சிங்கள் பௌத்த பேரினவாதமும், மியன்மார் பௌத்த தீவிரவாதிகளும்..!
ஆட்சியிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தால் தீனி போடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர தேசியவாத அரசியல் கலாசாரத்திற்கும், மியான்மாரிலுள்ள முஸ்லீம்களை எதிர்க்கும் புத்த பிக்குகளுக்கும் இடையில் சில ஒத்தபண்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு The Myanmar Times என்னும் ஊடகத்தில் Alex Bookbinder* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
மியான்மாரின் Sagaing என்கின்ற இடத்தைச் சேர்ந்த 29 வயதான அஷின் மெற்றாக்காரா என்கின்ற மதகுரு அவரது நாடான மியான்மாரில் இன்று புத்தமதம் எவ்வாறான நிலையில் உள்ளதென்பதை அறிவதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒருவராவார்.
தனது மதம் தொடர்பான தெளிவைக் கொண்டுள்ள மெற்றாக்காரா, அரசியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான தகவல்களையும் அறிந்துவைத்துள்ளார். அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பில் வலைப்பதிவை மேற்கொள்ளும் மெற்றாக்காரா என்கின்ற இளம் மதகுரு, Buddha FM என்கின்ற பெயரில் புத்தசமயத்தை மையக்கருவாகக் கொண்ட வானொலி நிலையம் ஒன்றையும் நடாத்திவருகிறார்.
நான் பல மாதங்களாக மெற்றாக்காராவுடன் தொடர்பைக் கொண்டிருந்த போதிலும், இறுதியாக அவரது மடத்தில் அவரை நேரடியாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில், மியான்மாரின் இன அரசியல் விடயம் தொடர்பாக கலந்துரையாடினோம்.
இந்த உரையாடலானது றோகின்ஜியா 'Rohingya' என்கின்ற பதத்தை நான் குறிப்பிடும் வரை நன்றாக தொடர்ந்து கொண்டிருந்தது. றோகின்ஜியர்கள் மியான்மாரின் சிறுபான்மை மக்களாவர். இவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
நான் இந்தப் பதத்தை குறிப்பிட்ட போது, மியான்மாரின் புத்த மதத்தவர்களை விழுங்குகின்ற ஒரு புற்றுநோயாகவே இஸ்லாம் காணப்படுவதாக மெற்றாக்காரா வலியுறுத்திக் கூறினார். அத்துடன் றோகின்ஜிய இனத்தவர்கள் மியான்மாரின் சொந்த மக்களல்ல எனவும், இவர்கள் தாமாகவே மியான்மாரை ஆக்கிரமித்து வாழ்வதாகவும் அந்த இளம் புத்த மதகுரு என்னிடம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
மெற்றாக்காரா அறிவார்ந்த விடயங்களைக் கூறியதைப் போல் தெரிந்தாலும், இவரது குறிப்புக்கள் மியான்மார் நாட்டில் உள்ள இனங்களுக்கிடையிலான உறவு நிலை தொடர்பாகவும், வெறுக்கப்படும் முஸ்லீம் மக்கள் எவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலும் வேதனை தரக்கூடிய பிரதிபலிப்பை எனக்கு ஏற்படுத்தியது.
சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுதல் மியான்மாரில் மட்டும் நடைபெறவில்லை. சிறிலங்காவில் 2009ன் ஆரம்பத்தில் அந்நாட்டு அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடாத்தியிருந்தது. மியான்மாரின் அரசியல் மக்கள் உறவானது சிறிலங்காவை விட வேறுபட்டதாகும். சிறிலங்காவில் ஆட்சியிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தால் தீனி போடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர தேசியவாத அரசியல் கலாசாரத்திற்கும், மியான்மாரிலுள்ள முஸ்லீம்களை எதிர்க்கும் புத்த பிக்குகளுக்கும் இடையில் சில ஒத்தபண்புகள் காணப்படுகின்றன.
சிறிலங்கா மற்றும் மியான்மாருக்கு இடையிலான கலாசார பரம்பல் பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகின்றது. அண்மையில் மியான்மாரில் எழுச்சி பெற்றுள்ள தீவிர தேசியவாதிகளான முஸ்லீம் எதிர்ப்பு புத்த பிக்குகள் சிறிலாங்கவுடனான நீண்ட கால தொடர்பின் விளைவால் உருவாகியவர்கள் எனக் கூறலாம்.
மியான்மாரைச் சேர்ந்த 300 வரையான புத்த பிக்குகள் சிறிலங்காவில் தங்கியுள்ளனர். இவ்வாறு மியான்மாரை விட்டு வெளியேறிய இவர்கள் தற்போது சிறிலங்காவில் வாழ்வதானது புதிதல்ல. 1800களில் சிறிலங்காவில் கொலனித்துவ ஆதிக்கம் காலூன்றிய போது புத்தமதம் சரிவடையத் தொடங்கியது. இதனை சீர்செய்வதற்காகவும், மகாஜான பௌத்தம் செல்வாக்குச் செலுத்திய காலப்பகுதியிலும் மியான்மாரின் புத்த பிக்குகள் சிறிலங்காவில் அதிகம் பிரசன்னமாகியிருந்தனர். 19ம் நூற்றாண்டில், மியான்மாரில் 'புனித' தேரவாத பௌத்த பாடசாலைகளை மீளநிறுவுவதை நோக்காகக் கொண்டு சிறிலங்காவைச் சேர்ந்த புத்த மடாதிபதிகள் மியான்மாருக்கு சென்றிருந்தனர்.
மியான்மாரைப் போலவே சிறிலங்காவின் புத்தமதமும் கொலனித்துவ ஆட்சியை எதிர்த்து குறிப்பிடத்தக்க சில எதிர்ப்புக்களை மேற்கொண்டிருந்தது. கொலனித்துவ ஆட்சியை எதிர்த்து 1898ல் இளையோர்களின் பௌத்த சங்கம் [Young Men’s Buddhist Association - YMBA] நிறுவப்பட்டது. கத்தோலிக்கர்களின் ஆதிக்கத்தையும், கொலனித்துவ ஆட்சிக் கட்டமைப்பையும் எதிர்ப்பதையும் நோக்காக் கொண்டு இச்சங்கம் அமைக்கப்பட்டது. இதேபோன்று மியான்மாரைச் சேர்ந்த பௌத்தர்களும் 1906ல் யங்கோனில் தமக்கான இளையோர்களுக்கான பௌத்த சங்கத்தின் கிளையை உருவாக்கினர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ, தேசிய பாதுகாப்பு நிகழ்சி நிரலை நாட்டில் உள்ள இன மற்றும் மதத்தின் புனிதத்தன்மையே மேலும் பலப்படுத்துவதாக சிறிலங்கா அரசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணும் தீவிர புத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர்கள் 2009ல் சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து, சிறிலங்காவின் மக்கள் கட்டமைப்புக்கள் மற்றும் மக்களின் உரிமைகள் போன்றவற்றை நிர்மூலமாக்குவதற்கான ராஜபக்சவின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மீதான கவனத்தை வேறுபக்கம் திசைதிருப்பியுள்ளனர்.
மியான்மாரின் பௌத்த பீடங்களும் அந்நாட்டின் அரசியலில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை நாட்டின் அரசியலின் ஆக்கசக்திகளாவும், அழிப்பு சக்திகளாகவும் விளங்குகின்றன. மியான்மாரின் புத்த பிக்குகள் எப்போதும் முறைசார் அரசியல் கட்டமைப்புகளுக்கு அப்பால் செயற்படுகின்றனர்.
எதுஎவ்வாறிருப்பினும் சிறிலங்காவில் 2004ல் உருவாக்கப்பட்ட தேசிய மரபுக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய புத்த பிக்குகளைக் கொண்ட கட்சியாகும். இதன் பிரதிநிதிகள் சிறிலங்கா நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதுடன் 2007ல் ஆளும் கூட்டணியில் இணைந்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதற்கான ராஜபக்சவின் முயற்சிகளுக்கு இக்கட்சியில் அங்கம் வகிக்கும் புத்த பிக்குகள் தூபம் போட்டனர். அத்துடன் தமிழ் மக்கள் வாழும் நாட்டின் வடக்கு கிழக்கில் சுயாட்சி அதிகாரத்தை வழங்குவதில் சில வரையறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான கோரிக்கையையும் இவர்கள் முன்வைத்திருந்தனர்.
