சவூதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு - மன்னர் அப்துல்லாஹ் அறிவிப்பு
சவூதி அரேபியாவில் சிறையில் வாடும் குற்றவாளிகளுக்கு மன்னர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். பொது உரிமை மீறல் குற்றத்தின் கீழ் சிறையில் வாடுபவர்களுக்கும், நிதிக்குற்றங்களுக்காக சிறைப்பட்டு, திவாலாகிப் போனவர்களுக்கும் அவர்தம்
குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அறிவித்துள்ளதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், தனியுரிமை மீறல் குற்றம் புரிந்தவர்களுக்கும், பெரிய குற்றங்களான கொலை, வன்புணர்வு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய நாடு இஸ்லாமிய மதநெறிப்படி ஷரீயத் சட்டத்தைப் பின்பற்றி வருகிறது. அச்சட்டப்படி, பொது உரிமைக் குற்றங்கள் , தனியுரிமைக் குற்றங்கள் என்று இருவகையாக குற்றங்கள் பகுக்கப்படுகின்றன. தனிமனிதருக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவரே மன்னிக்கத் தகுதியானவர் என்பதால் அத்தகு குற்றங்கள் இந்த பொதுமன்னிப்பின் கீழ் வராது என்றும் கூறப்பட்டுள்ளது.
காட்டாக, போக்குவரத்துக் குற்றங்களில் அரசு சார்பில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டாலும், அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பு அடைந்த கைதிகள் இதனை படிப்பினையாகக் கொண்டு குற்றங் களைந்தவர்களாக தேசத்திற்கும், பண்பாட்டிற்கும் இனி பாடுபட முன்வர வேண்டும் என்று இளவரசர் முஹம்மது கேட்டுக்கொண்டுள்ளார். inneram
Post a Comment