Header Ads



'முஹம்மது நபியின் வாழ்க்கையை சிங்கள சமூகம் புரிந்துகொள்ள வழிவகை செய்யவேண்டும்'



ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினர், வியாழக்கிழமை (20) மாலை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடாத்திய நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) பற்றிய மும்மொழி நூல் வெளியீட்டு விழாவில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினர் வெளியிடுகின்ற 'யார் இந்த முஹம்மத் (ஸல்)' என்ற நூல் வெளியீட்டை காலத்தின் இன்றியமையாத தேவையாக நான் கருதுகிறேன். நபி பெருமானார் குறித்த இந் நூல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்படுவதும் வரவேற்கத்தக்கது. சம காலத்தில் நாங்கள் எதிர்நோக்கும் ஒரு முக்கியமான சவாலுக்கு இது ஒரு நல்ல பங்களிப்பென்று கூறினால் மிகையாகாது. 

ஏராளமாக நபி பெருமானாரைப் பற்றி தமிழிழும், ஆங்கிலத்திலும் நூல்கள் வெளிவந்துள்ள போதிலும் சிங்கள மொழியில் அவை அரிதாகவே உள்ளன. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், அதிலும் குறிப்பாக விஷமத்தனமான பிரசாரங்களுக்குள் இந் நாட்டு முஸ்லிம் சமூகம் வலிந்து பிரச்சினைக்குள் இழுக்கப்பட வேண்டும் என தீய சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கக் கூடிய இக் காலத்தில் சிங்களத்திலும் இந்த நூல் வெளிவருவது முக்கியமானது என நான் நினைக்கிறேன். 

இது ஒரு பயங்கரமான விவகாரமாக பரகசியமாக பேசாமல் எங்களுக்குள் இரகசியமாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக மாறியிருக்கிறது. இந் நாட்டின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு படுமோசமான விசமத் தனமான பிரசாரங்களை இந் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்களை தவறான பார்வையில் நோக்குகின்ற போக்கில் பல இணையத் தளங்கள் உருவாகிவரும் காலத்தில் தௌஹீத் ஜமாஅத்தினரின் இந்த முயற்சி மிகவும் முக்கியமானது. 

இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எல்லாத்தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என்ற முயற்சி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனைப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். 

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் காணப்பட்ட அடிப்படையானதொரு அம்சத்தை இந் நாட்டின் பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்வதற்கு நாங்கள் வகை செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற இந்த இறை மார்க்கம் எவ்வாறு பரவியது என்ற விடயம் சம்பந்தமாக காலம் காலமாக பிழையான, விசமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் போதிலும் இஸ்லாம் பரவியதன் அடிப்படை ஆரம்பகால முஸ்லிம் சமூகத்திலும் அன்றும், இன்றும், என்றும் சகிப்புத் தன்மைக்கு கொடுத்த முக்கியமான இடம்தான் காரணம் என நாங்கள் அச்சம் இன்றி சொல்லக்கூடிய அளவுக்கு நபிகளாரின் வாழ்க்கையிலும், அன்னாரின் அருமைத் தோழர்களின் வாழ்க்கையிலும் பின்வந்த தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களுடைய வாழ்க்கையிலும் நாங்கள் பார்க்கிறோம். இதற்கான நீண்ட பட்டியல் அவசியமில்லை. 

வலிந்து வன்முறைக்குச் செல்லாமல், சகிப்புத் தன்மையின் உச்ச கட்டத்தை பேணிய வேறெந்த மார்க்கமும் இஸ்லாத்திற்கு இணையாக இருக்க முடியாது என்ற அளவுக்கு நாங்கள் அதன் உச்சத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறோம். அதன் வெளிப்பாடாகத்தான் இஸ்லாம் அதன் அர்த்தபுஷ்டியான ஆன்மீக, அறிவியலை வெறும் அது ஒரு தனியான வாழ்வியல் என்பதை இன்று உலகறியச் செய்திருக்கிறோம். 

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வந்தான் வரத்தான்கள், சுரண்டிப் பிழைக்க வந்தவர்கள் என்கிற பார்வை மேலோங்கியுள்ளது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து பிடுங்கி எடுக்க வந்தவர்கள் என தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை உற்று நோக்கும் பொழுது இந்த சமூகம் அடுத்தவரிடமிருந்து பறித்தெடுக்கும் சமூகம் அல்ல, கொடுத்து மற்றவரை வாழ வைக்கும் அடிப்படையான பண்பை தன்னகத்தே கொண்ட சமூகமாகும். 

இதனை சரிவர மக்கள் புரிந்துகொள்வதற்காக நாங்கள் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது. 'எவனொருவன் கொடுத்து அல்லாஹ்வை அஞ்சி வாழவில்லையோ' என அல் குர்ஆன் விளிக்கின்றது. அது எவ்வளவு தூரம் என்றால் கொடுப்பதற்கான பண்பு ஒருவனிடத்தில் இல்லையென்றால் அவன் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவன் அல்ல என்ற அளவுக்கு அதனைக் குர்ஆன் வலியுறுத்தியுள்ளது. ஈகைப் பண்பை உயர்த்திக் காட்டும் சன்மார்க்கமாக இஸ்லாம் திகழ்கின்றது. 

ஆரம்பகால சஹாபாக்கள் தங்களிடத்தில் இருந்தவற்றையெல்லாம் மற்றவர்களுக்கு ஈந்தார்கள். ஸக்காத்தை அளந்து கொடுக்கும் கடமை நுபூவத்திற்கு 15 வருடங்களுக்குப் பின்னர்தான் கட்டாயமாகிறது. நபித்துவம் கிடைத்து 15 வருடங்கள் வரை ஸக்காத் என்ற கடமையை தங்கத்திற்கு, நாணயத்திற்கு ஏனையவற்றிற்கு என்று எவ்வாறு கணித்துக்கொடுக்க வேண்டுமென்று இஸ்லாம் சொல்லவில்லை. 

ஸக்காத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளவைகள் எல்லாம் நபித்துவத்திற்கு 15 வருடங்களுக்கு பின்னர் வந்தவை. அதுவரை ஆரம்ப கால சஹாபாக்கள் அளந்து கொடுக்கவில்லை. இருந்தவற்றையெல்லாம் கொடுத்தார்கள். அதனூடாக வளர்ந்தது தான் இஸ்லாம். எனவே இந்தப் பண்புகளைப் பற்றியெல்லாம் இன்னும் விளக்கமாகப் பேசுகின்ற காலமாக இக் காலம் மாறியிருக்கிறது. 

நாங்கள் சுரண்டிப் பிழைக்க வந்த சமூகம் அல்ல. கொடுத்து வாழ வந்த சமூகம் என்ற பேருண்மை நன்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். 

இந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஒரு நல்ல முயற்சியை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினர் இன்று முன்னெடுப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக இந் நாட்டு பெரும்பான்மை சமூகத்தின் மொழியில் நபிகளாரைப் பற்றிய இந் நூலை அவர்கள் வெளியிட்டிருப்பது அவர்களது ஏனைய பணிகளுக்கு மத்தியில் இன்னொரு முக்கியமான மைல் கல்லாகும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம் ஆகும். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த நற் பணியை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வானாக என பிரார்த்திக்கிறேன். 









1 comment:

  1. ஹகீம் சார்.......முதல்ல இந்த புத்தகங்களை "" புத்த ஆமதூறு ""மார்களுக்கு , அத்துடன் சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச முதலியவர்களுக்கு கொடுங்கள்.....அத்துடன் எல்லா பன்சல களுக்கும் கொடுங்கள்........... இதுவே மிக முக்கியம்........

    ReplyDelete

Powered by Blogger.