Header Ads



ஐஸ் கிரீம் + நூடுல்ஸ் அதிகமாக சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு..!

ஐஸ் கிரீம்களில், "கிரீம்' அதிகமாக இருப்பதற்காகவும், நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை இருப்பதற்காகவும், அதில், "சயனைடு' ஸ்டார்ச் மாவு கலக்கப்படுவதால், அதைச் சாப்பிடும் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - தமிழகத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தான், மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. மரவள்ளிக் கிழங்கை அரைத்துத் தயாரிக்கப்படும், "ஸ்டார்ச்' எனப்படும், கிழங்கு மாவு, பேப்பர் கூழ், பசை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். பெரும்பாலான ஆலைகள், தோலை நீக்காமலேயே, "ஸ்டார்ச்' தயாரிக்கின்றன.

வியாபாரிகள் பலர், தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை வாங்கி, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். "சயனைடு' என்பது கொடிய விஷம். இதன் வீரியத்தைக் குறைத்து, "ஸ்டார்ச்' மாவில் கலக்கின்றனர். அந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது,,

"ஸ்டார்ச்'சை பேப்பர் கூழ், பசை தயாரிப்புக்காக விற்பனை செய்கிறோம் என, சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால், வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை கொள்முதல் செய்து, சில ஐஸ் கிரீம், நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். பால் மூலம், "கிரீம்' உற்பத்தி செய்ய செலவு அதிகமாகும். அதற்குப் பதிலாக, "ஸ்டார்ச்' மாவு கலப்பதால், குறைந்த செலவில், "கிரீம்' அதிகமாகக் கிடைக்கும். இதனால், சில தயாரிப்பாளர்கள், ஐஸ் கிரீமில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர்.

குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைத்த நூடுல்ஸ்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். இந்த நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கப்படுகிறது. சில்லி சிக்கன், மீன் வருவல் ஆகியவற்றிலும் மசாலா பிடிக்க வேண்டும், மொறுமொறு தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர். "ஸ்டார்ச்' தயாரிப்புக்காக, தோலுடன் கூடிய மரவள்ளிக் கிழங்கை அரைத்து உலர வைக்கும்போது, தோலில் காணப்படும், "சயனைடு' விஷத்தின் வீரியம் குறைந்து விடும். எனினும், முழுமையாகக் குறையாமல் ஓரளவு மாவில் கலந்திருக்கும்.

"ஸ்டார்ச்' கலந்த நூடுல்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிடும் குழந்தைகள், குறுகிய காலத்தில் வயிற்று வலி, அல்சர் உட்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாவர். நூடுல்ஸ் தயாரிக்கும் பெற்றோர்,நூடுல்சை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொதிக்க வைத்த நீரில், 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், வெந்நீரை கொட்டி விட்டு, நூடுல்சை எடுத்து வழக்கம் போல தயாரிக்க வேண்டும். ஐஸ் கிரீமை பொருத்தவரை, நுகர்வோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.உணவுப் பொருட்களில் சட்டவிரோதமாக, "ஸ்டார்ச்' கலக்கப்படுவதால், சேகோ ஆலைகளில் தோல் நீக்கிய மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' தயாரிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மீறி தயாரிக்கும் ஆலைகள் மீது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அனுராதா கூறினார். -

No comments

Powered by Blogger.