எகிப்தில் இஸ்லாமிய சார்பு அரசியலமைப்புக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பு
(Tn) எகிப்தின் அரசியலமைப்புக்கு முதல் சுற்று வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் ஆதரவு வழங்கியுள்ளனர். எனினும் எதிர்த் தரப்பினரும் தமக்கு குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்றிலும் பெரும்பான்மையானோரின் ஆதரவுடன் பெரும் போராட்டத்திற்கு பின் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முதல் சுற்று வாக்கெடுப்பில் சிறு இடைவெளியிலேயே புதிய அரசியலமைப்புக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. எனவே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு மக்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவிலேயே இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசியலமைப்புக்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று சர்வஜன வாக்கெடுப்பில் உத்தியோகபூர்வமற்ற முடிவின்படி 56.5 வீதமானோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனினும் வாக்கெடுப்பின் உத்தியோகபூர்வ முடிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு முடிந்த பின் இறுதியாகவே அறிவிக்கப்படவுள்ளது.
இந்த வாக்குச் சீட்டில் புதிய அரசியலமைப்பை ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா என்ற இலகுவான கேள்வியே கேட்கப்பட்டது.
இதில் முதல் சுற்று வாக்குப் பதிவு தினத்தில் எதிர்க் கட்சியான லப்த் கட்சியின் கெய்ரோவிலுள்ள பிரதான அலுவலகம் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அலக்சான்ட்ரியாவின் டகஹ்லியா நகரிலும் சனிக்கிழமை மோதல் பதிவாகியுள்ளது. இதில் பள்ளிவாசல் இமாம் ஒருவர் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பிரசாரம் செய்ததையடுத்தே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சனி இரவுவரை நீடித்துள்ளது. இதன்போது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு மோதல்களில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
வாக்கெடுப்பையொட்டி 250,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு 51 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் முதலாவது சுற்றில் 26 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் முதல் சுற்று வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் புதிய அரசியலமைப்பை ஏற்று 56.5 வீதமானோர் வாக்களித்திருப்பதாக அந்த கட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தமது உறுப்பினர்களைக் கொண்டு விரைவாக வாக்குகளை எண்ணி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 99 வீதமான வாக்குகளை எண்ணப்பட்ட நிலையில் அது இறுதி முடிவை வெளியிட்டுள்ளது. இந்த முடிவை எதிர்ப்பாளர்களும் ஏற்றுள்ளனர். எனினும் தாம் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை பெற்றிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த முடிவுகளின்படி புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக 4,595,311 (56.50 வீதம்) வாக்குகள் பதிவாகி யுள்ளதோடு 3,536,838 (43.50 வீதம்) எதிராக வாக்குகள் பதிவாகியுள்ளன. எனினும் தலைநகர் கெய்ரோவில் பெரும்பான்மையானோர் புதிய அரசியலமைப்பு எதிராகவே வாக்களித்துள்ளனர். இதில் கெய்ரோவில் எதிராக 56.3 வீத வாக்குகளும் ஆதரவாக 43.1 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
எனினும் அலக்சான்ட்ரியா உட்பட ஏனைய நகரங்களில் அரசியலமைப்புக்கு ஆதரவாகவே பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளனர். அதிலும் சொஹாக் நிர்வாக சபையில் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக 79 வீதமானோர் வாக்களித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் 40 வீதத்திற்கும் அதிகமானோர் அரசியலமைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக எதிர்ப்பாளர்களின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி கூறியுள்ளது.
எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இடம்பெறும் பகுதிகள் இஸ்லாமிய வாதிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ள பகுதிகள் என்பதால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. புதிய அரசியல மைப்பு நிறைவேற்றப் படும் பட்சத்தில் இன்னும் ஆறு மாதங்களில் எகிப்தில் மீண்டும் பொதுத் தேர்தல் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment