நாமும், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமும்!
(உலக மனித உரிமைகள் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆந் திகதியாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது )
(எஸ்.எல். மன்சூர்(B.Ed))
நமது நாட்டின் சுதந்திரமான விடுதலையுடன் ஆரம்பமான உலக மனித உரிமைகள் பிரகடனத்திற்கு இன்றுடன் வயது 64 முடிவடைகின்றது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலமிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஐ.நா. சபையின் உருவாகத்தின் பலனாக 1948 டிசம்பர் 10ல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் நகரிலுள்ள பலேடு சாயிலோட் என்ற மண்டபத்தில் ஐநா. சபையினால் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்; அறிமுகம் செய்யப்பட்ட கையுடன் 58நாடுகள் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டன. இவ்வாறான பிரகடனத்தை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அதனை உள்வாங்கியவாறு அடிப்படை உரிமைகளுக்குள்ளாகவும் இலங்கையரசு அதன் அரசியலமைப்பு யாப்பின் ஊடாகவும் மனித உரிமைகளைப் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இனம்;, பால், மதம், அரசியல் அபிப்பிராயங்கள், தேசிய அல்லது சமூக அடிப்படைகளைக் கருத்திற்கொள்ளாது மனிதப் பிறப்புக்கள் என்கின்ற வகையில் சகலருக்கும் உரித்தான உரிமைகளே மனித உரிமைகளாகும். அதாவது மனித உரிமைகள் என்பது 'இலகுவாக இயற்கைச் சுபாவமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதனுக்கு அத்தியவசியமான அடிப்படை உரிமைகள் என்று அர்த்தம்' காண்பிக்க முடியும். ஆனால் வரலாறு முழுவதும் இந்தக் குறைந்த உரிமைகளை அதிகமாக அனுபவிப்பதற்கு மனிதனுக்கு சந்தர்ப்பம் கிடைப் பதில்லை. இன்றைய உலகில் பலநாடுகளிலுள்ள மக்கள் இந்த அத்தியவசிய உரிமைகளை இழந்து துன்;பப்படுகின்றமையை கண்கூடு.
'ஆயரசiஉந ஊசயளெவழn' என்பாரின் வரைவிலக்கணப்படி 'மனித உரிமைகள் என்பது அகில ரீதியான ஒழுக்க உரிமைகளாகும். அவை சகல ஆண்களுக்கும், பெண்களுக்கும் சகல இடங்களிலும் உரித்தாக வேண்டியவையும், நியாயமானது கடுமையாக மீறப்படுவதன் மூலம் அன்றி வேறு எவ்வகையிலும் இல்லாது ஒழிக்க முடியாதவையும், மனிதப்பிறவி என்ற வகையில் சகல மனிதருக்கும் உரித்தாகுவனவுமான உரிமை களாகும்' இதன்படி பார்த்தால இவை உலக ஒழுக்கத்திற்காகவும், பால் வேறுபாடின்றி சகலருக்கும் உரித்துடையன என்றும், முழுக்க முழுக்க மனிதனுக்கு மட்டுமே என்றும், அகில உலகரீதியாக சமத்துவமிக்கதும் ஒருக்காலும் மீறவே முடியாததாகவும், அவ்வாறு மீறின் கடுமையான அநீதி ஏற்படும் என்பதையுமே இதிலிருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு மனித உரிமைகள் பற்றிய எண்ணக்கருக்கள் தோன்றி மனித குடும்பத்தினது சகல உறுப்பினரினதும் உள்ளார்ந்த கௌரவத்தையும், அனைவருக்கும் சமமான, பாராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலானது உலகில் சுதந்திரம், நீதி, சமாதானம் போன்றவற்றுக்கு அடிப்படையாகவும், மனித உரிமைகளை கொச்சைப்படுத்தும் செயல்களுக்கு இடமளித்து, அச்சம், வறுமை போன்றவற்றிலிருந்து விடுபடவுமே சாதாரண மக்களினது மிக உயர்ந்த குறிக்கோளாகவும், அடக்கு முறைக்குட்பட்டு மனிதன் கட்டாயப்படுத்தப்படாமலிருக்கவே சட்டத்தின் ஆட்சியால் மனித உரிமைகள் பாதுகாக்கப் படுவதற்கும் அத்தியவசியமானதாகவும் உள்ளது.
பொதுவாக அனைத்துலக மனித உரிமைகளாது சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு சாதனமும், இப்பிரகடனத்தை இடையறாது மனதிலிருந்து இ;வ்வுரிமைகள் சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்துவதற்கு, பயனுடையதாக காணப்படுகின்றது. இந்த அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை மனிதர்களாகிய நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். இதன் அடிப்படையில் இம்மனித உரிமைகளின் உறுப்புரைகளை மூவகையாக பிரித்துக் கூறலாம். அதில் காணப்படும் 30 சரத்துக்களை உள்ளடக்கிய பிரகடனமானது இவ்வாறு பிரித்து நோக்கப்படுகிறது.
உறுப்புரை 01தொடக்கம் 02வரை சமத்துவத்தை பற்றியும்
உறுப்புரை 03தொடக்கம் 27வரை பலவாறான பொது சுதந்திர உரிமைகள் பற்றியும்
உறுப்புரை 28தொடக்கம் 30வரை நடைமுறை முறைப்படுத்துதல் சம்பந்தமாகவும் பிரித்து அறியலாம்.
முதலாவது உறுப்புரையில் 'மனிதப்பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர், அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். ஒருவருக்கொருவர் சகோதர மனப்பாங்கு அடிப்படையில் நடந்து கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்ற அதேவேளை இரண்டாவது உறுப்புரையில் இன, மத, மொழி, நிறம், பால், அரசியல், சமூக வேறுபாடும் இன்றி எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் எல்லோருக்கும் உரித்தானது என்பதாக கூறப்பட்டுள்ளதையும் நாம் காணலாம்.
இவ்வுலக உடன்படிக்கையில் எமது நாடு ஒப்பமிட்டதன் காரணமாக மனிதனது அடிப்படையுரிமைகளை கண்காணிக்கவும் அவற்றை பேணவும், பாதுகாக்கவும் உரிமைபூண்டது. இதன் அடிப்படையில் 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் ஒன்றை எழுதுவதற்காக ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமைகள் பற்றிய உலக உடன்படிக்கைகள் முதன்மையாகக் கொள்ளப்பட்டது. அதாவது சகல மனித உரிமைகளும் சட்டத்தின் மூலம் பாதுகாக்க முடியாது. மனித உரிமைகளுள் சட்டத்தின் மூலமாக பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகள் மாத்திரமே அடிப்படை உரிமைகளாகும்.
அதற்கமைவாக அரசியல் யாப்பின் 111ம் அத்தியாயத்தில் 10வது தொடக்கம் 17வது வரையிலான பிரிவுகளில் இலங்கை பிரஜைகளுக்கு உரித்தான மனித உரிமைகளையும் அவற்றை அனுபவிக்கும் விதங்கள் பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 111ம் அத்தியாயத்தின் 10வது பிரிவில் - சிந்திக்கும் உரிமை, மனசாட்சி உரிமை மற்றும் சமயத்திற்கான உரிமை. 11வது பிரிவில் - துன்புறுத்தலிலிருந்து விடுதலைச் சுதந்திரம் அதாவது இழிவான நடாத்துகைக்கு உட்படுத்தலாகாது. 12வது பிரிவில் - பொது தன்மையான உரிமைகள் (சர்வ நியாயத்;தின்; உரிமைகள்). இதன்படி சட்டத்தை நிலைநாட்டுவதோடு செயற்படுத்தலும். பாதுகாத்து நியாயமாக நடப்பதோடு எப் பிரஜையும் இனம், மொழி, சமயம், சாதி, பால் என்பன போன்ற எந்தவொரு வேறுபாட்டின் அடிப்படையில் யாதேனும் ஒரு இடத்திற்கு பிரவேசிக்க முடியாதவாறு தடைகள் விதிக்கும் சட்டங்களுக்கு அல்லது நிபந்தனைகளுக்கு உடன்படாதிருப்பதற்கான உரிமை. 13வது பிரிவில் தன்னிஷ்டப்படி சிறை வைத்தல், தடுத்துவைத்தல், தண்டனை வழங்கி சுதந்திரத்தையும் கடந்த காலத்துக்கு உகந்தபடி தண்டனை விதித்தலுக்கு தடைவிதித்தல்.
14வது பிரிவில் - பேச்சில் கூட்டுறவில், கூட்டத்தில், தொழிலில் போக்குவரத்துக்களின் சுதந்திரம். 15வது பிரிவில் - அடிப்படை உரிமைகளுக்குள்ள வரையறை. இவ்வாறாக இவ்வடிப்படையில்; இறுதியிலுள்ள 17வது பிரிவின்படி இவ்வுரிமைகள் குறிப்பிட்டதின் பின்பு அடிப்படை உரிமைகள் பற்றிய வரையறைகளான மக்கள் பாதுகாப்பு, இன ஒற்றுமை, பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பாதுகாத்தல், நீதிமன்றத்தை அவமதித்தல், தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காகவே அன்றி பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளை வரையறுப்பதற்காகவல்ல என்பதை கவனத்திற் கொள்ளல் வேண்டும். எனினும் இவ்வுரிமைகள் யாவும் மற்றவரைப் பாதிக்காதவண்ணம் அனுபவிப்பதோடு தமது உரிமைகளைப் பெறுவது போன்று மற்றவர்களின் உரிமைகளை மீறாமல் இருப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் பொறுப்பாக இருக்க வேண்டுமென்பதே முக்கிமாகும்.
ஆனால் அண்மையக்காலங்களில் நமது நாட்டில் நடைபெற்றுவருகின்ற பல்வேறு நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சர்வதேச மனித உரிமைகளையும் மீறுகின்ற ஒரு நிலைமைக்குள் தள்ளப்பட்டிருப்பதைக் காணலாம். யாழ்ப்பான பல்கலைகழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள், அதிகாரத்திற்கும், நீதித்துறையிலும் ஏற்பட்டுள்ள சிக்கலான போக்குகள், ஹகவத்தையில் தொடராக இடம்பெற்ற மர்மக் கொலைகள், யுத்தத்தினால் பின்டைந்துபோன வடக்கு கிழக்குப் பிரதேசங்கள், மலையகம் போன்ற இடங்களில் எல்லாம் பெண்கள் மீதான கட்டற்ற வன்முறைத் தாக்குதல்கள் போன்றன மனித உரிமைகளும், சாசனங்களும் மீண்டும் புத்தெளிச்சி பெறவேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன போல் தெரிகின்றது. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற நிலை மறைந்து ஒருவருக்கு ஒருவர் மறைமுகமாக எதிர்க்கின்ற நிலையும், தகுதியற்றவர்கள் தகுதியைப் பெறுவதற்காக முயற்சிக்கும் சந்தர்ப்பங்கள், மற்றவன் எப்படிப்போனாலும் பரவாயில்லை தனக்கே மாலைகளும், பொன்னாடைகளும் விழவேண்டும் என்று நினைக்கின்ற மனோநிலை, பேனாபிடிக்கத் தெரியாத அப்பாவிகள் சிலர் தானே பேனாவை கண்டுபிடித்தவர்கள் போல நடிக்கின்றவர்கள் இருக்கும் வரை மனித உரிமைகள் வளரவா போகின்றது.
அதேபோன்று பலஉரிமைகள் தட்டிக் கழிக்கப்படுகின்றன. அதில் ஒன்று எழுத்துச் சுதந்திரமாகும். உண்மையான எழுத்துச் சுதந்திரத்தை முற்றாக தடைசெய்யும் மேலாதிக்க வெறியர்கள் அதிகரித்துள்ளனர். கிராமம் என்றால் என்ன? நகரம் என்றால் என்ன? நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியாது குழம்பிய குட்டையில் எதையோ தேடுகின்ற போக்குகள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இன்றைய மனித சிந்தனைகள் நவீன உலகத்தை கட்டியெழுப்பி செவ்வாய் கிரகத்தில் குடியேறவும், அங்கு பயிர் செய்யவும் திட்டமிடப்படுகின்றன. ஆனால் நாம் மனித உரிமைகள் பற்றியும், அதன் சிதைவுகள் பற்றியும் பேசுவதிலிருந்து இன்னும் விடுபடவில்லை. மனிதாபிமானம் மீட்சிபெற்று நவீனத்துவ சிந்தனைகளும், சகோதரத்துவ வாஞ்சைகளும் மேலோங்குகின்ற அரசியல் சித்தாந்தங்களும் உருவாக்கம் பெறுகின்ற நாட்களை எதிர்பார்க்கும் உலக சமுதாயத்தைக் கட்டியெழுப்புகின்ற எதிர்கால சிற்பிகளை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முற்சிப்பதே இன்றைய உலக மனித உரிமைகள் தினத்தில் சிந்தையில் கொள்வது சிறப்பானதாகும்.
