Header Ads



யாழ் மத்திய கல்லூரி உதைப்பந்தாட்ட அணியின் முஸ்லிம் தலைவர்..!



(சுவைர் மீரான்)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் ஜான்ஸின் எழுதிய, யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்த முஸ்லிம் உதைப்பந்தாட்டக் கழகங்கள், புகழ்பெற்ற முஸ்லிம் உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் 1980 களிலும், 1990 ஆம் ஆண்டிலும் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம் தொடர்பான முக்கிய தகவல்கள் உள்ளடங்கிய கட்டுரையொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

யாழ் முஸ்லிம் மண் வழங்கிய பல திறமையான வீரர்களை, யாழில் பார்த்து ரசித்த பல விறுவிறுப்பான ஆட்டங்களை மீண்டுமொரு தடவை மனத்திரையில் ஓட வைத்த மேற்படி கட்டுரையில், 1940 ஆம் ஆண்டு ஜின்னா மைதானம் அமைக்கப்பட முன்னரே, யாழ் மத்திய கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக முஸ்லிம் ஒருவர் இருந்துள்ளார் என்ற வரலாற்றுத் தகவலை தெரிவித்திருந்த முஹம்மத் ஜான்ஸின்  குறித்த பாடசாலை கால்பந்தாட்ட அணித்தலைவர் தொடர்பில் தகவல்களை பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சி பயனளிக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

1814 ஆம் ஆண்டு காலியில் நிறுவப்பட்ட ரிச்மன்ட் கல்லூரி இலங்கையின் முதலாவது பாடசாலையாக வரலாற்றில் இடம் பெற்றுள்ள நிலையில், 1817 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கில பாடசாலை என்ற பெயரில் ஜேம்ஸ் லைன்ச் (முதலாவது அதிபர்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு,  கலாநிதி பீட்டர் பேர்சிவல் அவர்களால் யாழ் மத்திய கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யபட்ட இப்பாடசாலை, இலங்கையின் ஐந்தாவது பாடசாலை என்ற பெருமையைப் பெற்றுக் கொள்கின்றது.

கிறிஸ்தவர்களின் வேத நூலான வேதாகமத்தை முதன் முதலாக முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கும் பணியை, தனது முன்னால் ஆசிரியரும், அதிபருமான டாக்டர் பீட்டர் பேர்ஸிவலுடன் இணைந்து நிறைவு செய்த பிரபல சைவ அறிஞர் அறுமுக நாவலர் கூட யாழ் மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார். யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இன்று இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்காம் என்று தம்மை பிரகடனப்படுத்திக் கொள்ளும் அமைப்பின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் ஆகியோரும் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களே.

இலங்கையின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்றான யாழ் மத்திய கல்லூரியின் புகழ்பெற்ற முஸ்லிம் மாணவர்கள் குறித்த தகவல்களை தொகுப்பது, யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு, செல்வாக்கு போன்றவற்றுடன் தொடர்புபட்ட ஒன்றாக அமையும்.

அந்தவகையில்  முஹம்மத் ஜான்ஸின் குறிப்பிடும் யாழ் மத்திய கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக விளையாடிய முஸ்லிம் வீரரின் பெயர் T.M.S மஹமூத் (T.M.S. Mohamooth) என்று பதிவாகியுள்ளது. இவர் உதைப்பந்தாட்ட அணியின் தலைவராக மட்டுமின்றி, யாழ் மத்திய கல்லூரியின் கிரிகட் அணித்தலைவராகவும் விளையாடியுள்ளார். இவர் இவ்விரு பதவிகளையும் 1930 ஆம் ஆண்டில் வகித்துள்ளார். இதிலிருந்து இவர் பல்துறை சார் திறமை மிக்க ஒருவராக இருந்துள்ளார் என்பதனையும் ஊகித்துக் கொள்ள முடிகின்றது.

அது தவிரவும், 1924 ஆம் ஆண்டு யாழ் மத்திய கல்லூரியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று குருளைச் சாரணர்கள், வெளிநாட்டு பயிற்சி ஒன்றில் பங்கு பற்றிமை தொடர்பான பதிவுகளில், P.C. செல்வரட்னம், W.A. விஜயரட்னம் ஆகிய மாணவர்களின் பெயருடன் T.M.Z. Mohamooth என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட T.M.S. Mohamooth என்பவரும் இவரும் ஒருவரா, அல்லது இருவரும் சகோதரர்களா என்பது தெளிவில்லாமல் உள்ளது.

1930 ஆம் ஆண்டில் இறுதி வருட மாணவராக இருந்த ஒருவர், 1924 ஆம் ஆண்டு குருளைச் சாரணராக இருந்திருப்பார் என்பது சத்தியமான ஒன்றே.

பெயரின் முதலெழுத்துக்களில், ஒரு எழுத்தில் வேறுபாடு காணப் படுகின்றது. T.M.S என்பதற்கும், T.M.Z என்பதற்கும் இடையிலான வித்தியாசம், தமிழில் எழுதப்பட்ட முழுப்பெயரில் இருந்து முதலெழுத்துக்கள் ஆங்கிலத்திற்கு எழுதப் பட்டிருந்தால் சாத்தியமான ஒன்றே. (உதாரணம் : சமீர் என்ற பெயர், Sameer அல்லது Zameer என்று எழுதப்படுவது)

எனினும், யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழி மூலமான கல்வி மட்டுமே போதிக்கப்பட்ட அன்றைய காலத்தில், அதிலும் குறிப்பாக ஆங்கிலேயரான, லண்டன் பல்கலைக்கழக தத்துவவியல் கலாநிதி  பேர்ஸி தில்லி காஷ் (1922 - 1932) அதிபராக கடமையாற்றியுள்ள நிலையில், மாணவர்களின் பெயர்கள் தமிழில் எழுதப்பட்டு, அதிலிருந்து ஆங்கில முதலெழுத்துக்கள் பெறப்பட்டிருக்கும் என்று கருதுவது சாத்தியக் குறைவான ஒன்றே.

1930 ஆம் ஆண்டு, இறுதியாண்டில் கல்வி கற்ற ஒருவர், நூறு வயதை அண்மித்த நிலையில் இன்று வரை நம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான சாத்தியங்கள் அரிதே. எனினும் குறித்த விளையாட்டு வீரரின் சந்ததிகள், உறவினர்கள் குறித்து ஆராய்ந்து, அவர்கள் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்வது, யாழ் முஸ்லிம்களின் திறமை குறித்து நாம் இதுவரை அறியாத பல விடயங்களை வெளிக்கொணர உதவலாம்.

வரலாறுகளை ஆராய்வதில் ஆர்வமுள்ள முஹம்மது ஜான்ஸின், இங்கே வழங்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து தனது ஆய்வுகளை மேற்கொண்டால் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும். யாழ் மத்திய கல்லூரி உருவாக்கிய மிகச் சிறந்த விளையாட்டு விரர்களில் ஒருவரும், 1958 ஆம் ஆண்டு டோக்கியோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரம் பாய்தலில் முதலிடத்தைப் பெற்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் இலங்கையின் முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தவரும், ஓய்வுபெற்ற கலிபோர்னியா பல்கலைக் கழக விளையாட்டுத்துறை பேராசிரியருமான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் விளையாட்டுத்துறை சார் வரலாற்று ஆர்வலராகவும் உள்ளதால், மேற்படி வரலாற்றுத்தகவல்களை அறிந்தவராக இருக்கவும் வாய்ப்புள்ளது.

அதே வேளை, யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்து எழுதி வருபவரும், சமூக ஆர்வலருமான அபூ மஸ்லமா ரூமி, யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவராக இருப்பதால், யாழ் மத்திய கல்லூரியுடன் அவருக்கு இருக்கும் பழைய மாணவர் என்ற தொடர்பை பயன்படுத்தி இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். யாழ் முஸ்லிம் மீள் குடியேற்றம் தொடர்பில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் மெளலவி அஷெய்க் அஸ்மின் ஐயூப் (நளீமி) மற்றும் உடகவியலாளர் ரஹீம் ராஜி ஆகியோரும் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலப் பகுதியில் யாழ் மத்திய கல்லூரியின் மாணவர்களாக இருந்துள்ளனர் என அறிய முடிகின்றது. இவர்களின் பங்களிப்புகளும், யாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் எழுதப் படாமல் விடுபட்ட சில பக்கங்களை, வரலாற்றில் இணைத்துக் கொள்வதற்கு உதவக்கூடும்.

யாழ் மத்திய கல்லூரியின் புகழ் பெற்ற முஸ்லிம்கள் வரிசையில், T.M.S. மஹமூத் (T.M.Z. மஹமூத்) தவிர, 1942 ஆம் ஆண்டு சிரேஷ்ட மாணவ தலைவராக பொறுப்பு வகித்த M.A. அஸீஸ், 1973 ஆம்  ஆண்டு கிரிகட் அணித்தலைவராக கடமையாற்றிய M.S.நஸீர் ஆகியோரையும் குறிப்பிடலாம்.

இவற்றிற்கு மேலதிகமாக 1955, 1956 ஆம் ஆண்டுகளில் யாழ் மத்திய கல்லூரி கிரிகட் அணியின் தலைவராகவும், 1955 ஆம் ஆண்டு கல்லூரி கால்பந்தாட்ட அணித் தலைவராகவும் சிங்களவரான R.K.V.பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டிருந்தார். இதே ஆண்டுகளில் இவர் யாழ் மாவட்ட அனைத்துக் கல்லூரி கிரிகட் அணியின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இது, அன்றைய நாட்களில் சிலோன் என அறியப்பட்ட நமது நாட்டில் நிலவிய இன நல்லுறவினை எடுத்துக்காட்டுகின்றது. 


3 comments:

  1. I am also one of the old boys of JCC. I was there from 1969 to 1982. It was a golden period. There was a Muslim Majlis for Muslim students though we were only few. We were allowed to go @ 12 O' clock for Jumma. There were only two Muslim teachers. Mr. M.M.Yoosuf & Mr. Baseer. I never miss our Big match with St. Johns.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்.
    சகோதரர்கள் ஜான்சின்,சுவைர்மீரான் அவர்களுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும் எனும் நூல் ஆசரியர் அப்துல்ரஹீம் B A அவர்களால் எழுதப்பட்டது அதில் 1954 ஆண்டு தாருஸ்ஸலாம் விளையாட்டு கழகம் உருவாக்கப்பட்டு பல உதைப்பந்தாட்ட வீரர்களை உருவாக்கியதாகவும்.இதே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட J .M S A பல விளையாட்டு போட்டிகளை நடத்தியது என்றும்.அதில் ஜனாப்கள் எம்.எம்.மன்சூர்,எம்.ஜி .பசீர் எம் எ .அசீஸ் ஆகியோர் அதிக பங்கெடுத்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்..
    மேலும் சம்சுன் ,டைகர்,சன்ரைஸ்,போன்ற உதைப்பந்தாட்ட லீகுகள் பலமுறை மாவட்ட சம்பியங்கலாகவும்,,யாழ் தெரிவுக்கோஷ்டிக்கு இக்களகங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு தமிழ் நாடு சென்ற குழுவில் மூன்று முஸ்லிம் வீரர்களாக எம்.முனாஸ்,எம்.மன்சூர்,ச.ரமீஸ் ஆகியோர் இடம் பெற்றதாகவும்.குறிப்பிட்டுள்ளார்..ஆனால்
    நீங்கள் குறிப்பிடும் மக்மூத் என்பவர் பற்றி இவ் வரலாறு நூலில் இல்லை..

    ReplyDelete
  3. Very interesting note about Mr. T.M.Z. Mahamooth. Probable reason for missing his name in his book by Raheem may be Mr. Mahamooth was not a Jaffnese. I was at Jaffna Central from 1951 to 1962, during that time there were quite a lot of Muslims students from outside Jaffna.
    As stated by `LEARN ISLAM BETTER’ the College was without any communal hatred. When Premachandra was the captain, there was another Sinhalese played for the cricket team. His name was Silva. Very good fielder and attacking batsman, I forgot his initials. There was a burgher by the name of Van Twest captained the Cricket team. He was the goal keeper for the soccer team and a medal holder in 220 yards run and putt shot. By the way one Pararajasingham, the opening bowler (Nagalingam Ethirweerasingham's brother), left Jaffna Central and went and played for Jaffna College because Premachandra was named captained second time which he felt should be his turn.
    By the way another Jaffna Muslim M.S.Hameed Ali was an opening batsman for Jaffna College Vaddukottai during late sixties.

    ReplyDelete

Powered by Blogger.