Header Ads



பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருங்கள் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை


அனர்த்த நிலைமைகள் நிறைந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக 72 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளன. 9 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், 22 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிங் கங்கை, நில்வளா, கிரிந்தி ஓய மற்றும் கலா ஓய ஆகியவற்றின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளன.

பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் மஹாவலி கங்கையுடன் தொடர்புடைய அணைக்கட்டுகளிலும் 85 சதவீதம் நீர்மட்டங்கள் உயர்ந்துள்ளன.

இதேவேளை, தேசிய கட்டிய ஆய்வு நிறுவகத்தினால் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமைகள் காரணமாக சாதாரண பரீட்சையில் தோற்றமுடியாமல் போன மாணவர்களுக்காக பிறிதொரு தினத்தில் விசேட பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அசாதாரண காலநிலையால் பரீடசைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்கள் தமது நிலைமை குறித்து அறிவிக்க முடியும்.

No comments

Powered by Blogger.