ஈராக் நாட்டு தூதுவருடன் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
இலங்கைக்கும், ஈராக்கிற்கும் இடையே சிறைக்கைதிகளை பரிமாறிக்கொள்வதில் உடன்படிக்கை செய்துகொள்வதற்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா கஹலாப் ஆகியோருக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஈராக்கிற்கான இலங்கைத் தூதுவர் ஹ்தான் தாஹா கஹலாப் தமது தூதுரகத்தின் இரண்டாவது செயலாளர் அலீ ரீ. ஹமூதி அல் ஹம்தானி சகிதம் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் வியாழக்கிழமை (06) சந்தித்த போதே இதுபற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கைக்கும், ஈராக்கிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டம், மனித உரிமைகள் பற்றிய பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் பற்றி ஆராயும் விதத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
ஈராக் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர் தொழில் புரிவதால் அவர்களில் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ஈராக்கியத் தூதுவர் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குவதற்கு நேர்வதாகவும் கூறிய பொழுது, இரு நாடுகளையும் சேர்ந்த நபர்கள் குற்றச் செயல்களை புரியும் போது அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை தத்தமது நாடுகளில் உள்ள சிறைகளில் அனுபவிப்பதற்கு வகை செய்யும் ஏற்பாடுகளை உடன்படிக்கையொன்றில் உள்ளடக்குவது உகந்தது என்று நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்த அபிப்பிராயத்திற்கு தூதுவர் உடன்பட்டார்.
அவ்வாறான ஏற்பாடு இருநாட்டு சிறைக்கைதிகளுக்கும் செலவிடப்படும் பணத்தொகை விரயமாவதை வெகுவாக குறைப்பதாக அமைச்சர் குறிப்பிட்ட போது, வேறொரு நாட்டில் குற்றம் புரிபவர் அதற்கான தண்டனையை தமது சொந்த நாட்டில் அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டுமானால் அந்தக் கைதியை அவரது உறவினர்கள் உள்நாட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்வையிடும் வாய்ப்பு கிட்டுவது அவர்களுக்கு போதிய மனநிறைவையும் அளிக்குமென தூதுவர் கூறினார்.
இலங்கைச் சிறைச்சாலைகளில் ஈரான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருவதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார். அத்தகைய நாடுகளோடும் இவ்வாறான உடன்படிக்கைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் றோமன் டச்சு சட்டம் மற்றும் ஐரோப்பிய பொதுச் சட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே வழக்குகள் நடைபெறுவதாக கூறிய அமைச்சர் ஈராக்கில் ஷரியத் அடிப்படையிலான சட்டம் உள்ளதால் பொதுவான அம்சங்களில் இருநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள் பரிமாற்றம், அவர்களுக்கான பயிற்சி என்பவற்றிற்கு ஏற்பாடு செய்வதாகவும் இணக்கம் காணப்பட்டது.
இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு அதற்கான திருத்தங்களை மேற்கொண்டிருப்பதாகவும், பாராளுமன்றத்தில் தாம் புதிய சட்டத்தை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்பை பின்பற்றுபவர்களே மிக அதிகமாக இருப்பதாகக் கூறிய அமைச்சர் ஈராக்கில் இஸ்லாத்தின் எந்த சமயப் பிரிவின் அடிப்படையில் விவாகரத்து, தாபரிப்பு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கேட்ட போது, அங்கு ஷாபிஈ, ஹனபி, மாலிகி பிரிவினரின் பிணக்குகள் அந்தந்த மத்ஹப்களின் சட்ட விதி, வியாக்கியானங்களுக்கு இணங்க வழங்கப்படுவதாக தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையில் காதி நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், காதி நீதிவான்கள் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளின் தரத்தில் கணிக்கப்படுவதாகவும், அவர்களது தொழில் தரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.
ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஐ.நா சபையில் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது பலஸ்தீன மக்களின் தாயகப் பூமியை மீளப்பெறுவதற்கான போராட்டத்தின் முக்கிய திருப்புமுனை என அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஈராக்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கு இச் சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment