ஸஹாபாக்களின் கால்பட்ட இலங்கை
(முஹம்மத் ஜான்ஸின்)
ஏகதெய்வக் கொள்கையான இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீண்டும் கி.பி.611 இல் நிலைநாட்டப்பட்டது. இக்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற மூன்றாவது நபராக ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள் இருக்கின்றார்கள். உலகத்தில் வைத்து முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் நன்மாறாயம் கூறப்பட்ட பத்து ஸஹாபிகளில் ஸஅத் (ரலி) ஒருவராவார். இவர் தனது 17வது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
கி.பி.615இல் இவர்கள் அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கு வாழ்ந்த இவர்கள் ஏனைய நாடுகளுக்கும் இஸ்லாத்தை போதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே தனக்கு பரீட்சயமான இந்தியா(ஹிந்த்), இலங்கை(ஸரன்தீவ்), சீனா போன்ற நாடுகள் அவருக்கு நினைவுக்கு வந்தது. அவருடைய தந்தையான அபிவக்காஸ் அவர்கள் சீனாவுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டவர்கள். எனவே ஒரு பாய்மரக்கப்பலில் பிரயாணம் செய்து இந்தியாவின் கொடுங்கல்லூர், நாகபட்டிணம், பூம்புகார், கீழக்கரை, காயல் பட்டிணம், மணிபள்ளவம் (நயினாதீவு)போன்ற துறைமுகங்களில் தரித்து தனது பிரயாணத்தைத் தொடர்ந்தார்கள். இறுதியில் தற்போதைய பங்களாதேஷின் துறைமுக நகரமான சிட்டாகொங்கில் சில நாட்கள் தங்கி அங்கிருந்த மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர்களில் சிலர் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டனர். இதன் பிறகு அங்கிருந்து தரை மார்க்கமாக மணிப்பூர் சென்று அங்கிருந்து மேகாலயா மற்றும் அஸாம் ஊடாக சீனா சென்றடைந்தார்கள். இவர்கள் செல்லுமிடமெல்லாம் இஸ்லாத்தின் ஏகதெய்வ கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள். இவருடைய பிரச்சாரங்களை மக்கள் வரவேற்றதுடன் சிலர் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டனர்.
இங்கு மணிபள்ளவம் என்று கூறப்படும் இடம் இலங்கையின் புராதன நாகர்கள் வாழ்ந்த இடமான நயினாதீவுடன் கூடிய ஒரு பிரதேசமாகும். இது மணிபள்ளவம் என்று அழைக்கப்பட்டதாக இந்திய இலக்கிய ஏடான மணிமேகலை கூறுகின்றது. எனவே ஸஅத் இப்னு அபிவக்காஸ் (ரலி) அவர்கள் யாழ்ப்பாண தீபகற்பத்தின் ஒரு தீவுக்கு விஜயம் செய்துள்ளார்கள்.
வரலாற்றாசிரியர் ஹமீதுல்லாஹ் அவர்கள் எழுதிய 'முஹம்மத் ரஸுலுல்லாஹ்' என்ற நூல் ஒன்று இலண்டனிலுள்ள இந்திய நூலகத்தில் இருக்கின்றது. நூலக தொடர் இலக்கம் அறபிக் 2807, 152-173 என்ற பகுதியிலுள்ள புத்தகத்தின் பிரகாரம் மதீனா முஸ்லிம்களை கொண்ட அறபி வணிகர்கள் சீனா சென்று இலங்கையூடாக திரும்பும் வழியில் இந்தியாவின் கேரளாவிலுள்ள கொடுங்கலூர் துறைமுகத்தில் தங்கியிருந்த வேளை சேரமான் பெருமாள் என்ற மன்னனை சந்தித்து மக்காவில் நபியவர்கள் சந்திரனை பிளந்து காட்டிய நிகழ்ச்சியை உறுதிப்படுத்தியதால் மன்னனும் அவர்களுடன் சேர்ந்து அரேபியாவின் ஜித்தா துறைமுகம் வரை சென்று நபியவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றதுடன் தனது பெயரை தாஜுதீன் என்று மாற்றியதாகவும் பிறகு திரும்பிய வழியில் ஓமான் ஸலாலாவில் மரணமானதாகவும் எமுதப்பட்டுள்ளது.
இச்செய்தியை அபி சைதுல் குத்ரி (ரலி) அவர்களும் உறுதி செய்துள்ளார்கள். இமாம் அல்ஹாபிஸ் அபி அப்துல்லாஹ் அல் ஹாகிம் தனது சகீகைன் அல்முஸ்தரக் என்ற நூலில் பாகம் -4 அத்தியாயம் 33 பக்கம் 241இல் கிதாபுல் அதாமா என்ற தலையங்கத்தின் கீழ் இந்த சம்பவத்தை எழுதியுள்ளார்கள். கி.பி. 617 சவ்வால் மாதத்தின் பிறை 27 வியாழக்கிழமை அன்று சேரமான் நபியவர்களை ஜித்தாவில் வைத்து சந்தித்து இஸ்லாத்தை ஏற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னர் நபியவர்களுக்கு ஒரு குடத்தை அன்பளிப்பாக கொடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் சந்திரனை பிளந்து காட்டியதை இந்தியாவின் மாஜ்பார் (மலபாரைச்) ஆண்ட மன்னன் ஜாகர்வானீ பர்மாள் பார்த்ததாகவும் அவர் இது பற்றி விசாரித்த போது அரேபிய தீபகற்பத்தில் தோன்றியிருக்கும் நபியொருவரின் அத்தாட்சி அது என்று தெரிய வந்தது. அம்மன்னர் அரபு கடல் பிரயாணிகளுடன் ஜித்தா சென்று நபியவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்றதாகவும் திரும்பி வரும் வழியில் ஓமானின் ஸலாலா பிரதேசத்தில் இறையடி சேர்ந்ததாகவும் 'வதானே ஹிந்த்' என்ற கையெழுத்து பிரதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல் இந்தியாவின் 'தாஇரத்துல் ஹின்த்' என்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் இந்த ஸஹாபியின் சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளதுடன் மன்னரின் இயற்பெயர் 'ஸர்பானக்' என்று கூறியுள்ளார்.இந்தப் பெயரே அரபிகளிடத்தில் பிரபள்யமானது. (நூல்: அல் இஸாபா, லிஸானுள் மீஸான்)
சகிருதீன் இப்னு பகீஉத்தீன் அல் மதனி என்ற மதீனா அன்ஸாரி ஸஹாபி தலைமையிலான குழுவையே மன்னர் சந்தித்துள்ளார். இந்த சகிருதீன் (ரலி) அவர்கள் இலங்கையிலுள்ள பாபா ஆதம் மலையை பார்வையிட வந்ததானவும் வேறொரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வஹாப் பின் அபி கப்ஸா என்ற ஸஹாபி நபியவர்கள மக்கா குரைஷிகளுடன் ஹுதைபிய்யா உடன் படிக்கை செய்த காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ததாக சீனாவின் வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment