சொல்லி வேலையில்லை...!
(ஜே.எம்)
சிங்களவர் ஒருவரால் இன்னொரு சிங்களவருக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல் ஒன்று தவறி ஒரு முஸ்லிமிற்குச் சென்று விட்டது. அவர் அதை எனக்கு அனுப்பிவைத்தார். அது சிங்கள மொழியில் ஆங்கில எழுத்தில் எழுதப்பட்ட 'சிங்லிஸ்' குறுஞ் செய்தியாகும்.
அதன் தமிழ் மொழி பெயர்ப்பு பின்வருமாறு,,
'2032 ல் சிங்களவர்களைவிட முஸ்லிம் இனம் 53 சதவீதத்தால் அதிகரிப்பர்.
எமது சிங்கள நாடு அவர்களுக்கு நிச்சயமாக உரிமையாகிறது.
இப்பொழுதிருந்தே முஸ்லிம் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்வதை நிறுத்ததுவோம்.
ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்களை நிறுத்துவோம்.
அவர்களுக்கு எமது காணிகளை விற்கவேண்டாம்.
எமது பெண் பிள்ளைகளை 'தம்பியா'விற்கு (முஸ்லிமிற்கு) திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டாம்.
எடிசலாட் போன்ற நிறுவனங்கள் பள்ளி வாயல் கட்டு வதற்கு பாரிய அளவில் பணம் கொடுக்கிறார்கள்.
பெஷன்பக், நோலிமிட் போன்ற நிறுவனங்களில் ஆடை அணிகள் வாங்க வேண்டாம்.
எமது நாட்டைப் பாதுகாப்போம்.
தாங்களும் உண்மையான சிங்கள பௌத்தனாயின் இதை சிங்களவர்களுக்கு அனுப்பவும்' என்பதாகும்.
இதைப் பற்றி பலரும் கதைக்கும் விதம் பலவிதம். எவனோ ஒரு மடையன் அல்லது ஒரு இன வாதி செய்த வேலை இது. அதைப் பெரிசு படுத்தத் தேவையில்லை என்றனர்.
இன்னொரு சாரார் கூறுவது இது வியாபாரப் போட்டியின் காரணமாக நடைபெறும் ஒரு பணிப்போர் என்றனர்.
மித வாதிகளில் மற்றொரு சாரார் இதற்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
எமது புத்தி ஜீவிகள் கூறுகிறார்கள் இது தொடர்பாக நாம் சிங்கள மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று.
இவை அனைத்தையும் விட சிறந்த ஒரு முயற்சியாக எமது உலமா சபையோ 20.12.2012 அன்று லங்காதீப சிங்களப் பத்திரிகையில் பாரிய விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தது. இதற்கு ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் செலவாகி இருக்கும். நல்ல முயற்சி பாராட்டுகிறோம். ஆனால் எனது நண்பர் ஒருவர் சொன்ன கதை எனக்கு சற்று கவலையாக இருந்தது.
அதாவது மேற்சொன்ன விளம்பரத்தை வாசித்து முடிப்பதற்குள் அவருக்கு இரண்டு பெணடோல் தேவைப்பட்டதாம். அவர் நோயாளியல்ல.விளம்பரம் அவ்வளவு கடும் சொல்லாகவும் பெரிய புராணமாகவும் இருந்ததாகச் சொன்னார். நானும் வாசித்தேன் முழுக்க என்னால் வாசிக்க முடியவில்லை. காரணம் சில இடங்களில் சிறிய எழுத்து. சில சொற்களுக்கு தமிழ் சொல்லை அகராதியில் தேட வேண்டி இருந்தது.
இன்னொரு நண்பர் கூறினார்.
இன்று சந்தைப்படுத்தல் தொடர்பான பட்டப்படிப்பு டிப்ளோமா, என்றெல்லாம் எத்தனையோ பாடத்துறைகள் உண்டு. பணம் கொடுத்தால் அவர்களது அலோசனையைப் பெற்றுக் கொள்ளமுடியும். சந்தை வாய்ப்பு தொடர்பாக வழிகாட்டும் பெரிய நிறுவனமான உலமா சபையின் ஹலால் குழுவிற்கு இதை தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ஆச்சரியம்.
ஒரு மொண்டசூரி ஆசிரியையிடம் (பாலர் பாடசாலையில்) கேட்டால் அவர் கூடச் சொல்வாராம். பெரிய எழுத்தில் சுருக்கமாக எழுத வேண்டும். கலர் பிரிண்டில் கிராபிக் முறையில் அதை எடுத்துக்காட்டமுடியும் என்பதை எனக்கு நீண்ட விளக்கம் ஒன்றின் மூலம் விளக்கினார்.
இன்னொரு நண்பர் கூறினார் நீங்கள் பத்திரிகைகளில் கார்ட்டுன் (கேளிச் சித்திரம்) பார்ப்பதில்லையா? ஒரு சிறிய படத்தின் மூலம் பெரிய ஆழமான கருத்தையே விளக்கமுடியும் என்றால் நவீன உலகில் பாமர சிங்கள மக்களுக்கு விளங்கும் வகையில் சுருக்கமாக காட்டலாமே என்றார்.
குழம்பிப் போன நான் ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் சொன்னார்.
உண்மைதான். பௌத்த சமயத்தில் உள்ள ஓரிரு 'காத்தாக்'களை அப்படியே காட்டி பின் ஏனைய சமயங்கள் சிலவற்றையும் குர்ஆன் வசனத்தையும் நபியின் விளக்கத்தையும் சுருங்கக் கூறி இதுதான் உணவிலுள்ள ஹலால் என்றும் மற்றைய பகுதிகளை உணவில் மட்டுமல்ல கொடுக்கல் வாங்கல், சமூக வாழ்கை போன்றவற்றையும் கூறலாம் என்றார். எது எப்படியானாலும் முயற்சி நல்லது நல்லதை இயன்றவரை நல்லதாய்ச் செய்வோம். சமுகத்தில் குறை கூறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அதை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.
எனவே பத்திரிகை விளம்பரங்களை மேற்கொள்வோர் இப்படியான விடயங்களையும் கவனத்திற் கொள்வது நல்லது.
இனி விடயத்திற்கு வருவோம்...
மேலே சொன்ன எஸ்.எம்.எஸ். மற்றுமல்ல. அதே விடயங்கள் திரும்பத் திரும்ப போஸ்டர்களாகவும் வந்துள்ளன.
இது ஆதாரமோ அடிப்படையோ இல்லாதது என்பது எமக்குத் தெரியும். இதை எப்படி விளக்குவது. சிங்கள சமுதாயத்தின் புத்தி ஜீவிகள் இதைப்பற்றி பெரிது படுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு எம்மை விட யதார்த்தம் புரியும். ஆனால் பரவலாக உள்ள அற்பமாகச் சிந்திக்கும் பொது சனங்களே அவர்களில் அதிகம்.
2032ம் ஆண்டு என்பது இன்றுடன் 20 வருடமாகும். அப்படியாயின் இன்று பிறக்கும் பிள்ளையின் மனதில் இதை ஏவிவிட்டு 20 வயது வாலிபனாகும் போது எம்மை எதிர்க்கும் ஒரு பரம்பரையை உருவாக்கும் திட்டமா?
அல்லது உண்மையாகவே அவர்களது புதிய கணிப்பா?
கணிப்பு என்று கூறும் போது அண்மை காலத்தில் நடந்த சில விடயங்களையும் நாம் நினைவு கூறவேண்டும். அதாவது குடிசனக் கணக் கெடுப்புக்களின் போது உண்மையான எமது தொகை மறைக்கப்பட்டு வந்தது.
இது தொழில் வழங்கள், பல்கலைக்கழகப் பிரவேசம் போன்ற பல துறைகளில் பின் பற்றப்படும் இன விகிதாசாரத்தைக் குறைத்து மதிப்பிட்டு அவர்கள் நன்மையடைந்திருக்கலாம்.
கடந்த சில வருடங்களில் உண்மையான கணக்கெடுப்பை எடுத்த போது பாரிய வித்தியாசம் இருந்திருக்கலாம் அந்த திடீர் ஏற்றம் தொடர்ந்தும் இருக்க முடியாது. ஆனால் அதன் அடிப்படையில் போடப்பட்ட தப்புக்ணக்காகவும் இருக்கலாம்.
இவை அனைத்தையும் விட வர்த்தகப் போட்டிதான் மிகைத்து நிற்கிறது என்பதை சில விடயங்கள் தெளிவாக்குகின்றன. உதாரணமாக எஸ்.எம்.எஸ். யுக்தியானது தொலை பேசியுடன் சம்பந்தப்படுகிறது. ஆகவே எடிசலாட் தொலைபேசி நிறுவனப் போட்டியை இன ரீதியாகக் காட்டி ஆதாயம் தேடும் ஒரு சிலராகவும் இருக்கலாம். மற்றது 2032ம் ஆண்டு முஸ்லிம்கள் 53 சதவீதமாகுவதற்கும் ஹலால் உணவிற்கும், பெஷன் பக் மற்றும் நோலிமிட்டில் பொருட்கள் வாங்குவதற்கும் என்ன தொடர்பு..?
ஆனால் மறைக்க முடியாத உண்மை ஒன்றும் உள்ளது. அதுதான் வெளிநாட்டுத்தலையீடு உள்ளமை. என்றுமில்லாதவாறு வெளிநாட்டு பௌத்த பிக்குகளை நாம் சர்வசாதரணமாக உள்ளுரில் காண்கிறோம். அண்மையில் முஸ்லிம்களை படுகொலை செய்த ஒரு நாட்டு பிக்குகள் மற்றும் பொது மக்கள் இங்கு பரவலாக உள்ளனர். இது ஒரு மறைமுகத் தூண்டுதலாக இருக்கலாம்.
இப்பிரச்சினை என்ன வடிவம் பெறுகிறது என்பதை இன்னும் சற்று நிதானமாக அவதானிப்பதுவும் நல்லது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். வீராப்புப் பேசும் சிலர் முஸ்லிமகளுக்கு கோழைத்தனம் கூடாது என்பர். நபி (ஸல்) அவர்கள் உதேபியா உடன் படிக்கையில் கைச்சாத்திட்டதை நாம் கோழைத்தனம் என்று கூறமுடியுமா? மக்காவை விட்டு இரவோடு இரவாக மதீனாவிற்குச் சென்றமை கோழைத்தனம் என்று நினைக்கமுடியுமா? எனவே சந்தர்ப்ப சூழ் நிலைகளுக்கேற்றப சில முடிவுகளை நாம் எடுக்கவேண்டிவரும்.
வடகிழக்கிலுள்ள சமூக, புவியில் மானிட, நிமைகளுடன் ஒப்பிடும் போது வடகிழக்கிற்கு வெளியே நிதானமும் தேவைப்படுகிறது. அதே நேரம் வடகிழக்கிற்கு வெளியே உள்ள ஒரு பிரச்சினையாகவே இதனை நாம் அணுக வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் சிங்களவருடன் வாழும் மக்களது பிரச்சினையாக இது உள்ளது. சிலர் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பர். ஆனால் அது எந்தளவு பொருந்தும் என்பது இவ்விடயத்தில் சிந்திக்கவேண்டிய ஒன்று.
அண்ணியோன்யம், அன்பு.பரிவு, பாசம் நேசம், கொடுக்கள் வாங்களில் நம்பிக்கை, முன்னுதாரண் நேர்மை போன்ற இன்னோரன்ன பண்புகள் மூலமே அவர்கள் மனதை வெள்ளவேண்டுமே ஒழிய இதர விடயங்கள் உதவாது எனலாம்.
அண்மையில் நடந்த ஒரு சம்பவம்...
மாம்பழ வியபாரியிடம் ஒரு மௌலவி மாம்பழம் வாங்கச் சென்றார். எப்படி பழம் நல்லதா? என்று அவர் கேட்டாராம். 'ஹஸரத் அதை சொல்லி வேலையில்லை.' என்றாராம். இதன் கருத்து என்ன அதன் சுவையை கூறிமுடிக்க இயலாது என்பது. ஹஸரத்தும் வாங்கிக் கொண்டு போனார். வாயில் வைத்ததாராம். நடந்தது என்ன? அதைச் சொல்லி வேலையில்லையாம். அந்தளவு படுமோசம். இதை அவர் ஒரு குத்பா பிசங்கத்தில் கூறினார். எப்படி எம்மவர் திறமை...? சொல்லி வேலையில்லை..!
