Header Ads



பெரும்பான்மை சமூகத்துடன் உள்ள இடைவெளியை குறைத்துக்கொள்ள வேண்டும்


(ஜூனைட்.எம்.பஹ்த்)

தற்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த சகோதர இனத்தை தூண்டிவிட்டு அரசியல் இராஜதந்திர இலாபங்களை அடைந்துகொள்ள சில உள்நாட்டு மற்றும் பிற நாட்டு சக்திகள் இரவு பகலாக சதி முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருப்பதோடு நாட்டின் பல பாகங்களிலும் முறுகல் நிலைமைகளைத் தோற்றுவித்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலைமையில் பெரும்பான்மை சமூகத்துடன் நமக்கு உள்ள இடை வெளியை இயன்ற வரை குறைத்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்குள் இருந்து தலை தூக்கும் தீய சக்திகளை அவர்களது நிகழ்ச்சி நிரல்களை உள்வீட்டிலேயே தோல்வியடையச் செய்ய வேண்டும்.

ஏனெனில் மிகப் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்கள் மிக நல்லவர்கள், தீய சக்திகள் குறுகிய இலக்குகளை அடைந்து கொள்ள அவர்கள் மத்தியில் பீதியையும் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிபிராயங்களையும் பரப்பி வருகின்றனர்.

நல்லவர்களின் அறிவும் அனுபவமும் நற்குணங்களும் இனமத பேதமின்றி சகலருக்கும் சிறந்த அரணாகவும் அரவணைப்பாகவும் இருக்கும் என்பதனை நாம் மனதிற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தங்களை தங்களுக்குள் தனிமைப் படுத்திக் கொண்டு தேசிய மட்டத்தில் உள்ள ஒரு சில பிரபலங்கள் அல்லது அவர்களில் தங்கியிருக்கும் ஸ்தாபனங்களை நம்பியிருப்பது தவறான அணுகுமுறையாகும், அரசியல் தலைமைகள் சிலவேளை நிலைமைகளை மோசமடையவும் செய்துவிடலாம். எங்களுக்கு பலமான கட்டமைப்புகளுடன் கூடிய சிவில் தலைமைகளும் கிடையாது. அவ்வாறு சில தலைமைகள் இருந்தாலும் அவ்வப்போது சில ஆலோசனைகளை வழங்கவும் அறிக்கைகளை விடவும் சில சந்திப்புக்களை மேற்கொள்ளவும் என மட்டுப்படுத்தப் பட்ட நடவடிக்கைகளையே அவர்களால் மேற்கொள்ள முடியும். தேசிய ரீதியில் களநிலவரங்களை அவர்களால் கையாள முடியாது என்பதே கசப்பான உண்மை.

தற்போதைய கள நிலவரங்களைக் கருத்திற் கொண்டு உடனுக்குடன் சட்ட ஆலோசனைகளை வழங்கவும் தேவைப்படின் சட்டத்தரணிகளின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொடுக்கவும் ஒரு ” சட்ட நிதியம்”அவசியம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தேசிய செயலணி இவ்வாறானதொரு நிதியத்தை அவசரமாக தோற்றுவிப்பது சிறந்ததது. முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட ஒரு ஆலோசனை சபை உருவாக்கப் பாடல் வேண்டும், அதேவேளை நாடு முழுவதிலும் சகோதர இன சட்டத்தரணிகளினது சேவைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே: ஒவ்வொரு ஊரிலும் சகல இயக்கங்கள் தரீக்காக்கள் கட்சிகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் உலமாக்களையும் கொண்ட ஷூரா சபை ஒன்றை நிறுவிக் கொள்ளுதல்.

தெரிவு செய்யப் பட்ட அனுபவத்திலும் அறிவிலும் கூடிய ஒரு குழுவினர் தத்தமது ஊர்களுக்கு அருகாமையில் உள்ள பௌத்த விகாராதிபதிகளை சந்தித்தது அவர்களுடன் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளல்.

பெரும்பான்மை சமூகத்தில் உள்ள கல்விமான்களை சமூகத்தில் மதிக்கப் படும் பிரமுகர்களை சந்தித்து முஸ்லிம்கள் குறித்து தீய சக்திகள் செய்யும் பிரச்சாரங்கள் தப்பபிப்பிராயங்கள் என்பவை குறித்து கலந்துரையாட வேண்டும்.

ஊர்ப்பிரமுகர்கள் தமது பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள போலிஸ் காவல் துறையினருடன் சிறந்த நல்லுறவைப் பேணுதல்.

பிராந்தியத்தில் உள்ள சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளுடன் கலந்தாலோசித்து அவர்களுடன் நல்லுறவை பேணுதல்.

பிரதேசத்தில் உள்ள மாற்றுமத இளைஞர் கழகங்களுடன் முஸ்லிம் இளைஞர் கழகங்கள் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து கொள்ளல்.

இவ்வாறு இன்னோரன்ன சமயோசிதமான மற்றும் புத்தி சாதுரியமான நடவடிக்கைகளை முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் பாடசாலை மாணவ மாணவியர் மத்தியில் சமூக நல்லுறவு குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்!

குத்பா பிரசங்கங்களை காலத்துக்கு ஏற்ற தலைப்புக்களில் உலமாக்கள் நிகழ்த்துதல், அல்லது குத்பா பிரசங்கங்களை சுருக்கி நிகழ்த்திவிட்டு ஊரிலுள்ள புத்திஜீவிகள் கல்விமான்களில் ஒருவரை தெரிவு செய்து சில வழிகாட்டல்களை மேற்கொள்ளல்.

தற்போதைய கள நிலவரங்களைக் கருத்திற் கொண்டு உடனுக்குடன் சட்ட ஆலோசனைகளை வழங்கவும் தேவைப்படின் சட்டத்தரணிகளின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொடுக்கவும் ஒரு ” சட்ட நிதியம்” அவசியம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தேசிய செயலணி இவ்வாறானதொரு நிதியத்தை அவசரமாக தோற்றுவிப்பது சிறந்ததது. முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட ஒரு ஆலோசனை சபை உருவாக்கப் பாடல் வேண்டும், அதேவேளை நாடு முழுவதிலும் சகோதர இன சட்டத்தரணிகளினது சேவைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.