Header Ads



காதல் நாடகங்களால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க புதிய அமைப்பு


காதல் நாடகங்களால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.

மதுரையில் அனைத்து சமுதாய ஒருங்கிணைப்பு மாநாடு இன்று 20-12-2012 காலை தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.  இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், புதிய அமைப்பின் பெயர் குறித்து அறிவித்தார், மேலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான விவரங்களையும் தெரிவித்தார். 

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகக் கூறிய ராமதாஸ், இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் கூறினார். புதிய அமைப்புக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் குறித்துக் கூறிய ராமதாஸ், நாடக காதல் திருமணங்களால் பாதிக்கப்படும் பெண்களை, பெற்றோர்களை பாதுகாத்திட அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், இது அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையாக, பின்னர் சுருக்கமாக ஒரு பெயர் வைக்கப்படும் என்றும் கூறினார். 

* வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டில் இருந்து அப்பாவி சமுதாய மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* காதல் நாடகங்களால் பாதிக்கப்படும் இளம்பெண்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது

* இத்தகைய காதல் நாடகங்களைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த வயதுகளுக்கு முன்னர் திருமணம் செய்வது என்றால், அதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்பதை சட்டபூர்வமாக அறிவித்து, சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்.

* பணம் பறிக்கும் நோக்குடன் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்துபவர்களுக்கு, கடுமையான தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இந்தக் காதல் நாடகங்களில், பல்வேறு சமுதாயத்தினர் அடங்கிய ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவைச் சேர்ந்த சில தலைவர்கள், இத்தகைய காதல் நாடகங்களை பணம் பறிப்பதற்காக இளைஞர்களைத் தூண்டிவிட்டு, அரங்கேற்றி வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் அனைத்து சமுதாயப் பெண்களும் பாதுகாப்பாகச் சென்று வர, சென்னையைப் போன்று மகளிர் மட்டும் சிறப்புப் பேருந்துகளை பள்ளி, கல்லூரி, அலுவலகப் பகுதிகளுக்கு அரசு இயக்க வேண்டும்.

* காதல் நாடகத் திருமணங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் குறித்து இந்தக் குழு உண்மை நிலையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

* தமிழகத்தில் எஸ்சி., எஸ்டி., வன்முறைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தச் சட்டப் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப் படுவதுதான் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட காரணமாக உள்ளது. இதைத் தடுக்க, எஸ்சி., எஸ்டி., வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வலியுறுத்தி, அனைத்து சமுதாயத்தின் சார்பில் ஜன.24ம் தேதி மாவட்ட தலைநகர்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

- இவ்வாறு இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று மதுரையில் நடைபெற்ற கூட்டம் போன்று, நாளை டிச.21ம் தேதி கோவையில் அனைத்து சமுதாயக் கூட்டம் நடைபெறும் என்றார் ராமதாஸ்.

No comments

Powered by Blogger.