முர்ஸி என்ன செய்யபோகிறார்..? - இஹ்வானுல் முஸ்லிமின் தலைமையகத்திற்கு தீவைப்பு
(TN) எகிப்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி மொஹமட் முர்சி தனக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் ஆணை மற்றும் புதிய அரசியல் அமைப்பை நியாயப்படுத்த மக்கள் முன் உரையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் மேலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சி ஊடாக மக்கள் முன் உரையாற்றிய ஜனாதிபதி முர்சி, அண்மைய வன்முறைகளில் கொல்லப்பட்டோர் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியதோடு, எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தார்.
எனினும் இவரது உரையைத் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் மேலும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். கெய்ரோவில் கூடாரமிட்டு தங்கி இருக்கும் எதிர்ப்பாளர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருக்கும் எதிர்ப்பாளர்களும் ஜனாதிபதி உடன் வெளியேற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதன்போது எதிர்வரும் சனிக்கிழமை (இன்று) அரசியல் தலைவர்கள், புரட்சி குழுவினர்கள் மற்றும் நீதித்துறையின் முன்னணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை மறுத்த எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதிக்கு எதிராக மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவியில் இருந்து அகற்றும் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த ‘ஏப்ரல் 6’ முன்னணி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் முர்சிக்கு எதிராக வெள்ளிக்கிழமை (நேற்று) ஆர்ப்பாட்டம் அவருக்கு விடுக்கப்படும் சிகப்பு அட்டை என்று எச்சரித்தனர்.
கடந்த நவம்பர் 22ஆம் திகதி அதிகாரத்தை தன்னிடம் குவித்துக்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணையைத் தொடர்ந்தே அங்கு பதற்றம் அதிகரித்தது. ஜனாதிபதியின் ஆணையின்படி அவரது தீர்மானத்திற்கு நீதித்துறைக்கும் சவால் விடுக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த புதன்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகைக்கு முன் அவருக்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டதில் 7 பேர் கொல்லப் பட்டதோடு 770 பேர் காயமடைந் துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு மணி நேரம் நீடித்த மோதலிலேயே இந்த சேதம் ஏற்பட்டது. இதன்போது ஜனாதிபதி மாளிகையின் முன் சுவருக்கு முன்னாள் கூடாரம் இட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களை அங்கு வந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அடித்து துரத்தியதோடு கூடாரங் களையும் அகற்றினர். இதனையடுத்து அங்கு வந்த எதிர்ப்பாளர்கள் ஆதரவா ளர்களைத் தாக்க ஆரம்பித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிக்கைக்கு முன்னால் இராணுவத்தினர் பலப்படுத்தப் பட்டதோடு இராணுவ டாங்கிகளும் நிலை நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு உரையாற்றிய ஜனாதிபதி முர்சி இந்த வன்முறைகளை மன்னிக்க முடியாது எனவும் பெயர் குறிப்பிடாத மூன்றாம் தரப்பு இந்த வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
“அரசியல் முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண தெரியாததாலேயே இந்த கவலைக் கிடமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. முழுமையான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு நான் அனைத்து தரப்பினரையும் அழைப்பு விடுக்கின்றேன். புரட்சியாளர்கள், சிரேஷ்ட சட்டவல்லுநர்கள் இந்த சனிக் கிழமை பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
சகோரத்துவ அலுவலகம் தீக்கிரை
மொஹமட் முர்சியின் உரையை அடுத்து கெய்ரோவில் இருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையத்தை எதிர்பாளர்கள் முற்றுகை இட்டனர். “ 200 பேரளவான கும்பல் தலைமையகத்திற்குள் சென்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுக்க முயன்ற போதும் ஒரு சிலர் பின்வாயில்வழியாக உள்ளே நுழைந்து தீ மூட்டினர்” என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் மஹ்மூத் கொஸ்லான் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகம் தாக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். அதேபோல் ஏனைய பகுதிகளில் இருக்கும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அலுவலகங்களும் எதிர்பாளர்கள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சர்வஜன வாக்கெடுப்பு
இதனிடையே ஜனாதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள புதிய அரசியல் அமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பையும் பிற்போடுமாறு எதிர்பாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனினும் இந்த சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். “வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்க மக்களுக்கு இடமளியுங்கள்” என ஜனாதிபதி எதிர்ப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமியவாதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட 100 பேர் அடங்கிய அரசியமைப்பு குழுவால் பூர்த்தி செய்யப்பட்ட புதிய அரசியல் அமைப்பில் மிதவாதிகள், கொப்டிக் கிறிஸ்தவர்கள் மற்றும் மதசார்பற்றோர் தொடர்பில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும் எதிர்வரும் சர்வஜன வாக்கெடுப்பில் புதிய அரசியல் அமைப்பு மக்கள் ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எகிப்தின் சக்திவாய்ந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்நிலையில் எகிப்தின் தற்போதைய நிலைவரம் குறித்து அவதானமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வியாழக்கிமை அறிவித்தார். ஜனாதிபதி முர்சி அனைத்து தரப்பும் இணங்கக் கூடியவாறான திட்டத்தை முன்வைத்து எகிப்தை முன்கொண்டு செல்லும் தளத்தை உருவாக்க வேண்டும். என்று வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த வன்முறைகளில் பெயர் குறிப்பிடாத மூன்றாம் தரப்பின் கறுப்பு பணம் மற்றும் ஆயுதங்களை பெற்று ஒரு சிறு குழுவே ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி முர்சி கூறியுள்ளார். முன்னாள் முபாரக் அரசின் உறுப்பினர்கள் முர்சியை கவிழ்க்கும் திட்டத்தை வகுத்துவருவதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இந்த வன்முறைகளை அடுத்து இதுவரை ஜனாதிபதியின் 7 சிரேஷ்ட ஆலோசகர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Post a Comment