சிறிலங்காவில் உருவாக்கப்பட்டது போன்று புத்த பிக்குகளுக்கான ஜாதிக ஹெல உறுமயக் கட்சி போன்று அரசியற் கட்சி ஒன்றை உருவாக்குவதை மியான்மாரின் புத்த பிக்குகுள் கணிசமானளவு எதிர்த்த போதும், தற்போதும் சிறிலங்காவிலுள்ள புத்த பிக்குகளின் ஆலோசனையின் பேரில் சில மியான்மார் பிக்குகள் தாமும் அரசியற் கட்சி ஒன்றை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென விரும்புகின்றனர்.
சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதமான முஸ்லீம்கள் இந்நாட்டில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களின் தாக்குதல்களுக்கும் உட்பட்டனர். அத்துடன் நாட்டில் யுத்தம் நிறைவுற்ற போதிலும் முஸ்லீம் மக்கள் மீது சிறிலங்காவின் புத்த பிக்குகளும் அவர்களது அடியாட்களும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இஸ்லாமியர்களின் மத அடையாளங்களை அழிப்பதிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
கடந்த செப்ரெம்பரில் சிறிலங்காவின் புராதன தலைநகரமான அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித பள்ளிவாசல் ஒன்றை புத்த பிக்குகளும் அவர்களது ஆதரவாளர்களும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோன்று இவ்வாண்டு ஏப்ரலில் 2000 வரையான காடையர்களுடன் சில புத்த பிக்குகள் தம்புள்ள புனித பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.
சிறிலங்காவானது பௌத்த தேசம் என இந்நாட்டின் பிரதான ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பொய்ப் பரப்புரையை மேற்கொண்டன. மியான்மாரின் சிறுபான்மை முஸ்லீம் இனமான மியான்மாரின் Rakhine பிரதேசத்தில் வாழும் நோகின்ஜியர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் போல சிறிலங்காவின் சிறுபான்மை முஸ்லீம் மக்களும் துன்பங்களை சந்திக்கின்றனர்.
சிறிலங்காவின் அரசியல் கலாசாரமானது அடிப்படையில் அங்கு தொடரப்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக மாற்றமடைந்துள்ளது. இங்குள்ள மதம் மற்றும் இன அடையாளங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. யுத்தத்தின் முன்னர் கூட இவ்வாறான நிலையே காணப்பட்டது. இருந்தும் இராணுவத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட யுத்தமானது இந்த நிலையை மேலும் மாற்றியுள்ளது. இந்த நிலை மியான்மாரில் பரவியுள்ளதானது கெட்டவாய்ப்பாகும்.
றோகின்ஜியர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் போது மியான்மாரின் அதிபர் யு தெய்ன் செய்ன் அதனை பொருட்படுத்தமாட்டார். நவம்பர் 19ல் அமெரிக்க அதிபர் மியான்மாருக்குச் செல்வதற்கு முதல் யு தெய்ன் செய்னால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் றோகின்ஜியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்ப்பதில் தனது அரசாங்கம் விருப்பங்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா அதிபர் சீனாவுடனான உறவைப் பேணுவதில் அதிக ஆர்வங்காட்டிய அதேவேளையில், மேற்குலகுடன் நல்லுறவைப் பேணுவதில் மியான்மார் அதிபரும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.
மியான்மார் அரசாங்கம் தனது நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதில் தீவிர அக்கறை எடுப்பதுடன், நாட்டில் நிலையான உறுதியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மியான்மாரைப் பார்வையிடச் சென்றிருந்த அமெரிக்க அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
*Alex Bookbinder is a researcher and political analyst based in Southeast Asia.
Post a Comment