கல்வியில் மனித உரிமைகளின் தாக்கம்
------------------------------------------------------------
ஐ.நா.பொதுச்சபை பிரகடனத்தினது மனித உரிமைகளின் உறுப்புரை 26(1), (2)ல் கூறப்பட்டுள்ளவாறு 'ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமை, ஆரம்பக்கல்வியின் அவசியம், கல்வி இலவசமாக வழங்குவது பற்றியும், கல்வி மனிதனது ஆளுமைவிருத்தியில் முழுமையாக வியாபித்து, அதனூடக எங்கும் நன்னெறியுடன் கூடிய சமாதானம் பொலிவடைந்து காணப்படல் வேண்டும் எனும் கூற்றுக்கேற்ப கல்வி மிக முக்கியமான உரிமையாக காணப்படுகிறது. கல்விக்கான உரிமைகள் விடயத்தில் இலங்கை முதன்நிலை வகிக்கிறது. இலவசக்கல்வி, எல்லோருக்கும் கல்வி, கட்டாயக்கல்வி, ஆரம்பக்கல்வி, கட்டாயக்கல்வி வயதின் வரையறை, இலவச பாடநூல், இலவசஉடை, இலவசஉணவு வழங்குதல் போன்றவைகளை வழங்கியும் கல்வி பெறுவதற்கான உரிமையை நம்மரசு வழங்கியுள்ளது.
இதன்காரணமாக எழுத்தறிவு வீதம் இன்று ஆசிய நாடுகளில் ஒரு முதன்மை நிலை பெற்றுள்ளது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் 'நாடுகள் அல்லது ஆள்பலங்களின் அரசியல் அந்தஸ்துக்கு காரணமாக எவ்வித வேறுபாடுமின்றி எல்லாப் பாடசாலைகளிலும் பிற கல்வி நிறுவனங்களிலும் பரப்பவும், காட்சிக்கு வைக்கவும், விளங்கவும்' செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்கவும், சர்வதேச சட்டங்களை மதித்தல் எனும் இலங்கையரசியல் யாப்பின் 27(15) உறுப்புக்கமைவாக யுனஸ்கோவின் - கல்வியில் பாரபட்சத்திற்கெதிரான சமவாயம், சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் போன்ற சர்வதேச சட்டங்களை மதித்தலின் கீழ் கல்விக்கான உரிமைகள் பாரப்பட்சமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. அதனையும் தாண்டி இன்று ஆயிரம் பாடசாலைகள் திட்டம், 5000பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம்;, பிள்ளை நேயப் பாடசாலைகள் என்று பல திட்டங்கள் ஊடாக பாடசாலைகள் அனைத்தும் கல்வி பெறுவதற்கான உரிமைகளை சீர் செய்கின்ற ஒரு நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.
இருப்பினும் இன்றைய காலகட்டங்களியல் ஜனநாய மரபுகளை மறந்து அல்லது தொலைத்துவிட்டு தேடுகின்ற ஒரு சமூகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளை மேம்படுத்துகின்ற போக்குகள் அதிகாரமளிக்கப்பட்டோர்களால் உருவாக்கம் பெற்றுள்ள நிலையில் உண்மையான மனித உரிமைகளின் தார்ப்பரியம் உணரப்பட்டு அது வெளிக்கொணரப்படுமாக இருந்தால் அதுவே உண்மையான மனுதர்மமாகும். ஒருசில நாடுகளில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக மானிடசமூகம் சின்னாபி;ன்னமாகிய நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலாதிக்க வெறிகள், சாதி, மொழி, இனத்தின் ஊடாக மீறப்பட்டுள்ளமை மனித அழிவுகளுக்கு வித்துடுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். உலகின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள ஐநா. சபையின் போக்குகள் நிதானத்துடனும், மனித விழுமியங்களை கட்டியெழுப்பக்கூடியவாறும் அமைதல் வேண்டும்.
உன்னைப்போல நீ மற்றவனையும் நேசிக்க வேண்டும் அதுவே மனித உரிமையாகும். என்பதை நினைவிற் கொள்ளவதுடன், முன்னாள் ஐநா. சபையின் பொதுச் செயலாளர் கொபி அனான் 'எவை எங்களை மனிதம் உடையவர்களாக்கின்றனவோ அவைதான் மனித உரிமைகளாகும்' என்று கூறியதற்கேற்ப மனித உரிமைகள் பேணப்படவேண்டும், அவை ஒவ்வொரு மனிதப்பிறவியிலும் மேலாடவேண்டும். சட்டம், ஒழுங்கு, மனிதாபிமானம் பேணப்படுகின்ற சிறந்த சமுதாயமாக கட்டியெழுப்ப அனைவரும் இன்றைய மனித உரிமைகள் தினத்தில் திடசங்கட்பம் பூணுவோம்.
Post a Comment