இது போல் இன்னொரு சம்பவம்..
ஆசனம் உண்டு. ஆசனம் உண்டு. ஏறுங்கள் என்று வாகனத்தில் ஒருவரை ஏற்றினார். ஆனால் ஆசனம் கிடைக்கவில்லை. அவர் வாக்கு வாதப்பட்டார். இல்லை முன்னே இறங்குகிறார்கள். என்று சமாதானப்படுத்தினார். பணத்தையும் வாங்கிக் கொண்டார். சொன்னது போல் முன்னே இறங்கினார்கள். ஆனால் ஆசனம் கிடைக்கவில்லை. அவர் பிரச்சினைப் படுத்தினார். தனியார் பஸ் வண்டி நடாத்துனர் கூறிய பதில் 'நான் என்ன பொய்யா சொன்னேன். ஆசனமும் இருக்கிறது. முன்னே ஆட்களும் இறங்கினார்கள். உமக்கு ஆசன்ம் கிடைக்க வில்லை என்பதற்கு நான் என்ன செய்ய' எனக் கேட்டார்.
சாரதியோ அதை விட ஒரு படி மேலே சென்று 'மஹத்தியா உங்களை எப்படி நாம் பாதையில் விட்டு விட்டுப் போவது. நேரகாலத்ததுடன் வீடு செல்ல வேண்டுமே. வீட்டில் வழிபார்த்துக் கொண்டிருப்பார்களே. எனவே பொய்யைக் கூறியாவது உங்களை எடுத்துச் செல்வது எமது உயரிய பணி' என்று சிங்களத்தில் கூறினார்.
இன்னொரு சம்வத்தில் ஒருவர் சத்தியமாக நான் பாலுக்கு தண்ணீர் ஊற்றவில்லை என சத்தியம் செய்தாராம்.
அவர் தண்ணீர் கலப்பதைக் கண்ட ஒருவர் ஏன்டா பொய் சொல்கிறாய். இன்ன இடத்தில் தண்ணீர் கலப்பதை எனது கண்ணால் கண்டேனே என்றாராம். இல்லை இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்து விட்டீர்கள். நான் ஒருபோதும் பாலுக்கு தண்ணீர் ஊற்றவில்லை. அப்படிப் பொய் சத்தியம் செய்வேனா. வாக்குவாதம் முற்ற அவர் பாலுக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்பதும், தண்ணீருக்குப் பாலை ஊற்றினார் என்பதையும் ஒப்புக் கொண்டாராம். இவை இரண்டு ஒன்றுதானே. இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகள் உள்ள சமூகத்தில் காபிர்களைக் கொண்டு இப்படியான சோதனை வருவது சகஜமாகவும் இருக்கலாம்.
இவ்வாறு நரித்தந்திர வேலை செய்யும் எமது ஒரு சிலரால்தான் நல்லவர்களுக்கும் சோதனை வருகிறது. இது போல் இன்னும் எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும். எனவே சிந்தித்துச் செயலாற்றுவோம்...!!
உண்மையை சொல்கிறேன் சில கொழும்பு கடைகளில் ஒரு பொருளை குறிபிட்டு இருக்கின்றதா என்று கேட்டால் அது அவர்களிடம் இல்லாவிட்டால் இல்லை என்று சொல்லுவதற்கு பதிலாக உடனடியாக உங்களிடம் உள்ளதா என கேட்பார்கள் அந்த நேரத்தில் உண்மையாக அவர்களின் கன்னத்தில் அறையத்தோன்றும்.
ReplyDeleteஒரு பொருளில் விலையில் பொய்சொல்லு கின்றார்கள் என்றால் மற்ற பொருளிற்கு குறைத்து தருவதாக சொன்னாலும் அவர்களை நம்பாது வெளியேறுபவர்கள் நம்மில் பலர் உள்ளார்கள்.