இப்படியும் ஒரு மனிதன்..!
இந்தியா புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை அணிந்து, ஆங்கில புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில், புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார்.
புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆங்கில ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார்.
பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்து, தங்க சட்டையை உருவாக்கியுள்ளனர். அதில், பொத்தான்கள், "ஸ்வரோவ்ஸ்கி' செயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வெறும் தங்க சட்டையாக இருந்தால், பார்க்க நன்றாக இருக்காது என்பதால், அந்த சட்டையில் ஆங்காங்கே தங்க மலர்களையும் வைத்துள்ளனர்.இந்த சட்டையின், இப்போதைய விலை, 1.27 கோடி ரூபாய். இதை, தேஜ்பால் ரங்கா என்ற பொற்கொல்லர் வடிவமைத்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தங்க சட்டை அணிய உள்ள தத்தா, இதற்கு முன்பே தங்கத்தால் பல பொருட்களை அனுபவித்து வருகிறார். தங்க பேனா, தங்க மொபைல் போன், கையின், பத்து விரல்களிலும், தங்க மோதிரங்கள் என, தங்கத்தால் ஜொலிக்கிறார்.இது பற்றி தத்தாவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
தங்கத்தின் மீது எனக்கு தணியாத தாகம் உண்டு. பலரும் ஆங்கில புத்தாண்டை, புது கார், பொழுதுபோக்கு என கொண்டாட முடிவு செய்துள்ளனர். நான் சற்று வித்தியாசமாக, தங்க சட்டை அணிய முடிவு செய்தேன்.பாதுகாப்பு பற்றி கவலைப்படுகின்றனர்; நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே, பாதுகாவலர்களை வைத்துள்ளேன். தங்க சட்டை அணியும் போது, கூடுதல் காவலர்களை பணியமர்த்தி கொள்ள உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment