால், சபாநாயகர் அதை மறுத்து விட்டார் என்று கூறப்பட்டது. 

ஆனாலும், நாடாளுமன்ற உணவுச்சாலையில் பன்றி இறைச்சியானது மாறு வேடத்தில் வேறு வழியாக உள் நுழைந்துள்ளதாகத் தெரியவருகிறது. 

அதாகப்பட்டது, நாடாளுமன்ற உணவுச்சாலையின் காலை உணவுப் பட்டியலில் புதிதாக சில பதார்த்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளாகவும் அதில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட பகொன் எனும் மேலைத்தேய உணவுப் பண்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே, நாடாளுமன்ற உணவுச்சாலையில் காலை வேளையில் அப்பம், பாற்சோறு, அவிக்கப்பட்ட தானியங்கள் என்று உள்ளுர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இங்கு காலை உணவு 80 ரூபாயாகும். இவ்வாறான உணவுப் பட்டியலுடன்தான் தற்போது பகொன் உள்ளிட்ட மேலைத்தேய உணவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் காலை உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பகொன் உள்ளிட்ட புதிய உணவுப் பொருட்களும் 80 ரூபாய்க்கே வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. உயர்தர ஹோட்டல்களில் ஒரு பகொன் 500  ரூபாய்க்கும் அதிகப்பட்ட தொகைகளில் விற்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதில் கவலைதரும் விடயம் என்னவென்றால் பகொன் என்கிற பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு நாடாளுமன்ற காலை உணவில் சேர்க்கப்படும் விவகாரம் குறித்து எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரை எதிர் குரல் எழுப்பவில்லை. நாடாளுமன்றில் பகல் உணவுக்குப் பன்றிக் கறி சமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டபோது எதிர்க்குரல் எழுப்பியவர்களையும் இங்கு காணவில்லை. இதில் இன்னும் கவலை என்னவென்றால், சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்படியொரு சமாச்சாரம் நடந்திருப்பதே தெரியாது. இது விடயமாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். பகொன் என்றால் என்ன என்று நம்மிடம் கேட்கிறார். பாவம், வேளாண்மைக்கு விசிறும் ஏதாவது நசல் எண்ணை என்று மனுஷன் தினைத்திருக்கக் கூடும்! 

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. முஸ்லிம் சமூகம் உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் அடக்கியொடுக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் - நமது பிரதிநிதிகள் இத்தனை அலட்சியமாக இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தாகும். 

'நாய் வாண்டால் என்ன? பூனை பிள்ளைப் பெற்றால் என்ன?' என்கிற அலட்சிய மனப்போக்குடன் இருக்கும் விடயமல்ல இது. ஊசி நுழைப்பதற்கு ஓர் இடம் கிடைத்தால் - அதனூடாக உலக்கையை நுழைப்பவர்கள் இனவாதிகள்! நாடாளுமன்றத்துக்குள் பகொன் என்கிற பெயரில் மாறு வேடம்பூண்டு பன்றி இறைச்சி நுழைவதை அனுமதித்தால் அல்லது அது குறித்துப் பாராமுகமாக இருந்தால், நாளை ஒருசில சிங்கள மாணவர் கற்கும் முஸ்லிம் பாடசாலையில் வழங்கப்படும் மதிய போசனத்தி;லும் பன்றி இறைச்சியை சேர்க்கச் சொல்வார்கள். வேறு வழிகளின்றி நாமும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிவரும் என்கிறார் நமது நண்பரான ஆசிரியரொருவர்!

எனவே, பன்றி இறைச்சியை நாடாளுமன்ற உணவுச்சாலைக்குள் கொண்டுவரும் விவகாரத்தினை முளையில் கிள்ளி எறிவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

'நாட்டையும், ஆட்சியாளர்களையும் சர்வதேசத்தில் சிக்க வைப்பதற்காகவே பன்றி இறைச்சியை நாடாளுமன்ற உணவுச்சாலைக்குள் சிலர் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள். இதுவும் ஒரு சூழ்ச்சிதான் என்று நமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வியாக்கியானம் கூறுவதுபோல் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். அது பலிக்காமலிருக்கப் பிரார்த்திப்போமா?

எல்லாம் சரி, கட்டுரையின் ஆரம்பத்தில் வெட்கம் குறித்து நீண்டதொரு விளக்கம் எழுதியிருந்தேனே, அதற்கும் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என்று உங்களில் எவருக்காவது கேட்கத் தோன்றுகிறதா? வெட்கம் தொடர்பான அந்த வரிகளுக்கும் இந்தக் கட்டுரைக்கும் தொடர்புகள் எவையும் இல்லை. இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்கள் ஓரிரு நபி மொழிகளை அறிந்திருந்தால் நல்லது என்பதற்காகவே அவற்றினை எழுதினேன்! நம்புவீர்களா?!!

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. மடையர்களே ஜனாதிபதி மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டும் நயவஞ்சகன்

    ReplyDelete
  3. இந்த இனவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதே காலத்தின் கட்டாயம் அவர்களை பெரும்பான்மை மக்களிடத்தில் அடையாளம் காட்டலாம் , உதாரணத்துக்கு postar ,sms , துண்டு பிரசூரம் , webside , மூலம் இவர்களுடைய முகத்திரையை கிளிகளாம் ,
    பெரும்பான்மை மக்களுக்கு அன்பான முறையில் வாசகங்களை அமைய்து
    புரியவைக்கலாம் .
    உதாரணத்துக்கு ,
    அன்புற்குரிய தாய் மார்களே சகோதர சகோதரிகளே இஸ்லாத்தின் பெயரால் உங்களையும் எங்களையும் பிரிக்க சில தீய சக்திகள் முயற்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள் இஸ்லாம் எங்களுக்கு மற்றும் சொந்த மான மார்க்கம் கிடையாது அது உலக மக்கள் அனய்வருடைய மார்க்கமாகும் யாரெல்லாம் இந்த மார்க்கத்தை ஏற்றுகொல்கிரார்களோ அவர்கள் முஸ்லீம் , பெருமபான்மை மக்களை கவரக்கூடிய வாசகங்களை எழுதி உங்கள்ளால் முடிந்த அளவு ........

    ReplyDelete
  4. Dear Brother may i know who is the Muslim in Parliament???? Also i want to know what is is the definition for Muslim??

    ReplyDelete
  5. jaffna muslim ஆக இருக்கட்டும் அல்லது வேறு செய்தி நிறுவனமாக இருக்கட்டும் நீங்கள் சமூக நலனுக்காக சிந்திக்கின்றீர்கள் என்றால் இப்படி முஸ்லிம்களையும் அதிலுள்ள சில தனி நபர்களையும் சுட்டிக்காட்டி இன்னும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பிளவுகளை அதிகரிக்கச்செய்து அதில் குளிர் காயாமல் முஸ்லிம் சமூகத்தையும் ஜமாஅத்களையும் இணைத்து ஒரே குரலாக முலங்கச்செய்து இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை அடுத்த சகோதரர்கள் மத்தியில் இருந்து நீங்க ஆவணம் செய்யுங்கள் அதுவே இன்றைய தேவை

    ReplyDelete

Powered by Blogger.